நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே விக்கிரமசிங்கபுரம் பகுதியில் ஜி கேர் பவுண்டேஷன் என்ற குடி போதை மற்றும் மனநல மறுவாழ்வு மையம் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு குடி போதைக்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு சிகிச்சை மற்றும் மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இங்கு 20க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து ஆலோசனை பெற்று வருகின்றனர்.இந்த நிலையில், தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பகுதியை சேர்ந்த சாந்த பிரபு என்பவரது இரண்டு மகன்களில் மூத்த மகன் ரத்தினசாமி. இவருக்கு வயது 17. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சிறுவன் வீட்டில் பைக் கேட்டு அடம் பிடித்ததாகவும், அதனால் சிறுவன் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரது வீட்டில் அருகில் உள்ளவர் கொடுத்த தகவலின் அந்த சிறுவனுக்கு கவுன்சிலிங் கொடுப்பதாற்காக விக்கிரமசிங்கபுரத்தில் இயங்கி வரும்G -கேர் பவுண்டேஷன் மறுவாழ்வு மையத்தில் கடந்த மாதம் 9- ஆம் தேதி சிறுவனை தந்தை சேர்த்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று மாலை சிறுவனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி, மறுவாழ்வு மைய நிர்வாகத்தினர் அவரை அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, மறுவாழ்வு மைய நிர்வாகம் இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தந்தைக்கு உடனடியாக தகவல் அளித்தது.
தகவல் கிடைத்ததும் மருத்துவமனைக்கு விரைந்து வந்த தந்தை சாந்த பிரபு, தனது மகனின் உடலை பார்த்தபோது இரு கைகளிலும் கட்டப்பட்டதுபோன்ற தடயங்கள் இருந்ததாகவும், ஒரு கையில் ரத்தக் காயம் இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், மறுவாழ்வு மையத்தில் இருந்தவர்கள் தாக்கியதால்தான் தனது மகன் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி, அங்கிருந்த ஜி கேர் பவுண்டேஷன் ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
. இதையடுத்து, விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். சம்பவம் தொடர்பாக மறுவாழ்வு மைய ஊழியர்களிடமும், சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், சிறுவனின் உயிரிழப்புக்கான உண்மையான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே உறுதியாக தெரியவரும் என காவல்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



