ஜே.வி.பி. இயக்கம் 2024இல் நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் ‘தேசிய மக்கள் சக்தி’ என்ற போர்வையில் போட்டியிட்டு வெற்றி பெற்று, இலங்கையில் தற்போது ஆட்சியில் இருக்கிறது.
ஆனால், 2024 இல் முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர், 1971 மற்றும் 1988 – 89 காலகட்டங்களில் இரு தடவைகள் ஆயுதக் கிளர்ச்சிகள் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அந்த இயக்கம் முயன்றுள்ளது. ஆனால், அந்த இரண்டு கிளர்ச்சிகளும், அப்போது ஆட்சியில் இருந்த அரசுகளால் கர்ணகடூரமாக அடக்கியொடுக்கப்பட்டன.
ஜே.வி.பியின் முதலாவது ஆயுதக் கிளர்ச்சி 1971 ஏப்ரல் 5 ஆம் திகதி நடைபெற்றது. அந்தக் கிளர்ச்சி நடைபெற்று இந்த வருடம் (2026) ஏப்ரல் 5ஆம் திகதியுடன் 55 ஆண்டுகள் ஓடி விட்டன.
ஜே.வி.பி. இயக்கம் அதன் நிறுவனத் தலைவர் ரோகண விஜேவீரவினால் 1965ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இன்றைய ஜே.வி.பி. தலைமை அதன் ஆரம்பகால கொள்கைகளைப் பெரும்பாலும் கைவிட்டுவிட்டாலும், அது ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் தன்னை ஒரு புரட்சிகரமான இடதுசாரி இயக்கமாகவே அறிமுகப்படுத்தி வந்துள்ளது.
ஜே.வி.பியின் இன்றைய தலைமை அந்த இயக்கத்தின் ஆரம்பகாலக் கொள்கைகளைக் கைவிட்டதற்குக் காரணம், அது முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயகப் பாதையில் பயணித்ததும், அதிகாரத்துக்கு வருவதற்காக சர்வதேச மற்றும் பிராந்திய வல்லாதிக்க சக்திகளின் (அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற) ஆதரவைச் சந்தர்ப்பவாத ரீதியில் பெற்றதும்தான் காரணம் எனக் கருதுவோர் உள்ளனர்.
இதன் அர்த்தம், ஜே.வி.பியின் ஆரம்பகால தலைமை (ரோகண விஜேவீர, லயனல் போபகே, கமநாயக்க போன்றோர்) புரட்சிகரமான இடதுசாரித் தலைமையாக இருந்தது என்ற கருத்தை முன்வைப்பதாகும்.
ஆனால், உண்மை அதுவல்ல என்பதை நிரூபிப்பதற்கு அதன் 1971 ஏப்ரல் ஆயுதக் கிளர்ச்சியின் பின்னணியை வைத்தே நிரூபிக்க முடியும் என்பதையும் தர்க்கரீதியாக முன்வைப்பதே இந்தச் சுருக்கமான கட்டுரையின் நோக்கமாகும்.
ஜே.வி.பி. தனது முதலாவது ஆயுதக் கிளர்ச்சியை 1971 ஏப்ரல் 5 ஆம் திகதி நடத்திய நேரத்தில், இலங்கையில் திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்கவை பிரதமராகக் கொண்டு, சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் இடதுசாரிக் கட்சிகளான லங்கா சமசமாஜ கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி என்பனவும் இணைந்த முற்போக்கு கூட்டரசாங்கம் ஒன்று பதவியில் இருந்தது.
ஜே.வி.பியின் ஆயுதக் கிளர்ச்சி நடைபெறுவதற்கு ஒரு வருடம் முன்னதாக 1970ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில்தான் அந்த அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்திருந்தது.
அதற்கு முதல், 1965 முதல் 1970 வரை, டட்லி சேனநாயக்கவைப் பிரதமராகக் கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஏழு கட்சி கூட்டரசாங்கம் ஒன்று பதவியில் இருந்தது.
அந்த அரசில் தமிழ் இனவாதக் கட்சிகளான தமிழரசு – தமிழ் காங்கிரஸ் கட்சிகளும், சிங்கள இனவாதிகளான கே.எம்.பி. ராஜரத்ன மற்றும் ஆர்.ஜீசேனநாயக்க போன்றோரின் கட்சிகளும் ஏககாலத்தில் பங்காளிகளாக இருந்தன.
