
கூடாது. அதே நேரத்தில் உள்பிராகாரம், வெளிப்பிராகாரம், மூன்றாம் சுற்றுப் பிராகாரம் என்றெல்லொம் மிகப் பெரிய ஆலயங்களில் பிரித்து வைத்திருப்பார்கள். மூன்றாம் சுற்றுப் பிராகாரங்களில் சுவற்றை ஒட்டி நீளமாக மண்டபங்களை அமைத்து வைத்திருப்பார்கள். வெள்ளம் மற்றும் கடுமையான பஞ்சம் முதலான இயற்கைச் சீற்றங்களுக்கு உரிய காலங்களில், ஊருக்கு பொதுவாக நடுவில் அமைந்திருக்கும் அந்த ஆலயத்தில், பொதுமக்கள் தங்கிக் கொள்வதற்கு ஏதுவாக அவ்வாறு வடிவமைத் திருப்பார்கள். அதுபோன்ற ஆபத்துக் காலங்களில் ஆலயத்திலேயே தங்கி உணவு உண்பதோடு அங்கேயே உறங்கிக் கொள்ளலாம் என்பதற்காகத்தான் அந்த ஏற்பாட்டினைச் செய்திருப்பார்கள். சிதம்பரம், மதுரை முதலான மிகப்பெரிய ஆலயங்களில் இந்த அமைப்பினைக் காண இயலும். ஆக, ஆலயங்களின் வெளிப்புறத்தில் உள்ள மூன்றாம் சுற்றுப் பிராகாரங்களில் உறங்குவதில் தவறில்லை என்பதுதான் அடியேனின் கருத்து.
தங்கள் பணியைச் சரிவரச் செய்வதில் நவகிரஹங்கள் தவறுவதில்லை. அதிலும், சனியைப் பொறுத்த வரை தனது கடமையை தவறாது செய்வதில் முன்னிலையில் நிற்கும் கிரஹம். சிவாலயத்தில் அமையப் பெற்றிருக்கும் பரிவார தேவதைகளில் ஒன்றுதான் நவகிரஹங்கள். அந்த நவகிரஹங்களில் ஒன்று சனி. அவ்வளவுதான். நமக்கு கிரஹங்களின் காரணமாக சிரமம் உண்டாகிறது என்று சொன்னால், அது நம் கர்மவினையின் அடிப்படையில்தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்காக அந்த கிரஹங்களை தனியாக வழிபாடு செய்வதோடு இறைவனையும் சேர்த்து வழிபடுவதே சாலச் சிறந்தது. உதாரணத்திற்கு, ஒருவருக்கு ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச் சனி என்று ஏதோ ஒரு காரணத்தால் சிரமப்பட்டு வருகிறார் என்று வைத்துக் கொண்டாலும், அதற்காக சனியைத் தனியாக பகவானாக சித்தரித்து அவரை வழிபடுவதைவிட, உண்மையான பகவான் ஆகிய அந்த ஆதிமூலத்தை வணங்கி வழிபாடு செய்யுங்கள். கிரஹங்களால் உண்டாகும் கெடுபலனைக் குறைப்பது என்பதைவிட, அதைத் தாங்கக் கூடிய சக்தியைத் தர வல்லவர் இறைவன் ஒருவனே. அந்த ஆண்டவனை வழிபாடு செய்யுங்கள். பலன் பெறுங்கள்.
