2.5 மில்லியன் டொலர் சைபர் மோசடி: விசாரணை நடைபெறுவதால் தகவல் வெளியிட முடியாது

திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் சைபர் மோசடி குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் பல விடயங்களை வெளிப்படுத்த முடியாது. இது சைபர் மோசடி என்பதால் தற்போதைய நிலையில் எவரையும் குற்றஞ்சாட்ட முடியாது. பொறுப்பேற்குமாறும் குறிப்பிட முடியாது என தொழில் அமைச்சரும், நிதி திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற அமர்வின்போது நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

திறைசேரியால் வெளிநாட்டு கடன் வழங்குநர் நிறுவனத்துக்கு செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினால் மோசடி செய்யப்பட்டமை சைபர் குற்றமாகும் என அரசாங்க நிதி பற்றிய குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இந்த மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலங்கை மத்திய வங்கி விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

வெளிநாட்டு கடன் முகாமைத்துவ திணைக்களம் புதிதாக நியமிக்கப்பட்ட காலப்பகுதியின் போது பணிக்குழாமினர் இலங்கை மத்திய வங்கியில் பயிற்சியில் இருந்துள்ளார்கள்.

இக்காலப்பகுதியில் தான் அந்த மோசடி இடம்பெற்றுள்ளது.இது வெளிநாட்டு கடன் வளங்கள் திணைக்களத்தின் குறைப்பாடு என்று குறிப்பிட முடியாது.

இந்த சைபர் மோசடி குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் பல விடயங்களை வெளிப்படுத்த முடியாது. இது சைபர் மோசடி என்பதால் தற்போதைய நிலையில் எவரையும் குற்றஞ்சாட்ட முடியாது. பொறுப்பேற்குமாறும் குறிப்பிட முடியாது என்றார்.