ஈரானுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ பகிரங்க எச்சரிக்கை!

 

ஈரானுடன் நிலவும் தீவிர இராணுவப் பதற்றங்களைத் தணித்து, ராஜதந்திர முறையில் பேச்சுவார்த்தை நடத்திப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமெரிக்கா எப்போதும் தயாராகவே உள்ளது; ஆனால் ஒப்பந்தங்களை மீறினால் அதற்குரிய கடுமையான விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ எச்சரித்துள்ளார். ஃபிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற ஆசியான் (ASEAN) அமைப்பின் சர்வதேச வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோது அவர் இந்த  அறிவிப்பை வெளியிட்டார்.

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) கடல் வழியில் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் ஒப்பந்த மீறல்கள் தொடர்பாகப் பேசிய ரூபியோ, ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையில் உண்மையில் ஆர்வம் காட்டவில்லை எனக் குற்றம் சாட்டினார். “ஈரான் தரப்பில் இருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் பேச்சுவார்த்தைக்கான அழைப்புகள் வருகின்றன; ஆனால் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை அவர்கள் மதித்து நடப்பதில்லை. அவர்கள் பேச்சுவார்த்தைக்குத் தீவிரமாக முன்வந்தால் நாங்களும் தயாராகவே இருக்கிறோம்; இல்லையெனில் எங்களது மற்றும் எங்களது நட்பு நாடுகளின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

சர்வதேச கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்களைக் கட்டுப்படுத்தவோ அல்லது கட்டணம் வசூலிக்கவோ ஈரானுக்கு எவ்வித சட்டப்பூர்வ உரிமையும் இல்லை என்றும், அதனை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்றும் ரூபியோ கூறினார். “பலவந்தமாக ஒரு சர்வதேசக் கடல் பாதையைக் கட்டுப்படுத்தி, கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதை அனுமதித்தால், அது உலகளாவிய வர்த்தகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாகவும் தவறான முன்னுதாரணமாகவும் அமைந்துவிடும். 150 ஆண்டுகால சர்வதேச வர்த்தக விதிகளைச் சீர்குலைக்க நினைப்பதை அனுமதிக்க முடியாது” என்று அவர் ஆணித்தரமாக வாதிட்டார்.

ஈரான் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாத வரை, சர்வதேசக் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாக்கவும் ஈரானின் தாக்குதல் திறன்களை அழிப்பதற்குமான அமெரிக்க ராணுவத்தின் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது. தொடர்ச்சியான ராணுவத் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரத் தடைகள் காரணமாக ஈரான் கடுமையான பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருவதாகவும் சுட்டிக்காட்டிய ரூபியோ, அமைதிப் பாதைக்குத் திரும்புவதே ஈரானுக்குப் பயனளிக்கும் என வலியுறுத்தினார்.