கடை நடத்தி மோசடி செய்த இந்திய வம்சாவளி நபர் பஞ்சாபில் கைது:அமெரிக்கா எப்பிஐ

அமெரிக்க அரசு திட்டங்களில் ரூ.5.7 கோடி முறைகேட்டில் ஈடுபட்ட இந்திய வம்சாவளி நபர் பஞ்சாபில் நேற்று கைது செய்யப்பட்டார். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் மஞ்சித் சிங் பேடி. இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள டாகோமா நகரில் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்தார்.

அங்கு, அமெரிக்க அரசின் ஏழை, எளிய மக்களுக்கான உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்ட பயனாளர்களின் நலத்திட்ட அட்டைகளை பயன்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு உணவு பொருள்களுக்கு பதிலாக, கமிஷன் வாங்கிக்கொண்டு பணத்தை கொடுத்து வந்துள்ளார். இவ்வாறு 6 லட்சம் டாலர்(இந்திய மதிப்பில் ரூ.5.7 கோடி) மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்த குற்றச்சாட்டுகளின் பேரில் மஞ்சித் சிங் பேடியின் பாஸ்போர்ட்டை முடக்கி வைத்த வாஷிங்டன் நீதிமன்றம், அவரை அங்கேயே தங்கியிருக்கவும் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர் கனடா எல்லை வழியாக இந்தியாவுக்கு தப்பியோடி வந்துள்ளார்.

இதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த எஃபிஐ, அவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.1.4 கோடி பரிசு தொகை வழங்கப்படும் என அறிவிததது. இந்நிலையில் அமெரிக்காவில் மளிகை கடை நடத்தி மோசடியில் ஈடுபட்ட மஞ்சித் சிங் பேடி பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நேற்று கைது செய்யப்பட்டதாக எப்பிஐ தெரிவித்துள்ளது.