காசா நகரின் தல் அல்-ஹவா (Tal al-Hawa) பகுதியில், போரினால் சேதமடைந்த 6 மாடிகளைக் கொண்ட குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் 5 சிறுவர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாதுகாப்பற்ற கட்டிடம் என எச்சரிக்கப்பட்ட போதிலும், உறைவிட வசதிகள் இல்லாத காரணத்தால் சுமார் 10 குடும்பங்களைச் சேர்ந்த ஏராளமான இடம்பெயர்ந்த மக்கள் இக்கட்டிடத்தில் தங்கியிருந்த வேளையிலேயே இத்துயரம் நிகழ்ந்துள்ளது.
இஸ்ரேலின் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாகத் தேவையான கனரக இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் இல்லாததால், சிவில் பாதுகாப்பு மீட்புக் குழுவினர் ஆரம்பத்தில் வெறும் கைகளாலேயே இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர், ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிலையங்கள் மற்றும் எகிப்திய நிவாரணப் பணியாளர்களிடமிருந்து சில இயந்திரங்களைப் பெற்று மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மக்கள் தூங்கிக் கொண்டிருந்த வேளையிலேயே இக்கட்டிடம் முற்றாக இடிந்து விழுந்துள்ளது. மேலும் 70 முதல் 100 பேர் வரை இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
காசா முழுவதும் போரினால் சேதமடைந்த சுமார் 400 கட்டிடங்கள் உடனடியாக இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாகவும், குறிப்பாகக் குளிர் காலம் நெருங்குவதால் இது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குளிர்கால மழை தொடங்குவதற்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான கூடாரங்கள், தார்பாய்கள் மற்றும் மீட்புப் பணிகளுக்கான கனரக இயந்திரங்களைக் கொண்டுவருவதற்கு இஸ்ரேலிய அதிகாரிகள் உடனடியாக அனுமதியளிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண ஒருங்கிணைப்பாளர் ரமீஸ் அலிக்பரோவ் (Ramiz Alakbarov) கோரிக்கை விடுத்துள்ளார்.



