ஈரான் உடனான போரில் மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அந்நாட்டின் மீது மீண்டுமொரு பிரம்மாண்ட ராணுவத் தாக்குதலைத் தொடங்குவதா அல்லது போரை முடிவுக்குக் கொண்டுவருவதா என்பது குறித்து விரைவில் “பெரிய முடிவொன்றை” எடுக்கவுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக அறிவித்துள்ளார். ‘ஆக்சியோஸ்’ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய டிரம்ப், ஈரானிய ஆட்சியதிகாரத்தை முற்றிலும் ஒழித்துக் கட்டுவதா இல்லையா என்ற கேள்விக்கு மிக விரைவில் விடை கிடைக்கும்,
அடுத்த வாரம் நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தின் போது, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஓமன் ஆகிய 6 வளைகுடா நாடுகளின் தலைவர்களை டிரம்ப் நேரில் சந்தித்துப் பேசவுள்ளார். இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகே போரின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து இறுதி முடிவு எட்டப்படும் எனக் குறிப்பிட்டுள்ள டிரம்ப், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் வளைகுடா கூட்டாளி நாடுகளின் விருப்பங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரானிய கடற்படையின் தடைகளை மீறி எண்ணெய் விநியோகத்தை மீட்டெடுப்பதில் அமெரிக்கப் படைகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்காவின் பொருளாதாரக் தடைகள் மற்றும் கடற்படை முற்றுகை ஈரானை முடக்கியுள்ளதாகவும், ஈரான் தரப்பிலிருந்து நேரடியாகத் தொடர்பு கொண்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஆர்வம் காட்டி வருவதாகவும் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும், முழுமையான அமைதி ஒப்பந்தம் எட்டப்படாத பட்சத்தில், ஆண்டின் இறுதி வரை அமெரிக்கப் படைகள் முழு போர்க்காரிய நிலமையிலேயே நீடிக்கும் எனப் பாதுகாப்புத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் வளைகுடா நாடுகளின் கோரிக்கையை ஏற்று தற்காலிகமாக ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திருந்த அமெரிக்கா, தற்போது ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் மற்றும் பிராந்திய பதற்றங்கள் காரணமாக மீண்டும் தீவிர தாக்குதலைத் தொடங்க தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. அமெரிக்காவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு முன்னதாகவோ அல்லது பின்னரோ டிரம்பின் இந்த முக்கிய முடிவு வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், ஈரான் போர்ச் சூழல் உலக நாடுகளிடையே பெரும் உற்றுநோக்கலாக மாறியுள்ளது.