அந்த ஏகாதிபத்திய சார்பு மற்றும் பெரு முதலாளிகளுக்குச் சார்பான அரசு, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற உலக ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களின் ஆலோசனைப்படி செயல்பட்டு, மக்களுக்கு எதிராகப் பெரும் பொருளாதாரத் தாக்குதல்களை (முக்கிய நடவடிக்கையாக அதுவரை காலமும் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச அரிசியை நிறுத்திய சம்பவம் இருந்தது) நிகழ்த்திய காரணத்தால்தான், அந்த அரசு மீது வெறுப்புற்ற மக்கள், 1970 பொதுத்தேர்தலைப் பயன்படுத்தி, திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான மக்கள் சார்பு அரசை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு கொண்டு வந்திருந்தனர்.
இடதுசாரிகளையும் உள்ளடக்கிய அந்த அரசு, பல ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியமய நடவடிக்கைகளை துணிகரமாக முன்னெடுத்தது. அவற்றில் பிரித்தானியருக்குச் சொந்தமாக பல வருடங்களாக இருந்த பெருந்தோட்டங்களை நாட்டுடமையாக்கியமை, பிரித்தானிய முடியரசின் கீழ் இருந்த இலங்கையை அதிலிருந்து விடுவித்து குடியரசாக்கியமை போன்ற நடவடிக்கைகள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை.
இதன் காரணமாக, அந்த அரசை ஆட்சிபீடத்திலிருந்து இறக்கிவிட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு ஏகாதிபத்திய சக்திகள் செயற்படத் தொடங்கியிருந்தன.
இந்தச் சந்தர்ப்பத்தில் இதே ஏகாதிபத்திய சக்திகள் இதற்கு முன்னரும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசுகளை கவிழ்ப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளை இந்த இடத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.
எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க
சிறீலங்கா சுதந்திரக் கட்சி, திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்கவின் கணவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சியாகும்.
பண்டாரநாயக்க, தீவிரமான தேசியவாதியாகவும் அதே நேரத்தில் தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்பாளராகவும் இருந்தார். அதன் காரணமாக, அவர் 1956 பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும், பல ஏகாதிபத்திய விரோத நடவடிக்கைகளை துணிகரமாக எடுத்தார்.
இதனால் அச்சமடைந்த ஏகாதிபத்திய சக்திகள், 1959 ஆம் ஆண்டு அவரைப் படுகொலை செய்தன. (இந்தப் படுகொலையின் பின்னணியில் அமெரிக்க உளவு அமைப்பான சீ.ஐ.ஏ.தான் இருந்ததாக, திருமதி பண்டாரநாயக்க 1960களில் எகிப்துக்கு விஜயம் மேற்கொண்டபோது, அந்த நாட்டின் பிரபல பத்திரிகையான ‘அல் அஹ்ரம்’ பத்திரிகைக்கு வழங்கிய ஒரு பேட்டியின் போது கூறியிருக்கிறார்)
பண்டாரநாயக்க கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 1960 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று அவரது மனைவி சிறீமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக்கு வந்தார்.
அவரும் தனது கணவர் பண்டாரநாயக்கவின் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கைகளின் அடிப்படையிலேயே நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அதனால் அச்சமுற்ற ஏகாதிபத்திய சக்திகள், 1962 இல் ஒரு இராணுவச்சதி மூலம் அவரது அரசைக் கவிழ்க்கவும், அவரைச் சிறைப்படுத்தவும் முயன்றன. ஆனால், தக்க நேரத்தில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, அந்தச் சதி முயற்சி முறியடிக்கப்பட்டது.
இருந்தும், ஏகாதிபத்திய சக்திகள் அவருடைய ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகளைக் கைவிடவில்லை. இலங்கையின் பத்திரிகைத் துறையில் அன்றைய காலகட்டத்தில் ஏகபோகம் வகித்த, ஐக்கிய தேசிய கட்சிக்கு சார்பான ‘லேக் ஹவுஸ்’ பத்திரிகை நிறுவனத்தை தேசியமயமாக்கும் சட்டமூலமொன்றை சிறீமாவோ அரசு 1964இல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தபோது,
அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய பிற்போக்கு சக்திகள், அவருடைய கட்சியில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை விலைக்கு வாங்கி, அதன் மூலம் அந்த மசோதாவைத் தோற்கடித்து, அவரை ஆட்சியிலிருந்து வெளியேற்றினர்.
