மதீனா நகரின் மீது ட்ரோன் தாக்குதல் சுட்டு வீழ்த்தியதுசவுதி ராணுவம் தீவிரவாத அமைப்பு மறுப்பு

 

புனித நகரமான மதீனாவில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதாக சவுதி கூட்டுப்படை கூறிய புகாரை ஹவுதி அமைப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஏமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி கூட்டுப்படைக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை முன்னிலையில் எட்டப்பட்ட அமைதி ஒப்பந்தம், சமீபத்திய இஸ்ரேல்-அமெரிக்க போர் பதற்றத்தால் சிதைந்து போனது. சவுதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் நிறுவனமான அராம்கோ மற்றும் சர்வதேச விமான நிலையங்களை குறிவைத்து ஹவுதி படைகள் அடுக்கடுக்கான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தின.

ரியாத்தில் உள்ள மன்னர் காலித் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 309 பேர் படுகாயம் அடைந்தனர். அதேபோல் தம்மாம் விமான நிலைய தாக்குதலில் ஒரு இந்தியர் உள்பட 2 பேர் பலியாகினர். இதனால் சவுதி அரேபிய வான்வெளியில் உச்சக்கட்ட போர் பதற்றம் நிலவி வந்தது. இந்த சூழலில், உலக முஸ்லிம்களின் இரண்டாவது புனித ஸ்தலமான மதீனா நகரின் வான்பரப்பில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய ஆளில்லா ட்ரோன் விமானத்தை இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக சவுதி ராணுவ கூட்டுப்படை திடீரென அறிவித்தது. புனித தளமான நபிகள் நாயகத்தின் பள்ளிவாசல் அமைந்துள்ள மதீனாவை குறிவைத்து இந்த அத்துமீறல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை ஹவுதி அமைப்பு முற்றிலுமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக ஹவுதி ராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரி வெளியிட்ட அறிக்கையில், ‘ஏமன் ஆயுதப்படை சவுதி அரேபியாவின் உட்பகுதிக்குள் எந்தவொரு ராணுவ நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. மதீனா வான்வெளியில் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக குற்றவியல் சவுதி எதிரி கூறுவது அப்பட்டமான கட்டுக்கதை’ என்று தெரிவித்தார். இதற்கு முன்பும் மக்கா, மதீனா பகுதிகளை குறிவைத்து ஹவுதி அமைப்பு ஏவுகணைகளை ஏவியதாக சவுதி அரசு கூறியிருந்தது. ஆனால் தாங்கள் ராணுவ மற்றும் உள்கட்டமைப்பு தளங்களை மட்டுமே குறிவைப்பதாகவும், புனித தளங்களை ஒருபோதும் தாக்க மாட்டோம் என்றும் கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.

பாப் எல்-மந்தேப் ஜலசந்தி அருகே நிலைகொண்டுள்ள ஹவுதிகளின் இந்த நகர்வுகள் சர்வதேச வர்த்தகத்திற்கும், செங்கடல் வழியிலான கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. புனித நகரங்களை மையப்படுத்தி பரஸ்பரம் கூறப்படும் இதுபோன்ற கடுமையான குற்றச்சாட்டுகள், பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தை மேலும் தீவிரமடையச் செய்து சர்வதேச சமூகத்தை பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.