
பயணிகளுக்கான பிராந்திய இணைப்புகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், Island Aviation Services நிறுவனத்துடன் புதிய இடைநிலை இணைப்பு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் மாலைதீவில் உள்ள 17 முக்கிய உள்நாட்டு இலக்குகளுக்கு மிகவும் இலகுவாக பயணிக்க முடியும்.
இந்த புதிய ஏற்பாடு மூலம், இரு விமான நிறுவனங்களின் சேவைகளையும் உள்ளடக்கிய பயணங்களை ஒரே மின்னணு பயணச்சீட்டின் (Single Electronic Ticket) கீழ் முன்பதிவு செய்ய முடியும். இதன் மூலம் மாலைதீவின் Velana International Airport மற்றும் Gan International Airport வழியாக உள்வரும் மற்றும் வெளியேறும் பயணிகளுக்கு தடையற்ற பயண அனுபவம் கிடைக்கும்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் சர்வதேச வலையமைப்பையும், மாலைதீவு விமான சேவையின் விரிவான உள்நாட்டு இணைப்புகளையும் ஒருங்கிணைப்பதன் மூலம், தொலைதூர தீவுகள் மற்றும் பிரபலமான சுற்றுலா இடங்களுக்கு பயணிகள் எளிதில் செல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இது குறிப்பாக சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தக பயணிகளுக்கு பயனுள்ளதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தற்போது மாலே நகரிலுள்ள வேலானா சர்வதேச விமான நிலையத்திற்கு தினசரி மூன்று விமான சேவைகளையும், கான் தீவிலுள்ள கான் சர்வதேச விமான நிலையத்திற்கு வாரத்திற்கு இரண்டு விமான சேவைகளையும் முன்னெடுத்து வருகிறது.
இந்த ஒப்பந்தம் மூலம் பயண முகவர்கள், சுற்றுலா நிறுவனங்கள், நிறுவன பயண திட்டமிடுபவர்கள் மற்றும் தனிப்பட்ட பயணிகளுக்கு புதிய முன்பதிவு வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மாலே மற்றும் கான் வழித்தடங்களில் பயணிகள் எண்ணிக்கையும் வர்த்தக வாய்ப்புகளும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வர்த்தகப் பிரிவு தலைவர் திமுத்து தென்னகோன் தெரிவித்ததாவது:
“மாலைதீவு விமான சேவையுடனான இந்த ஒத்துழைப்பு, எமது பிராந்திய சேவைகளை விரிவுபடுத்துவதிலும், பயணிகளுக்கு அதிக வசதியை வழங்குவதிலும் முக்கியமான முன்னேற்றமாகும். எமது சர்வதேச வலையமைப்பையும் மாலைதீவின் உள்நாட்டு இணைப்புகளையும் இணைப்பதன் மூலம், மாலைதீவின் பல்வேறு தீவுகளுக்கான அணுகலை எளிதாக்குவதுடன், புதிய வர்த்தக வாய்ப்புகளையும் உருவாக்குகின்றோம்.”
மாலைதீவு பிரிவு முகாமையாளர் நயோமி தென்னகோன் கூறுகையில்:
“இந்த இணைப்பு ஒப்பந்தத்தின் மூலம் மாலே மற்றும் கான் தீவு வழியாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் சர்வதேச வலையமைப்பை பயணிகள் அணுக முடியும். ஒரே பயணத் திட்டத்தின் மூலம் மாலைதீவு தீவுக்கூட்டத்தின் பல்வேறு பகுதிகளை அனுபவிக்கும் வாய்ப்பு பயணிகளுக்கு கிடைக்கிறது.”
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது சேவை வலையமைப்பை தொடர்ந்து விரிவுபடுத்தி வரும் நிலையில், இந்த புதிய முயற்சி பிராந்திய பயணிகளுக்கு அதிக வசதி, சிறந்த இணைப்பு மற்றும் பெறுமதியான சேவைகளை வழங்கும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், குறியீட்டு பகிர்வு கூட்டாண்மைகள் உட்பட 63 நாடுகளில் உள்ள 130 இலக்குகளுக்கு பயண சேவைகளை வழங்குகிறது. ஐரோப்பா, அவுஸ்திரேலியா, மத்திய கிழக்கு, இந்திய துணைக்கண்டம், தென்கிழக்காசியா மற்றும் தூர கிழக்கு நாடுகளுக்கு நேரடி சேவைகளை முன்னெடுத்து வருகிறது.
இந்நிறுவனம் முழுமையான ஏர்பஸ் விமானப் படையணியை கொண்டுள்ளதுடன், அதில் நவீன Airbus A330 மற்றும் Airbus A320 family ரக விமானங்கள் அடங்குகின்றன