இந்தப் பின்னணியில் இருந்து பார்த்தால்தான், சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையில் 1970இல் அமைந்த அரசையும் அவர்கள் வீழ்த்துவதற்கு செய்த சூழ்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும்.
இந்தமுறை ஏகாதிபத்திய சக்திகள் தமது வழிமுறையில் புதிய தந்திரோயம் ஒன்றைப் புகுத்திச் செயல்பட்டனர். அதாவது, தமது வழமையான அடிவருடிக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை 1970இல் நடைபெற்ற தேர்தலில் மக்கள் முற்றுமுழுதாக நிராகரித்துவிட்டதால், வேறு ஒரு புதிய வழியை அவர்கள் தேர்ந்தெடுத்தனர்.
அந்தப் புதிய வழிதான் இடதுசாரிப் போர்வையில் இருந்த ஜே.வி.பியைப் பயன்படுத்தி, ஆயுதக் கிளர்ச்சி ஒன்றின் மூலம் அரசை வீழ்த்துவதாகும். அதுவே வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட ஜே.வி.பியின் 1971 ஏப்ரல் ஆயுதக் கிளர்ச்சியாகும்.
இந்தத் திட்டம் நன்கு முன்கூட்டியே தயார் செய்யப்பட்ட ஒரு திட்டமாகும். அதாவது, ஜே.வி.பி. 1970ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அணியின் வெற்றிக்காக வேலை செய்தது. அதன் மூலம் அந்த அணியின் ஆதரவாளர்களாக இருந்த பல்லாயிரக்கணக்கான சிங்கள கிராமப்புற இளைஞர்களுடன் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்தி, தனது இயக்கத்துடன் இணைத்துக் கொண்டது.
மறுபுறத்தில், தேர்தலில் தோல்வியுற்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சியும், தனக்கு ஆதரவான இளைஞர்களை மறைமுகமான வழிகளில் ஜே.வி.பிக்குள் ஊடுருவ வைத்துக்கொண்டது.
இத்தகைய இளைஞர்களை வைத்துக்கொண்டே, ஜே.வி.பி. 1971 ஏப்ரல் 5 ஆம் திகதி ஆயுதக் கிளர்ச்சி ஒன்றை நடத்தி அரசைத் தூக்கி எறிய முயன்றது.
இந்த இடத்தில் சில முக்கியமான கேள்விகள் எழுகின்றன.
அதாவது, ஒரு வருடத்துக்கு முன்னர்தான் மக்களின் மூன்றில் இரண்டு ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த அரசொன்றை, அது மக்கள் செல்வாக்கு இழக்காத நேரத்தில், அதுவும் தாங்களும் ஆதரித்து ஆட்சிக்கு கொண்டுவந்த அரசொன்றை, என்ன அடிப்படையில் ஆயுதக் கிளர்ச்சி மூலம் தூக்கி எறியலாம் என்ற துணிவு ஜே.வி.பிக்கு வந்தது?
அது மாத்திரமின்றி, 1965 முதல் 1970 வரை ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான உண்மையான பிற்போக்கான, மக்கள் விரோத அரசுக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சி செய்யாமல், 1970இல் மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த, உண்மையான ஏகாதிபத்திய விரோத, மக்கள் சார்பு அரசை ஜே.வி.பி. ஆயுதக் கிளர்ச்சி மூலம் தூக்கியெறிய முனைந்தது ஏன்?
ஜே.வி.பியின் இந்த நடவடிக்கை தற்செயலானதா அல்லது தெரிந்துகொண்டே திட்டமிட்ட முறையில் ஏகாதிபத்திய மற்றும் பிற்போக்கு சக்திகளின் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதா?
இதற்கான விடைகளைத் தெரிந்து கொள்ள, அந்த நேரத்தில் ஜே.வி.பியின் செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட சில நிகழ்வுகளையும் திரும்பிப் பார்ப்பது அவசியமாகும்.



