எதிர்பார்க்கப்பட்டது போல் ஈரான்- அமெரிக்க போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளதாகவே தெரிகிறது. ஏறக்குறைய மீளவும் போர் தொடங்கிய நிலையில், மேற்காசிய பிராந்தியம் அதிக கொதிநிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. இது பொருளாதார ரீதியில் உலகளாவிய சூழலை பாதிக்கும் விதத்தில் காணப்படுகிறது.
ஈரான்- அமெரிக்க போர்நகர்வுகள் உலக பொருளாதார நெருக்கடியை தீவிரம் பெறச் செய்துள்ளன. அதனை அனைத்து உலக நாடுகளும் எதிர்கொள்கின்றன.
அமெரிக்காவின் வல்லரசு ஆதிக்கத்தின் வெற்றியை நிர்ணயிக்கும் போராகவே இது மாறி உள்ளது. சீனாவும் ஈரானுடன் இணைந்து பெரும் அச்சுறுத்தலை அமெரிக்காவுக்கு ஏற்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றது.
அமெரிக்க புலனாய்வுத்துறையின் தகவலின் அடிப்படையில் ஈரான்- சீன இராணுவ உறவு பலமானதாகவே உள்ளது.
ஈரானின் உயர்தலைவர் காமேனியின் இறுதிச் சடங்கு பாரிய மக்கள் புரட்சியை அந்நாட்டில் ஏற்படுத்தியிருந்தது. மக்களின் அணிதிரள்வு ஈரானின் ஆட்சி மீதான நம்பிக்கையையும் அமெரிக்கா மீதான எதிர்ப்பு உணர்வுகளையும் வெளிப்படுத்தியுள்ளது.
இது உலக வரலாற்றில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காமேனியின் உடல் தெஹ்ரானிலுள்ள கிராண்ட் முசல்லா பள்ளிவாசலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பின்னர் மத்திய தெஹ்ரானின் இமாம் ஹொசைன் சதுக்கத்திலிருந்து ஆசாதி சதுக்கம் வரை சுமார் பத்து கிலோமீற்றர் தூரமுடைய இறுதி ஊர்வலத்தில் மக்கள் திரண்டிருந்தனர். பல இலட்சக்கணக்கான மக்கள் வீதிகளின் இருபுறமும் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
ஈரானிய மக்கள் தேசியக் கொடிகளை தாங்கியிருந்ததுடன், சிவப்பு நிற எதிர்ப்புக் கொடிகளையும் ஏந்தியிருந்தனர்.
‘நாம் எழுச்சி பெற வேண்டும்’ என்றும் ‘அமெரிக்கா விரட்டப்பட வேண்டும்’ என்றும் முழக்கங்கள் எழுந்தன. தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் பதாகைகளை நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் ஏந்தியிருந்தனர்.
அமெரிக்க- இஸ்ரேலிய தாக்குதல் உத்திகள் ஆட்சி மாற்றத்திற்கான தந்திரம் என்பதை புரிந்து கொள்ளுதல் இங்கு அவசியமானது.
அதேவேளை காமேனியின் மரணச் சடங்குக்கு உலகத் தலைவர்களின் வருகை தந்தமை அமெரிக்கக் கூட்டுக்கு ஏற்பட்ட தோல்வியாகவே தெரிகின்றது.
ஈரானிய மக்கள் தமது உயர்தலைவருக்கு அஞ்சலி செலுத்துவது ஒருபுறம் அமைய, மறுபக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளின் பிரதிநிதிகள் மரணச் சடங்கில் கலந்து கொண்டமை அமெரிக்க- இஸ்ரேலியா கூட்டின் பலவீனத்தை அடையாளப்படுத்தி இருந்தது.
இதனை எதிர்கொள்ள முடியாமலேயே மீளவும் ஈரான் மீது அமெரிக்கா போரைத் தொடங்கியுள்ளது. ஹோர்மூஸில் எரிபொருளுடன் பயணம் செய்து கொண்டிருந்த கப்பல் மீது ஈரான் நடத்திய தாக்குதலின் விளைவாகவே அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடங்கியதாக அமெரிக்க ஜனாதிபதி தனது பதிவில் வெளிப்படுத்தியிருந்தார்.
ஆனால் நடைமுறையில் அமெரிக்க ஜனாதிபதியின் முன்பின் முரணான உரையாடலும், தோல்வியை ஏற்றுக் கொள்ளாத அமெரிக்க இராணுவத் தலைமையும் போரில் வெற்றி பெறுவதற்கு முனைப்பு காட்டி வருகின்றன. இதுவே மீளப் போர் தொடங்குவதற்கான பிரதான காரணமாக உள்ளது.
அமெரிக்கப் போரின் இலக்குகள் இராணுவ முகாம்களைக் கடந்து பொதுமக்களை இலக்க வைத்து பாரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது. இதற்காக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அராக்ச்சி வெளிப்படையாகவே அமெரிக்காவை எச்சரித்தார்.
அதேநேரத்தில் ஈரானுடனான பேச்சுவார்த்தைகளுக்கு வோஷிங்டன் தொடர்ந்து உறுதியுடன் இருப்பதாகவும், தெஹ்ரானுடனான தொழில்நுட்பப் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும் அமெரிக்க வெளியுறவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இரு நாட்களாக அமெரிக்கா ஈரானிய நகரங்கள் மீது குண்டுவீசியதைத் தொடர்ந்து பஹ்ரைன், குவைத் மற்றும் கட்டாரில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் மூலோபாய மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் பதில் நடவடிக்கைகள் அமெரிக்காவின் இராணுவத் தளங்கள் அமைந்திருக்கும் இடங்களை இலக்கு வைத்தே அமைந்திருந்தன.