கண் திருஷ்டி என்பது இந்த உலகத்தில் பொதுவானது. அவரவர் நிலைக்கு ஏற்ப எல்லோருக்குமே திருஷ்டி தோஷம் என்பது உண்டாகத்தான் செய்யும். எல்லோரும் மனிதர்கள் தானே.. மனிதன் என்றாலே இயற்கையாகவே பொறாமை, ஆற்றாமை போன்ற குணங்கள் இருக்கத்தான் செய்யும். இதனால் உண்டாவதுதான் திருஷ்டி தோஷம் என்பது. ஆக, அது இருக்கிறதா இல்லையா என்பதை ஆராயாமல், அது நம்மைத் தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொள்வதே நல்லது. நம்முடைய பெரியவர்கள் நமக்குச் சொல்லித் தந்த பாரம்பரியமான பழக்க வழக்கங்களை முறையாக கடைபிடித்தாலே போதுமானது. பெண்கள் முகம் மற்றும் உடம்பினில் மஞ்சள் பூசி குளிப்பதோடு நெற்றி நிறைய அழகாக குங்குமத்தை இட்டுக் கொள்வதாலும், ஆண்கள் நெற்றியில் திருநீறு, திருமண் அல்லது கோபி சந்தனத்தை இட்டுக் கொள்வதாலும், திருஷ்டி தோஷம் என்பது நம்மைத் தாக்குவதில்லை. அத்துடன் ஹாரத்தி எடுத்தல், உப்புச் சுற்றிப் போடுதல், மிளகாய் வற்றலை சுற்றிப் போட்டு எரித்தல், எலுமிச்சம்பழம் சுற்றி பிழிதல், பூசணிக்காய் சுற்றி உடைத்தல், தேங்காய் சுற்றி உடைத்தல் முதலிய அனைத்துமே திருஷ்டி தோஷத்தை விலக்க வல்லதே. சுதர்சனர் வழிபாட்டினை மேற்கொள்வது, சுதர்சன ஹோமம், திருஷ்டிதுர்கா ஹோமம் முதலான ஹோமங்களைச் செய்வதாலும், திருஷ்டி தோஷம் என்பது விலகிவிடும்.
என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற எண்ணத்துடன், சதா சர்வ காலமும் தன் கடமையை பலனை எதிர்பாராமல் இறைவனுக்குத் தொண்டாற்றுவதும் தன்னுடைய முயற்சிகளை எல்லாம் இறைவனிடத்தில் ஒப்படைத்து, எல்லாம் நீயே என்று சரணாகதி அடைவதுமே பிறவிப்பிணி தீர்வதற்கான மருந்து. “ஓம் நமோ நாராயணாய’’ என்ற மந்திரத்தை மனதில் நிலை நிறுத்துங்கள். பிறவிப்பிணி என்பது தன்னால் அகன்றுவிடும்.
பொதுவாக தினசரி பூஜையின் போது, பூஜையறையில் ஏற்றி வைத்திருக்கும் தீபத்திற்கு நிவேதனம் செய்ய வேண்டிய அவசியமில்லை. இறைவனுக்கு செய்யும் உபசாரங்களில் தீபமும் ஒன்று. தூப, தீப, நிவேதனம் என்று சொல்வார்கள். அதாவது பூஜை செய்து முடிக்கும்போது செய்யப்பட வேண்டிய உபசார பூஜைகளில் முதலில் வருவது தூபம். அதாவது ஊதுவத்தி அல்லது சாம்பிராணி புகையை இறைவனுக்குக் காட்டி வழிபட வேண்டும். அதனைத் தொடர்ந்து வருவது தீப உபசாரம். நெய்திரியை ஏற்றி தீபம் காட்டி வழிபட வேண்டும். அல்லது ஏற்றி வைத்திருக்கும் தீபத்தின் பாதங்களில் புஷ்ப அட்சதைகளை சமர்ப்பித்து வணங்க வேண்டும். அதனைத் தொடர்ந்து நிவேதனம் செய்ய வேண்டும். நிவேதனம் என்பது பூஜையறையில் நாம் வைத்து வழிபடும் விக்கிரகங்களுக்கும், படங்களுக்கும்தான் செய்ய வேண்டும்.
தீபத்திற்கு என்று தனியாக நிவேதனம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில், ஆடி வெள்ளி, தை வெள்ளி, நவராத்திரி வெள்ளிக் கிழமைகள் மற்றும் சிறப்பு பூஜையாக திருவிளக்கு பூஜை செய்யும்போது அந்த திருவிளக்கில்தான் அம்பிகையை ஆவாஹணம் (எழுந்தருளல்) செய்வார்கள். அவ்வாறு விளக்கில் அம்பிகையை ஆவாஹணம் செய்து பூஜிக்கும்போது மட்டும் விளக்கிற்கு நிவேதனம் செய்து வணங்க வேண்டும். மற்றபடி தினசரி பூஜையின்போது விளக்கிற்கு என்று தனியாக நிவேதனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.



