யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி, தெற்கு யுக்ரேனில் ஒரு நபரை டிரோன் கண்காணித்து பின்தொடர்ந்து செல்லும் காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
பொதுமக்களை குறிவைத்து ரஷ்யா நடத்தியதாக அவர் கூறும் “மனித வேட்டை” போன்ற தாக்குதலுக்கு ஓர் எடுத்துக்காட்டு இது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அந்தக் காணொளியில், கெர்சன் பிராந்தியத்தில் உள்ள நகரச் சாலையில் தெருவோர வியாபாரி ஒருவரை டிரோன் துரத்திச் செல்வது பதிவாகியுள்ளது.
மேலே வட்டமிட்டுப் பறந்துகொண்டிருந்த டிரோனிடமிருந்து அந்த நபர் விலகிச் செல்ல முயல்கிறார். பின்னர், வெள்ளை நிற வேன் ஒன்றைச் சுற்றி அவர் ஓடும்போதும் டிரோன் அவரைத் தொடர்ந்து விரட்டுகிறது. இறுதியில், டிரோன் அவரை நோக்கிப் பாய்ந்து, அவர் மீது மோதி வெடிக்கிறது.
இந்தத் தாக்குதலில் அந்த நபர் உயிர் தப்பியிருந்தாலும், உடலில் பல இடங்களில் வெடிகுண்டு சிதறல்கள் குத்திய காயங்கள், மூளை அதிர்ச்சி மற்றும் மன உளைச்சலுக்கு ஆளானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
யுக்ரேனின் முன்களப் பகுதிகளில் வாழும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்காக, பொதுமக்களை குறிவைத்து தொலைவிலிருந்து இயக்கப்படும் டிரோன்களைப் பயன்படுத்தும் தாக்குதல்கள், சில நேரங்களில் “மனித வேட்டை” என்று அழைக்கப்படுகின்றன.
“இதை உலகம் பார்க்க வேண்டும்,” என்று ஸெலன்ஸ்கி தனது டெலிகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.
“ரஷ்யா எந்த அளவுக்கு கட்டுப்பாட்டை இழந்துள்ளது என்பதற்கான ஒவ்வொரு ஆதாரத்தையும், ரஷ்ய வீரர்கள் மக்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் ரசிக்கிறார்கள் என்பதற்கான ஒவ்வொரு உண்மையையும் உலகம் காண வேண்டும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.



