ஒரே மேடையில் 3 சகோதரிகளை மணந்த இளைஞர்

 

உத்தரப்பிரதேசம், அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் ஒரே நபரைத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஹசன்பூர் பகுதியைச் சேர்ந்த சரோஜ் (20), சாவித்திரி (19), சந்தோஷ் (18) ஆகிய சகோதரிகள் சமூக ஊடகங்களில் காணொளிகளை உருவாக்கி வருகின்றனர். இவர்களிடம் கடந்த ஆறு மாதங்களாகக் கேமராமேனாகப் பணிபுரிந்து வந்த விகாஸ் என்பவருடன் இவர்களுக்குக் காதல் மலர்ந்துள்ளது. இவர்கள் இணைந்து உருவாக்கிய காணொளிகளில் விகாஸ் பெரும்பாலும் கணவர் வேடத்தில்தான் நடித்துள்ளார்.

குடும்பத்தினர் தங்களுக்குத் தனித்தனியாகத் திருமணம் செய்து வைக்கத் திட்டமிட்டதை அறிந்த மூன்று சகோதரிகளும், திருமணத்திற்குப் பிறகு ஒருவரையொருவர் பிரிந்து வாழ்வதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாமல் அதிரடி முடிவெடுத்துள்ளனர். அதன்படி, கடந்த ஜூலை 17 அன்று சாமுண்டா மாதா கோயிலில் வைத்து விகாஸை அவர்கள் மூவரும் கரம் பிடித்தனர். இருதரப்பு குடும்பத்தினரின் அனுமதியின்றி நடைபெற்ற இத்திருமணத்தின் காணொடிகள் இணையத்தில் வைரலானது.

இதற்குப் பலரும் கண்டனங்களையும் விமர்சனங்களையும் தெரிவித்த நிலையில், அதற்குச் சகோதரிகள் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. “பண்டைய காலத்தில் தசரத மன்னருக்கு மூன்று ராணிகள் இருந்தார்களே, அது அப்போது அவமானமாகக் கருதப்பட்டதா?” என்று கேள்வி எழுப்பித் தங்களது திருமணத்தை அவர்கள் நியாயப்படுத்தியுள்ளனர்.