எப்ஸ்டீன் கூட்டாளி விஷம் வைத்துக் கொல்லப்பட்டாரா?

 

சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஜெஃப்ரி எப்ஸ்டீனின் பாலியல் கடத்தல் வழக்குடன் தொடர்புடைய முக்கியப் நபர்கள் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், அவர்கள் நச்சுப் பொருள் கொடுத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற புதிய அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. எப்ஸ்டீனின் நெருங்கிய கூட்டாளிகளாகவும், சிறுமிகளைப் பாலியல் தொழிலுக்காகக் கடத்தி வந்த முக்கிய இடைத்தரகர்களாகவும் கருதப்பட்டவர்களின் மரணங்களின் பின்னணியில் சதித்திட்டம் உள்ளதா என்பது குறித்து முறையான கொலை வழக்கைப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனப் புலனாய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2019-இல் நியூயார்க் சிறையில் எப்ஸ்டீன் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்குப் பெண்களைத் திரட்டித் தந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பிரெஞ்சு மாடலிங் முகவர் ழான்-லூக் புரூனல் பாரிஸ் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவ்விரு மரணங்களும் தற்கொலை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் இருவருமே சக்திவாய்ந்த பல சர்வதேசப் புள்ளிகள் மற்றும் தொழிலதிபர்கள் பற்றிய ரகசியங்களை அறிந்திருந்ததால், அவர்கள் விஷம் வைத்தோ அல்லது மூச்சுத் திணறடித்தோ படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சுயாதீனப் புலனாய்வாளர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.

அமெரிக்கச் சிறையில் 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து வரும் கில்லேன் மேக்ஸ்வெல்லின் தந்தையான ஊடகப் அதிபர் ராபர்ட் மேக்ஸ்வெல் 1991-இல் சொகுசுக் கப்பலில் இருந்து விழுந்து மர்மமான முறையில் இறந்தது முதல், எப்ஸ்டீன் நெட்வொர்க்கில் உள்ள முக்கியச் சாட்சிகள் அடுத்தடுத்து உயிரிழப்பது வரை ஒரே மாதிரியான பின்னணி இருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. சிறை கண்காணிப்புக் கேமராக்கள் இயங்காதது, பாதுகாப்புப் பணியாளர்கள் அலட்சியமாக இருந்தது போன்ற பல முரண்பாடுகள் தற்கொலை என்ற கூற்றைப் பொய்யாக்கும் வகையில் அமைந்துள்ளதாக வழக்குரைஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.Crime & Justice

தற்போது இந்த விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் உடற்கூறாய்வு மாதிரிகளை மீண்டும் நச்சியல்  பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும், இதில் தொடர்புடைய உயர்மட்ட அரசியல் புள்ளிகளின் பெயர்கள் வெளியாவதைத் தடுக்கவே திட்டமிட்டுக் கொலைகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்துச் சர்வதேச நீதிமன்ற மேற்பார்வையில் புலனாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.