கெட்டுப்போன இறாலை கண்டறிவது எப்படி? வாங்கும் முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்

கடல் உணவு பிரியர்களின் ஆல்-டைம் ஃபேவரைட் உணவுகளில் இறாலுக்கு தனி இடம் உண்டு. அதன் தனித்துவமான சுவைக்காகவே பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். தொக்கு, பிரியாணி, வறுவல் என எந்த வடிவில் சமைத்தாலும் அதன் சுவையே தனி தான். ஆனால், சந்தையில் இறால் வாங்கும்போது கவனக் குறைவாக இருந்துவிட்டால், சமையலின் சுவை கெட்டுப்போவதுடன் உடல்நலப் பாதிப்புகளும் ஏற்படக்கூடும். கெட்டுப்போன அல்லது பழைய இறாலை எப்படி கண்டுபிடிக்கலாம் என்கிற வழிகளை இங்கே பார்க்கலாம்.

இறாலின் மணத்தை முதலில் கவனியுங்கள்
இறாலை வாங்கும் போது முதலில் மோந்து பார்க்க வேண்டும். அதில் கடுமையான துர்நாற்றம் அல்லது அமோனியா போன்ற கடுமையான வாசனை அல்லது அழுகிய முட்டையின் வாசனை போன்றவை அடித்தால் கெட்டுபோன இறால் ஆக இருக்க வாய்ப்புள்ளது. புதிய இறாலில் எப்போதும் லேசான கடல் அல்லது உப்பு நீரின் இயற்கையான மணத்தை கொண்டிருக்கும்.

​Journal of the Science of Food and Agriculture ஆய்வின்படி, இறாலின் தரத்தை மதிப்பிடுவதில் மணம் முக்கியமான அறிகுறியாகும். புதிய இறாலுக்கு லேசான கடல் மணம் இருக்கும்; கெட்டுப்போகத் தொடங்கிய இறாலில் புளிப்பு அல்லது துர்நாற்றம் அதிகமாக இருக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறாலின் நிறத்தை பாருங்கள்
இறாலின் வகையை பொறுத்து அதன் நிறம் மாறுபடும் என்றாலும், அதன் மேற்பரப்பில் இருக்கும் பளபளப்பே பிரஷ்ஷான தன்மையை காட்டும். இறலானது லேசான சாம்பல் அல்லது இளஞ்சிவபபு நிறத்தில் பளபளப்பாக இருக்க வேண்டும். மாறாக, தோலின் மீது கருப்புப் புள்ளிகள் அல்லது மஞ்சள், பழுப்பு நிறமாக மாற தொடங்கியிருந்தால் அது பழைய இறால் ஆகும்.

தோல்பகுதி உறுதியாக இருக்க வேண்டும்
​இறாலின் தோலையும் சதையின் கெட்டித் தன்மையையும் தொட்டு பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். இறாலின் உடலானது இறுக்கமாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும். இறாலை கையில் எடுக்கும்போது வழவழப்பாகவோ மெத்தை போலோ இருந்தால் அதை தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில், கெட்டுப்போன இறால்களின் மென்மையாகவும், லேசாக டச் செய்தாலே உடையும் வகையில் இருக்கும்.

தலைப்பகுதியை கவனியுங்கள்
இறாலின் தலைப்பகுதி அதன் தரத்தை உணர்த்தும் முக்கிய காரணியாகும். முழு இறாலை வாங்கும்போது, அதன் தலை உடலுடன் உறுதியாக இணைந்திருக்க வேண்டும். மாறாக, தலைக்கும் உடலுக்கும் இடையிலான இணைப்பு தளர்ந்து, லேசாக தொட்டாலே தலை தனியாகக் கழன்று விழும் நிலையில் இருப்பது அல்லது கருமையாக இருப்பது பழைய இறாலின் அறிகுறியாகும். அவை நீண்ட காலமாக சேமித்து வைக்கப்பட்டிருக்கலாம்.

கண்கள் பளபளப்பாக இருக்க வேண்டும்

இறாலின் கண்கள் பளபளப்பாகவும் கருமையாகவும் இருக்க வேண்டும். மாறாக, கண்கள் மங்கலாக, சுருங்கி அல்லது உடலுக்குள் உள்வாங்கியது போல் காணப்பட்டால் பழைய இறால் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

​Quality Index Method (QIM) அடிப்படையில் வெளியான ஆய்வில், இறாலின் மணம், நிறம், கண்கள், தலை மற்றும் சதையின் உறுதித்தன்மை ஆகியவற்றை ஒன்றாக மதிப்பிட்டால்தான் அதன் ஃபிரெஷ்னஸ் துல்லியமாக அறிய முடியும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, ஒரு அம்சத்தை மட்டும் பார்த்து வாங்காமல், அனைத்து அறிகுறிகளையும் கவனித்து வாங்குவது பாதுகாப்பான தேர்வாகும்.

கூடுதல் குறிப்புகள்

எப்போதும் ஐஸ் மீது வைக்கப்பட்ட அல்லது குளிரூட்டப்பட்ட இறாலை தேர்வு செய்யுங்கள்.
பேக்கெட் இறால் வாங்கினால், உற்பத்தி தேதி, காலாவதி தேதி மற்றும் சேமிப்பு வெப்பநிலை ஆகியவற்றை சரிபார்க்கவும்.
வீட்டிற்கு வாங்கி வந்தவுடன் உடனடியாக குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். நீண்ட நேரம் அறை வெப்பநிலையில் வைத்திருக்கக் கூடாது.
சரியான மற்றும் புதிய இறாலை தேர்ந்தெடுத்து வாங்குவது, உணவின் சுவையை கூட்டுவதோடு குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் பாதுகாப்பானது. இனி அடுத்த முறை நீங்கள் மீன் சந்தைக்குச் செல்லும்போது, இந்த எளிய வழிகளை நினைவில் கொண்டு தரமான இறாலை வாங்கி சுவையான உணவை சமைத்து மகிழுங்கள்!

1. Frozen இறால் வாங்கலாமா?
வாங்கலாம். ஆனால், பேக்கெட் சேதமில்லாமல் இருக்க வேண்டும். உற்பத்தி தேதி, காலாவதி தேதி மற்றும் சேமிப்பு வெப்பநிலையை சரிபார்த்து, வாங்கிய பிறகு உடனடியாக குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது நல்லது.

2. புதிய இறாலை எப்படி எளிதாக கண்டுபிடிப்பது?
புதிய இறாலின் சதை உறுதியாக இருக்கும். அதன் தோல் சதையுடன் நன்றாக ஒட்டியிருக்கும். கண்கள் பளபளப்பாகவும், தலை உடலுடன் உறுதியாகவும் இருக்கும். மேலும், இயற்கையான கடல் மணம் இருக்கும்.

3. பழைய இறால் சாப்பிட்டால் என்ன ஆகும்?
தரம் குறைந்த அல்லது கெட்டுப்போன இறாலை சாப்பிட்டால் வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, குமட்டல் போன்ற உணவு நச்சுத்தன்மை அறிகுறிகள் ஏற்படலாம். அறிகுறிகள் கடுமையாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.