சுற்றுலா, மருத்துவ சிகிச்சை அல்லது பிஸ்னஸ் ரீதியாக அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ள இந்தியர்கள் இப்போது குழப்பத்தில் இருக்கிறார்கள். அதாவது இனி அமெரிக்க சுற்றுலா விசாவுக்கு 20,000 டாலர் (அதாவது சுமார் ரூ.17.5 லட்சம்) வரை டெபாசிட் செலுத்த வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பரவும் தகவலால் குழப்பத்தில் இருக்கிறார்கள். இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!
அதன்படி டிரம்ப் அரசு கடந்த ஆண்டு சோதனை அடிப்படையில் விசா பாண்ட் திட்டத்தை கொண்டு வந்தது. அது இன்று ஆகஸ்ட் 3ம் தேதி முதல் நிரந்தரமாக அமல்படுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அதன்படி குறிப்பிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் B-1 (பிஸ்னஸ் விசா) மற்றும் B-2 (சுற்றுலா விசா) கோரி விண்ணப்பிப்போர் 10,000 முதல் அதிகபட்சமாக 20,000 டாலர் வரை டெபாசிட் செலுத்த வேண்டும். இந்த தொகையை நிர்ணயம் செய்யும் அதிகாரம் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
விசா பாண்ட் என்றால் என்ன? விசா பாண்ட் என்பது விசா கட்டணம் அல்ல. இது ஒரு பாதுகாப்பு வைப்பு ஆகும். குறிப்பிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த பாண்ட் செலுத்த வேண்டும். அவர்கள் விசாவில் அனுமதிக்கப்பட்ட காலத்துக்குள் மீண்டும் தாய்நாட்டிற்கு திரும்பினால், அந்தத் தொகை முழுமையாக திருப்பி வழங்கப்படும். ஆனால், விசா விதிமுறைகளை மீறி அமெரிக்காவில் தங்கியிருந்தாலோ அல்லது காலாவதியான பிறகும் வெளியேறாமல் இருந்தாலோ, அந்த டெபாசிட் தொகை அமெரிக்க அரசுக்கு போய்விடும்!
இந்த திட்டம் முதலில் 2025ம் ஆண்டு மலாவி மற்றும் சாம்பியா ஆகிய இரண்டு நாடுகளுக்காக மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு தற்போது 50 நாடுகளுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவை. அதேநேரம் சில ஆசிய நாடுகளும் இந்த லிஸ்டில் உள்ளன.
இந்த லிஸ்டில் இப்போது இந்தியா இருக்கிறதா என்பதே பலருக்கும் இருக்கும் கேள்வி.! “இல்லை” என்பதே இதற்கான பதிலாக இருக்கிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள 50 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை. எனவே இந்தியர்கள் அமெரிக்க சுற்றுலா அல்லது
பிஸ்னஸ் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது 20,000 டாலர் டெபாசிட் செலுத்த வேண்டிய அவசியம் தற்போது இல்லை. இந்தியர்கள் வழக்கம்போல விசா விண்ணப்ப கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். பிறகு நேர்முகத் தேர்வில் ஓகே ஆனால் விசா கிடைக்கும். அதாவது தற்போதுள்ள நடைமுறையின்படியே விசா பெற முடியும். புதிய விசா பாண்ட் விதிமுறையால் இந்தியர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை.
சுற்றுலா அல்லது வணிக விசாவில் வரும் வெளிநாட்டினர் விசா காலம் முடிந்த பிறகும் அமெரிக்காவை விட்டு வெளியேறாமல் தங்கிவிடுகிறார்களாம். அதை தடுக்கவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பெரிய அளவிலான டெபாசிட் வசூலிப்பது, விசா விதிமுறைகளை மீறுவதை தடுக்கும் என்று அமெரிக்கா கருதுகிறது. இருப்பினும், இந்த விசா நடைமுறைக்கு எதிராக விமர்சனங்களும் எழுந்துள்ளன. குறிப்பாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு இது கூடுதல் சுமையாக மாறும் என்றும் உண்மையான சுற்றுலா பயணிகள் பலர் இதில் பாதிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இப்போது வரை விசா பாண்ட் லிஸ்டில் இந்தியா இல்லை என்றாலும் வரும் காலத்திலும் இதே நிலை தொடரும் என சொல்லிவிட முடியாது. எதிர்காலத்தில் எந்தெந்த நாடுகளுக்கு இந்த திட்டத்தை விரிவுபடுத்துவது என்பது அமெரிக்க வெளியுறவுத்துறையின் முடிவாகும். அதாவது இந்த லிஸ்ட்டை மாற்றும் அதிகாரம் அமெரிக்காவுக்கே இருக்கிறது. இந்த லிஸ்ட்டில் இந்தியாவை அமெரிக்கா சேர்த்தால் இந்தியர்களும் 17.5 லட்சம் வரை செலுத்த வேண்டும். ஆனால், இப்போது எந்தவொரு டெபாசிட்டும் கட்ட தேவையில்லை!



