உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: நிரூபிக்கப்பட்ட குற்றத்திற்கு ஏற்பவே தண்டனை அமைய வேண்டும் – அலி சப்ரி!

 

உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத் தாக்குதல்களின் பாரதூரத்தன்மையானது குற்றவியல் நீதியின் அடிப்படை விதிகளை அடிப்படை விதிகளை நீர்த்துப்போகச் செய்துவிடக்கூடாது. இவ்விவகாரத்தில் பொறுப்புக்கூறல் இன்றியமையாதது. ஆனால் தண்டனை என்பது நிரூபிக்கப்பட்ட குற்றத்துக்கு ஏற்புடையதாகவே இருக்கவேண்டும். மிகுந்த உணர்ச்சிபூர்வமான சூழ்நிலையைக்கொண்ட வழக்குகளில் தான் நீதிமன்றங்கள் அச்சமோ, தயக்கமோ இன்றி குற்றவியல் சட்ட விதிகளின்படி செயற்படுவதில் உறுதியாக இருக்கவேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத் தாக்குதல் குறித்த உளவுத்தகவல் கிடைத்திருந்தும் அதனைத் தடுக்கத் தவறியதன் ஊடாக 268 பேரின் கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டுக்காக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து அலி சப்ரி அவரது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:

உண்மையில் உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு முன்பே எச்சரிக்கைகள் கிடைக்கப்பெற்றிருந்தன. இந்தப் பெருந்துயரம் உளவுத்துறை தகவல்கள் இல்லாததன் காரணமாக நேரவில்லை. மாறாக தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குப் பொறுப்பானவர்கள் உரிய முறையில் செயற்படத் தவறியமையினாலேயே இச்சம்பவம் நிகழ்ந்தது. இந்தக் கட்டமைப்பு ரீதியான சீர்குலைவினால் நூற்றுக்கணக்கான அப்பாவி உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. எனவே இவ்வாறானதொரு பேரழிவு மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிசெய்வதற்கு, ஏற்கனவே நிகழ்ந்த தவறை ஒப்புக்கொண்டேயாக வேண்டும்.

இருப்பினும் குற்றவியல் பொறுப்பை எப்போதும் நிர்வாக மற்றும் அரசியல் ரீதியான பொறுப்புக்களிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கவேண்டும். அதற்கமைய மரணதண்டனை விதிக்கப்பட்டிருப்பதை நான் மரியாதையுடன் மறுக்கிறேன். எனது கரிசனை பொறுப்புக்கூறலின் தேவை பற்றியது அல்ல. மாறாக குற்றவியல் பொறுப்பு என்பது எந்தச் சட்டக்கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்திருக்கிறது என்பதைப் பற்றியதே ஆகும்.

ஒரு குற்றத்தில் அதுசார்ந்த நோக்கம் இல்லாத வரை, ஒரு செயல் மாத்திரம் ஒருவரைக் குற்றவாளியாக்காது என்பதே குற்றவியல் சட்டத்தின் அடிப்படை விதியாகும். அதற்கமைய அரசதரப்பானது தடைசெய்யப்பட்ட செயலை மாத்திரமன்றி, சட்டத்தின் பிரகாரம் குறிப்பிடப்பட்டுள்ள குற்ற மனநிலையையும் நிரூபிக்கவேண்டும்.

அலட்சியம் எவ்வாறு தீவிரமானதாக இருந்தாலும், கடமை தவறுதல் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய எத்தகைய விளைவுகளைக் கொண்டிருந்தாலும், அவை பொதுவாக கொலை அல்லது கொலை முயற்சி போன்ற குற்றங்களுக்கு அவசியமான மனநிலைக் கூறாக அமையாது. ஒரு செயலைச் செய்யத் தவறுவது எவ்வாறு பெரிய குற்றமாக இருந்தாலும், அது கொலை நோக்கத்துக்கோ அல்லது கொலைக்குத் துணைபுரியும் நோக்கத்துக்கோ சமனாகாது.

உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத் தாக்குதல்களின் பாரதூரத்தன்மையானது குற்றவியல் நீதியின் அடிப்படை விதிகளை அடிப்படை விதிகளை நீர்த்துப்போகச் செய்துவிடக்கூடாது. இவ்விவகாரத்தில் பொறுப்புக்கூறல் இன்றியமையாதது. ஆனால் தண்டனை என்பது நிரூபிக்கப்பட்ட குற்றத்துக்கு ஏற்புடையதாகவே இருக்கவேண்டும்.