இருதரப்பின் போர் உத்திகளும் பொதுமக்களை நோக்கியதாக அமைகின்றன. இத்தாக்குதல் படிப்படியாக அமெரிக்காவை நோக்கி நகருமா என்ற சந்தேகம் ஏற்பட ஆரம்பித்துள்ளது.
அமெரிக்க நகரங்கள் மீதான தாக்குதலை ஈரான் இரகசியமான முறையில் நகர்த்த திட்டமிடுவதாகவும் அதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அமெரிக்க புலனாய்வுத் துறை எச்சரித்துள்ளமை தெரியவருகின்றது.
இதுஒருபுறமிருக்க, ஈரானின் உயர் தலைவரின் மரணச் சடங்குக்கு பின்னர் பாரிய போரை ஈரான் நடத்துவதற்கான பலமும் மக்களுடைய ஒத்துழைப்பும் அந்நாட்டுக்குக் கிடைத்துள்ளது. மக்கள் வெளிப்படையாகவே அமெரிக்கா மீதான விமர்சனங்களை முன்வைப்பதும் அமெரிக்காவுக்கு எதிரான போரில் மக்கள் ஒன்றிணைந்து செயல்பட திட்டமிடுவதையும் கண்டுகொள்ள முடிகின்றது.
எனவே மரணச்சடங்குக்குப் பின்னரான ஈரானின் தாக்குதல் அதீத அச்சுறுத்தலை உலகத்திற்கு தரக்கூடியதாக அமைய வாய்ப்புள்ளது. ஈரானின் அனுமதியைப் பெறாமல் கடந்து செல்ல முயன்றதாகக் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, சமீப நாட்களில் ஹோர்மூஸ் நீரிணையில் மூன்று கப்பல்கள் தாக்கப்பட்டன.
இதற்குப் பதிலடியாக, அமெரிக்கா ஈரானிய மண்ணில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது. இது ஈரான் தனது பலத்தை ஹோர்மூஸ் நீரிணையில் நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கையாகவே தெரிகிறது. ஹோர்மூஸ் நீரிணையே ஈரானின் பலமான ஆயுதமாக மாறியுள்ளது.
இந்நிலையில், மீண்டும் போரின் தொடக்கம் உலகளாவிய ரீதியான பொருளாதார வீழ்ச்சியை சாத்தியப்படுத்தப் போகின்றது. அதற்கான ஒட்டுமொத்த விளைவையும் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் அகப்பட்டுள்ளன.
ஐரோப்பிய பொருளாதாரம் நெருக்கடியின் உச்சத்தில் காணப்படுகின்றது போல் ஏனைய கண்டங்களின் நாடுகளும் அத்தகைய நிலையை அடைகின்ற சூழலை ஈரான்- அமெரிக்கப் போர் ஏற்படுத்தியுள்ளது. போரின் விளைவுகளை உலகம் முழுமையாக எதிர்கொள்ள முடியாமல் திண்டாடப் போகின்றது.
ஹோர்மூஸ் பகுதியில் நடைபெறும் மோதல் கடல்வழிப் பாதுகாப்புக்கு மட்டுமன்றி, பொருளாதார அழுத்தத்தின் ஒரு பகுதியுமாகும். அது உலகளாவிய பொருளாதாரத்தின் மையமாகவே மாறுகிறது.
அதேசமயம், மீண்டும் தொடங்கியுள்ள அமெரிக்க- ஈரான் போரின் விளைவுகள் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை மட்டுமின்றி, உலக நாடுகளின் அரசியல் உறுதிப்பாட்டையும் சிதைக்கப் போகின்றன. குறிப்பாக மேற்காசிய நாடுகள் பாரிய நெருக்கடிக்குள் அகப்பட்டு இருப்பது மாத்திரமன்றி, அதன் மூலம் பொருளாதார நெருக்கடியையும் அரசியல் இராணுவ நெருக்கடிகளையும் ஏற்படுத்தப் போகின்றன.
ஈரான் அணு ஆயுத உற்பத்தியில் முழுமையாக ஈடுபடுவதற்கு இப்போர் வழியேற்படுத்தியுள்ளது. ஈரானிய மக்களின் ஒத்துழைப்பு, உலக வல்லரசுகளான ரஷ்யா மற்றும் சீனாவின் ஒத்துழைப்பு அணு ஆயுத சோதனைக்கான வாய்ப்பினை அதிகம் ஏற்படுத்தி வருகின்றன.
புரிந்துணர்வு உடன்பாட்டில் இருந்து ஈரான் விலகிக் கொள்வதன் நோக்கமும் அணு ஆயுத சோதனைக்கான வாய்ப்பை உத்தரவாதப்படுத்துவதாகவே தெரிகின்றது. இத்தகைய உத்திகளையே வடகொரியா அணுவாயுத சோதனைக் காலத்தில் பின்பற்றியது என்பது நினைவு கொள்ளத்தக்கது.
எனவே உலக ஒழுங்கு மீளமைக்கப்படுகிறது என்பதற்கு அப்பால் ஈரான் அணு ஆயுத வல்லரசாக எழுச்சி பெறுவதற்கு ஒரு வாய்ப்பான களத்தை அமெரிக்கா- இஸ்ரேல் கூட்டு தாக்குதல் ஏற்படுத்தியிருக்கின்றது.
நூற்றாண்டின் நிகழ்வு என வர்ணிக்கப்படும் ஈரானிய மக்களின் தேசிய உணர்வும் சீனாவுடனும் ரஷ்யாவுடனும் கொண்டிருக்கும் ஈரானின் இராணுவ ஒத்துழைப்பும் அமெரிக்காவை முற்றாகவே பலவீனப்படுத்துவதற்கான உத்தியாக அமைவதோடு, ஈரானின் பலத்தை அதிகரித்துள்ளதாவே தெரிகிறது.



