-சுமார் 9 டிரில்லியன் கன அடி எரிவாயு மற்றும் 2 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் வளங்கள்! : சர்வதேச நிறுவனங்களிடமிருந்து ஏலங்களை கோரியுள்ளது.
இலங்கை, கடல்சார் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை ஆய்வு செய்வதற்காக சர்வதேச நிறுவனங்களிடமிருந்து ஏலங்களை கோரியுள்ளது. கடந்த ஒரு தசாப்தத்துக்கு முன்பு அதிக செலவினத்தை காரணம் காட்டி இந்திய நிறுவனம் ஒன்று வர்த்தக ரீதியிலான துரப்பணப் பணிகளை கைவிட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) வெளியிடப்பட்டது.
இந்தியப் பெருங்கடலில் சுமார் 34,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட நான்கு கடல்சார் பகுதிகளை இலங்கை ஆய்வு, அபிவிருத்தி மற்றும் வர்த்தக உற்பத்திக்காக ஏலத்தில் வழங்கியுள்ளது.
இலங்கை தனது கச்சா எண்ணெய் தேவைகளை முழுமையாக இறக்குமதி மூலம் பூர்த்தி செய்து வருகிறது. மத்திய கிழக்குப் போர் பிப்ரவரி மாதம் தொடங்கியதிலிருந்து நாட்டின் எரிபொருள் இறக்குமதி செலவு ஐந்து மடங்கு வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல்சார் ஏலத்தை அறிவித்த எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக, ஏல விண்ணப்பங்கள் அடுத்த ஆண்டின் தொடக்கம் வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
“மிகுந்த உறுதியுடனும் தெளிவான நோக்கத்துடனும் முன்னோக்கிச் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நாங்கள் நம்புகிறோம்.”
இலங்கை இதற்கு முன்னர் இந்தியா மற்றும் சீனாவுக்கு கடல்சார் பகுதிகளை வழங்கியிருந்தாலும், குறிப்பிடத்தக்க வர்த்தக வெற்றியைப் பெற முடியவில்லை.
கடந்த பத்து ஆண்டுகளில் தொழில்நுட்பம் பெரிதும் வளர்ச்சியடைந்துள்ளதால், ஆழ்கடலை துளையிடும் பணிகளை மேற்கொள்வது தற்போது பொருளாதார ரீதியாக சாத்தியமாகியுள்ளதாக அமைச்சர் கருணாதிலக தெரிவித்தார். இதன் மூலம் முதலீட்டாளர்களை இலங்கைக்கு ஈர்க்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“இலங்கையின் கடல்சார் வளங்களின் ஆய்வு மற்றும் அபிவிருத்திப் பணிகள் பொறுப்புடனும், வெளிப்படைத்தன்மையுடனும், நீண்டகால மதிப்பை உருவாக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதில் இலங்கை அரசு உறுதியாக உள்ளது,” என்று அமைச்சர் தெரிவித்தார்.
மன்னார் படுகையில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு
இலங்கையின் மன்னார் படுகை பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வில் ஆர்வம் அதிகரித்தது. இந்தியாவின் கெய்ர்ன் இந்தியா (Cairn India) நிறுவனம், அதன் உள்ளூர் துணை நிறுவனத்தின் மூலம், 2011 முதல் 2013 வரை நான்கு கிணறுகளைத் துளையிட்டது.. அவற்றில் இரண்டு கிணறுகளில் எரிவாயு இருப்பதற்கான கண்டுபிடிப்புகள் இருப்பதாக அறிவித்தது.
ஆனால், கடலடிக்கு சுமார் 4.3 கிலோமீட்டர் ஆழத்தில் காணப்பட்ட வளங்களை எடுப்பது வர்த்தக ரீதியாகச் சாத்தியமில்லை என்று கூறி அந்த நிறுவனம் 2015ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து வெளியேறியது.
இலங்கை பெட்ரோலிய அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் நீல் டி சில்வா, ஆழ்கடல் கிணறு ஒன்றைத் துரப்பதற்கான செலவு சுமார் 40 மில்லியன் அமெரிக்க டாலர்களாக தொடர்ந்து இருப்பதாகக் கூறினார். இருப்பினும், எண்ணெய் மற்றும் எரிவாயுவை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் தற்போது மிகவும் திறமையானதாக மாறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எதிர்கால ஏலதாரர்களுக்கு பல தசாப்தங்களாக சேகரிக்கப்பட்டுள்ள விரிவான நில அதிர்வு (seismic), புவியியல் (geological) மற்றும் புவியியல் இயற்பியல் (geophysical) தரவுகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இலங்கையின் “பழமைவாத மதிப்பீட்டின்படி”, நாட்டின் கடல்சார் பகுதிகளில் சுமார் 9 டிரில்லியன் கன அடி எரிவாயுவும், 2 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெயும் இருக்கக்கூடும் என்று டி சில்வா தெரிவித்தார்.
இந்தப் பகுதியில் முதலாவது துளையிடும் பணிகளை 1971ஆம் ஆண்டு ரஷ்ய நிறுவனங்கள் மேற்கொண்டன. அப்போது குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு எதுவும் கிடைக்கவில்லை.
இதையடுத்து இலங்கை அரசு எண்ணெய் மற்றும் எரிவாயு தேடலை கைவிட்டது.
சுமார் இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர், நோர்வே நிறுவனங்களின் உதவியுடன் நில அதிர்வு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, இப்பகுதியில் மீண்டும் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகள் தொடங்கப்பட்டன



