ஷிரந்தி ராஜபக்‌ஷ தப்பிச் செல்லவில்லை , சிகிச்சைக்காகவே சிங்கப்பூர் சென்றுள்ளார் –

 

ஷிரந்தி ராஜபக்‌ஷ நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை. சிகிச்சைக்காகவே சிங்கப்பூர் நாட்டுக்கு சென்றுள்ளார்.எதிர்வரும் 24 ஆம் திகதி நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுவார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஊடக பேச்சாளர் மனோஜ் கமகே தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்‌ஷ நாட்டை விட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்‌ஷ கடந்த வாரம் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

மேலதிக சிகிச்சைக்காகவே அவர் சிங்கப்பூர் நாட்டுக்கு சென்றுள்ளார். அரசாங்கத்துக்கு சார்பாக செயற்படும் ஒருசில ஊடகங்கள் இதனை திரிபுப்படுத்தி தவறாக செய்தி வெளியிட்டுள்ளன.

நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கான அவசியம் ஷிரந்தி ராஜபக்‌ஷவுக்கு கிடையாது. நிதி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அவர் எதிர்வரும் 24 ஆம் திகதி முன்னிலையாகுவார்.

அதிகாரம் நிலையற்றது என்பதை ஜனாதிபதி நினைவில் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் ஏதம் நடக்கலாம்.ஆகவே போலியான கருத்துக்களை சமூகமயப்படுத்தி உண்மையை மறைக்க முடியாது.சகல சவால்களையும் நீதித்துறை ஊடாக எதிர்கொள்வோம் என்றார்.