ஒரே நேரத்தில் மின்வாரியத்தில் 700 பேருக்கு பதவி உயர்வு.. ஒரு பைசா லஞ்சம் இல்லை..

 

தமிழ்நாடு மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த உதவி பொறியாளர்களுக்கான பதவி உயர்வு கோரிக்கைகளுக்கு தமிழக அரசு தீர்வு கண்டுள்ளது. முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்களின் கண்காணிப்பின்படி, 700 உதவி பொறியாளர்களுக்கு உதவி செயல் பொறியாளர்களாகப் பதவி உயர்வு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மூப்பு மற்றும் தகுதி அடிப்படையில் வெளிப்படையான முறையில் ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய அளவில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மின்வாரியத்தின் களப்பணிகள் மேலும் வலுப்பெறும். வரவிருக்கும் பருவ மழைக்காலங்களில் மின் விநியோகம், பராமரிப்பு, புதிய மின் இணைப்புகள் மற்றும் துணை மின் நிலையங்களின் பணிகள் கூடுதல் திறனுடன் விரைவாக மேற்கொள்ளப்படும்.

பொறியாளர்கள் தமிழ்நாட்டின் மின்கட்டமைப்பை மேம்படுத்தி, பொதுமக்களுக்குத் தடையற்ற தரமான சேவையை வழங்குவதில் முக்கியப் பங்காற்றுவார்கள். ஊழியர்களின் நலனுக்கும் முன்னேற்றத்திற்கும் அரசு முன்னுரிமை அளித்து வருவதால், இந்த நடவடிக்கை பொறியாளர்களின் தொழில் முன்னேற்றத்தை உறுதி செய்வதோடு அவர்களின் மன உறுதியையும் பணித் திறனையும் உயர்த்தும் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும்.