விளைவுகள் மிகத்துயரமானவை என்பதற்காக மாத்திரம் சட்டம் தனிநபர்களைத் தண்டிப்பதில்லை. மாறாக, தேவையான குற்ற மனநிலை உள்ளடங்கலாக குற்றத்தின் ஒவ்வொரு அத்தியாவசியக் கூறும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படும்போதே சட்டம் ஒருவரைத் தண்டிக்கும்.

கண்டறியப்பட்ட தவறு அலட்சியம் அல்லது கடமை தவறுதல் என்ற அளவில் இருக்குமானால், அதற்கான உச்சபட்ச தண்டனையை விதிப்பதற்கான சட்டபூர்வ அடிப்படை மிகத்துல்லியமான ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும். அலட்சியத்துக்காக மரணதண்டனை விதிக்கப்படுவதில்லை.

மாறாக மிக உயர்ந்த அளவிலான குற்றப் பொறுப்பைக் கொண்ட குற்றங்களுக்கே மரணதண்டனை விதிக்கப்படுகிறது. அவ்வாறிருக்கையில் கொலைக்கான குற்ற மனநிலை நிரூபிக்கப்படவில்லை எனில், மரணதண்டனைக்கான நியாயம் என்பது சட்டத்தின் பிரகாரம் ஒரு ஆழமான கேள்வியாக மாறுகிறது.

நீதி என்பது பொறுப்புக்கூறலைக் கோருகிறது. அதேவேளை அது குற்றவியல் சட்டத்தின் அடிப்படை விதிகளுக்கு ஏற்புடையவாறு செயற்படுவதையும் கோருகிறது. எனவே மிகுந்த உணர்ச்சிபூர்வமான சூழ்நிலையைக்கொண்ட வழக்குகளில் தான் நீதிமன்றங்கள் அச்சமோ, தயக்கமோ இன்றி அந்த விதிகளின்படி செயற்படுவதில் உறுதியாக இருக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணி முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் –

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறிய அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ள போதிலும், இத்தாக்குதலைத் திட்டமிட்டவர்கள், நிதியுதவி செய்தவர்கள் மற்றும் இதன் பின்னணியில் இருந்த உண்மையான குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இத்தாக்குதலால் இரு பாராளுமன்றத் தேர்தல்களில் வாக்கு வங்கியை இழந்து அரசியல் ரீதியாகத் தங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகளில் இத்தாக்குதலுக்கு ஜே.வி.பி கட்சியுடன் தொடர்புடைய வேட்பாளர் ஒருவர் நிதியுதவி செய்துள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்பினும், தாக்குதலுக்கு நிதியுதவி செய்த இப்ராஹிம் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகள் மற்றும் இதன் பின்னணியில் இருந்து பயனடைந்தவர்கள் மீது ஏன் இதுவரை முழுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

இத்தாக்குதலில் கத்தோலிக்க மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம் மக்கள் சந்தேகக் கண் கொண்டு பார்க்கப்பட்டனர். அதேபோல, 2019 மற்றும் 2024 ஆகிய இரு ஜனாதிபதித் தேர்தல்களிலும் தேசிய பாதுகாப்பு என்ற விவகாரத்தை மையப்படுத்தித் எங்களின் வாக்குகள் பெருமளவில் கைநழுவிச் சென்றதால், அரசியல் ரீதியாகத் எங்களுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுத் நாங்களும் இதில் ஒரு பாதிக்கப்பட்ட தரப்பாகவே இருக்கின்றோம்.

நல்லாட்சி அரசாங்கத்தின் போதே விசாரணைகள் தொடங்கப்பட்ட போதிலும், 52 நாள் அரசாங்க மாற்றத்திற்குப் பிறகு சட்ட ஒழுங்கு அமைச்சு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. எனவே, இதற்கு ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தியோ பொறுப்பேற்க முடியாது. தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காகவே பொலிஸ் அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதே தவிர, தாக்குதலை நடத்தியவர்கள் இன்னும் முழுமையாகத் தண்டிக்கப்படவில்லை என்றார்.