எல்ப்ரஸ் மலையில் பலத்த பனிப்புயல்: போஸ்னிய மலையேற்ற வீரர்கள் 5 பேர் உயிரிழப்பு!

 

ரஷ்யாவின் காக்கசஸ் பகுதியில் அமைந்துள்ள ஐரோப்பாவின் மிகயுயர்ந்த சிகரமான எல்ப்ரஸ் மலையில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போஸ்னியா மற்றும் ஹெர்ஸகோவினா நாட்டைச் சேர்ந்த 5 மலையேற்ற வீரர்கள் பலத்த பனிப்புயலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீரற்ற வானிலையினால் உயிரிழந்தவர்களில் மூவரின் உடல்களை மீட்டு கீழே கொண்டு வரும் பணிகள் தாமதமாகியுள்ளதாக ரஷ்ய அதிகாரிகளை மேற்கோள் காட்டி ‘RIA Novosti’ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

7 பேரைக் கொண்ட இந்த மலையேற்றக் குழுவில் புயலில் சிக்கிய இருவரை ரஷ்ய அவசரகால அமைச்சு முதற்கட்டமாக உயிருடன் மீட்டு மருத்துவச் சிகிச்சைகளுக்காக அனுப்பி வைத்துள்ளது.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,350 மீட்டர் (17,550 அடிகள்) உயரத்தில் கண்டெடுக்கப்பட்ட 2 வீரர்களின் உடல்கள் ஏற்கனவே மீட்புக் குழுவினரால் கீழே கொண்டு வரப்பட்டுள்ளன.

மேலும் உயிரிழந்த 3 வீரர்களின் உடல்கள் கண்டறியப்பட்ட போதிலும், மலையில் வீசி வரும் பலத்த காற்று மற்றும் பனிப்புயல் காரணமாக அவற்றை இன்னும் கீழே கொண்டுவர முடியாமல் மீட்புக் குழுவினர் சிரமப்பட்டு வருகின்றனர்.

போஸ்னிய ஊடகங்களின் தகவலின்படி, இந்த மலையேற்றப் பயணத்தில் ஈடுபட்ட 7 பேரும் போஸ்னியாவின் ‘ஸெனிகா’ நகரத்தைச் சேர்ந்தவர்கள். உயிரிழந்தவர்களில் தம்பதியர் ஒருவரும், உள்ளூர் வைத்தியசாலையில் பணிபுரிந்த பெண் வைத்தியர் ஒருவரும் அடங்குவர் எனத் தெரியவந்துள்ளது.

ஜோர்ஜியா எல்லையை ஒட்டி அமைந்துள்ள எல்ப்ரஸ் மலை 5,642 மீட்டர் உயரமுடையது. இது திடீரென மாறக்கூடிய கடுமையான காலநிலை, மிகக் குறைந்த வெப்பநிலை மற்றும் எதிர்பாராத விதமாக வீசும் பனிப்புயல்களுக்குப் பெயர் பெற்றதால், மலையேற்ற வீரர்களுக்கு எப்போதும் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது.