அமெரிக்கா ஹார்முஸ் நீரிணையைகைப்பற்றுமா? – மிரட்டும் அமெரிக்கா

 

 

 

பாரசீக வளைகுடாவின் வாயிலில் அமைந்துள்ள ஹார்முஸ் நீரிணை, உலகப் பொருளாதாரத்தின் ‘இதயத் துடிப்பு’ என்று வர்ணிக்கப்படும் மிக முக்கியமான நீர் வழிப்பாதை. ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ கொள்கையைத் தீவிரமாக முன்வைக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் போவதாக எச்சரித்துள்ளார். ஆனால், சர்வதேசச் சட்டங்கள், புவிசார் அரசியல் மற்றும் ராணுவச் சவால்களைக் கடந்து ட்ரம்ப்பின் இந்த மிரட்டல் சாத்தியமாகுமா?

போர்ச் சூழலும் ட்ரம்ப் அதிரடியும்

அமெரிக்கா – ஈரான் இடையிலான ராணுவ மோதலால், ஹார்முஸ் நீரிணைப் பாதையை மூடியது ஈரான். தனது நட்பு நாடுகளின் கப்பல்களைத் தவிர மற்ற வணிகக் கப்பல்கள் அந்த வழியைக் கடக்கத் தடை விதித்தது. இதனால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து எட்டப்பட்ட 60 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அதிபர் ட்ரம்ப் திடீரென ரத்து செய்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர்ப் பதற்றம் ஏற்பட்டது.

இதற்கிடையே கடந்த வாரம் நியூயார்க்கில் உள்ள போலீஸ் அகாடமியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப், “ஈரானை நாம் முழுமையாகப் போரில் தோற்கடித்த பின், ஹார்முஸ் நீரிணையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவோம். ஹார்முஸ் கடற்பகுதியைச் சுற்றி அமெரிக்கப் படைகள் இருப்பதால், இப்போதே அது எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிதான்” எனத் தெரிவித்தார்.

ஈரானின் காரசாரமான எதிர்வினை

ட்ரம்ப்பின் பேச்சைக் கடுமையாகக் கண்டித்த ஈரான் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கஜீம் காஜிபாதாதி, “ஹார்முஸ் நீரிணையை ஒரு ட்வீட் மூலமாகவோ, உத்தரவு பிறப்பிப்பதன் மூலமாகவோ அல்லது பிரச்சாரப் பேச்சு மூலமாகவோ கைப்பற்றிவிட முடியாது. ஹார்முஸ் நீரிணை ஈரான் நாட்டுக்குரியது. ஈரானின் உத்தரவுக்கு ஏற்பவே அது திறக்கப்படும் அல்லது மூடப்படும்” எனப் பதிலடி கொடுத்தார். அதேவேளையில், ஓமன் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி நீரிணைப் போக்குவரத்தைச் சீரமைக்க விரும்புவதாகவும் ஈரான் தெரிவித்தது.

சட்டரீதியானத் தடைகளும் அதிகார வரம்பும்

அமெரிக்க முன்னாள் அரசின் தலைமை வழக்கறிஞர் புரூஸ் ஃபைன் கூறுகையில், “அமெரிக்க அரசியலமைப்பு ரீதியாக ஒரு நாட்டின் பகுதியைத் தனியாக இணைத்துக் கொள்ள ட்ரம்ம்புக்கு அதிகாரமில்லை. செனட்டின் அங்கீகாரமும் சட்டப்பூர்வ ஒப்பந்தமும் இன்றி இதைச் செய்வது ஐ.நா. சாசனத்தின்படி ஆக்கிரமிப்புக் குற்றமாகும்” என்று தெரிவித்துள்ளார்.

சிட்னி பல்கலைக்கழக சர்வதேசச் சட்ட நிபுணர் நடாலி க்ளீன் கூறுகையில், “இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜப்பான் மீது செலுத்திய அதிகாரத்தைப் போல ஈரான் மீது செலுத்தினால் ஒழிய இது சாத்தியமில்லை. தவிர, அமெரிக்காவில் 35 சதவீத மக்கள் மட்டுமே இப்போரை ஆதரிக்கின்றனர்” எனச் சுட்டிக்காட்டினார்.

மேலும், அமெரிக்காவின் ‘பேட்ரியாட்’ ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள் குறைந்து வருவதாகவும், பெட்ரோல் விலை உயர்வே அமெரிக்கர்களுக்கு முக்கியப் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

1982-ம் ஆண்டு ஒப்பந்தப்படி, சர்வதேச நீரிணைகளில் வணிகக் கப்பல்களுக்கு ‘தடையற்றப் பயண உரிமை’ உண்டு. இந்த எல்லைகள் (ஹார்முஸ் நீரிணை) ஈரான் மற்றும் ஓமனின் பிராந்தியக் கடல் எல்லைக்குள் வருகிறது. ஆனாலும் முழுமையாக அந்த நாடுகளுக்கும் சொந்தமில்லை என்பதால் அமெரிக்கா தனித்து இறையாண்மை செலுத்த முடியாது.

ஈரானின் ராணுவ பலம்:

ஹார்முஸ் நீரிணையின் வடக்கு கரைப்பகுதி குறுகிய கடல் பகுதி என்பதால், அமெரிக்காவின் மிகப் பெரிய விமானம் தாங்கிப் போர்க் கப்பல்கள் வருவது சிரமம். அவ்வாறு வந்தாலும், ஈரானின் கரையோர ஏவுகணைகளுக்கும் கண்ணிவெடிகளுக்கும் இலக்காகிவிடும்.

பொருளாதாரப் பேரழிவு:

நீரிணை மூடப்பட்டால் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 150 முதல் 200 டாலர் வரை உயரலாம். இது உலகளவில் கடுமையான பணவீக்கத்தையும் பொருளாதார முடக்கத்தையும் உருவாக்கும்.

சீனா – ரஷ்யா எதிர்ப்பு:

வளைகுடா எண்ணெயை குறிப்பாக ஈரானை அதிகமாக நம்பிக்கையிருக்கும் சீனா, ஏற்கெனவே அமெரிக்காவின் இந்தப் போரை விரும்பவில்லை. இதில் ஹார்முஸ் நீரிணையை ஆக்கிரமித்தால் அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா, சீனா ஒன்று சேர்ந்து செயல்படும். ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் சீனா மற்றும் ரஷ்யா தங்களின் ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்காவைத் தடுக்கும்.

அமெரிக்காவில் எதிர்ப்பு :

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பேச்சு உள்நாட்டிலேயே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. போரினால் ஏற்படும் பொருளாதாரச் சுமை மற்றும் பணவீக்கம் காரணமாக அமெரிக்கக் குடியரசுக் கட்சியினருக்கு இடையேயும், பொதுமக்கள் மத்தியிலும் எதிர்ப்பு அலை உருவாகியுள்ளது.

உலக நாடுகள் கண்டனம்:

ஜப்பான், தென்கொரியா மற்றும் இந்தியா போன்ற ஆசிய நாடுகள் தங்களின் பெரும்பாலான கச்சா எண்ணெய் தேவைகளுக்கு இந்த நீரிணை பாதையையே சார்ந்துள்ளன. இதனால் அமெரிக்காவின் ஒருதலைபட்சமான நடவடிக்கை உலகளாவிய கச்சா எண்ணெய் சப்ளையை முற்றிலும் சீர்குலைக்கும் என ஐரோப்பிய ஒன்றியமும் கவலை தெரிவித்துள்ளது.

மாற்று வழிகள் சாத்தியமாகுமா?

ஹார்முஸ் நீரிணை அடைக்கப்பட்டால், மாற்றுப் குழாய்வழிகள் மூலம் எண்ணெயைக் கொண்டுசெல்லும் வசதிகள் மிகக் குறைவாகவே உள்ளன. சவூதி அரேபியாவின் ‘கிழக்கு – மேற்கு’ குழாய்வழி மூலம் தினசரி 50 லட்சம் பேரல்களும், அபுதாபியின் ‘ஹாப்ஷன் – புஜைரா’ மூலம் 15 லட்சம் பேரல்களும் மட்டுமே அனுப்ப முடியும். ஹார்முஸ் வழியாக தினசரி செல்லும் 2 கோடி பேரல் எண்ணெய்க்கு ஈடான மாற்றுப் பாதை எதுவுமே இல்லை.

ட்ரம்ப்பின் பேச்சு ஈரானுக்குக் கொடுக்கும் அரசியல் அழுத்தமே தவிர, நடைமுறை ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் சாத்தியமற்றது. சர்வதேசச் சட்டங்கள், அமெரிக்க உள்நாட்டு அரசியல் எதிர்ப்பு மற்றும் உலகப் பொருளாதாரச் சீர்குலைவு ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, அமைதி, சமரசம், ராஜதந்திர பேச்சுவார்த்தை மூலமே ஹார்முஸ் நீரிணையில் அமைதியையும் வர்த்தகச் சுதந்திரத்தையும் உறுதிசெய்ய முடியும்.