தென்னாப்பிரிக்காவின் வணிகத் தலைநகரான ஜோகன்னஸ்பர்க்கின் கிழக்கு பகுதியிலுள்ள எகுர்ஹுலேனி நகராட்சிப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 9 பெண்களின் உடல்கள் அடுத்தடுத்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 20 முதல் 38 வயதுக்குட்பட்ட இந்தப் பெண்கள் அனைவரும் அரை நிர்வாண நிலையிலும், பலத்த காயங்களுடனும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், அங்கு நடமாடும் தொடர் கொலையாளி அல்லது கொலையாளிகள் குழுவின் கொடூரச் செயலாக இது இருக்கலாம் என மக்கள் பீதியடைந்துள்ளனர்.
கெம்ப்டன் பார்க், போமோனா, கிளேவில் மற்றும் டான் பார்க் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீசப்பட்டிருந்த இந்தச் சடலங்களில், 5 பெண்களின் உடல்கள் கடந்த சில நாட்களுக்குள் மட்டுமே அடுத்தடுத்து மீட்கப்பட்டது நிலைமையின் தீவிரத்தை உணர்த்தியுள்ளது. 38 வயதான எலிசபெத் என்ற பெண் வழக்கம் போல நடைப்பயிற்சி சென்றபோது மாயமாகி சடலமாக மீட்கப்பட்ட சம்பவமும், 20 வயது இளம் பெண் ஒருவரின் உடலும் கண்டெடுக்கப்பட்டது அங்குள்ள பெண்களிடையே கடுமையான அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
இக்கொடூரச் சம்பவங்களைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ரமபோசா இந்த விவகாரத்திற்கு உயர்மட்ட முன்னுரிமை அளித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். கொலையாளியைக் கண்டுபிடிக்க உதவும் தகவல்களை வழங்குபவர்களுக்கு 4 லட்சம் தென்னாப்பிரிக்க ராண்ட் (சுமார் 25,000 டாலர்) சிறப்பு வெகுமதி வழங்கப்படும் என அந்நாட்டு காவல் துறை அறிவித்துள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காவல் துறையினர் தீவிரச் சோதனைச் சாவடிகளை அமைத்து நகரத்தைக் கண்காணித்து வருகின்றனர்.
கண்டெடுக்கப்பட்ட 9 சடலங்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் மற்றும் தடயவியல் சான்றுகளைச் சேகரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், அனைத்துக் கொலைகளுக்கும் பின்னால் ஒரே நபரின் சதி உள்ளதா அல்லது பல குற்றவாளிகள் இணைந்து இச்செயலில் ஈடுபட்டனரா என ஆய்வு செய்து வருகின்றனர். நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், பெண்கள் தனியாக வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை ஜோகன்னஸ்பர்க் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



