உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு தொடர்பில் பொய்யான தகவல்களை வெளியிட்டு நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் மீது கோட்டை நீதவான் பசான் அமரசேன மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறைப்பாடு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் செயலாளர் சுகீஸ்வர பண்டார, ஶ்ரீலங்கா மக்கள் கட்சியின் தலைவர் அசங்க நவரத்ன மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் மஹிந்த பத்திரண ஆகியோருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பில் குறித்த நபர்கள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டுள்ளமை ஆரம்பக்கட்ட அவதானிப்பில் தெரியவந்துள்ளதாக கோட்டை நீதவான் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க நீதிமன்றம், நியாயாதிக்க சபை அல்லது நிறுவனத்தை அவமதித்தல் சட்டத்தின் கீழ், குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் பின்னர் நீதவான் முன்னிலையில் உண்மைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், குறித்த கருத்துக்கள் அடங்கிய திருத்தப்படாத இறுவட்டுக்களும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தன.



