‘
“நவராத்திரி” என்றால் சமஸ்கிருதத்தில் ‘ஒன்பது இரவுகள்’ என்று பொருள். ஆண்டின் பல்வேறு காலங்களில் வந்தாலும், புரட்டாசி (அல்லது ஐப்பசி) மாதத்தில் வரும் சாரதா நவராத்திரியே மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் பிரம்மாண்டமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு (2026) நவராத்திரி பெருவிழா அக்டோபர் 11 முதல் அக்டோபர் 20 வரை விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது. இதில் ஒன்பது நாட்கள் வெறும் சடங்கு மட்டுமல்ல; ஆன்மிக மற்றும் லெளகீக ஆற்றலை முழுமையாகப் பெறும் ஒரு அற்புதமான ஆன்மிகப் பயிற்சிக் காலம். பகல் நேரங்களில் உலகியல் கடமைகளில் மூழ்கியிருக்கும் மனம், இரவுவேளையில் அமைதியை நாடுகின்றது. இந்த ஒன்பது இரவுகளில் தேவியை வழிபடுவது மனதை ஒருமுகப்படுத்தி, ஆன்மிக விழிப்புணர்வைத் தரும்.
இரவுநேர வழிபாடுகள் மனதை வெளிப்புறத் தூண்டுதல்களில் இருந்து விடுவித்து, அகவயமான சுயபரிசோதனைக்கு வழிவகுக்கின்றன. நம்முள் இருக்கும் அகந்தை, பேராசை, சோம்பல் மற்றும் அறியாமை ஆகிய இருளை (அசுரர்களை) ஞான ஒளியைக் கொண்டு (சக்தி வழிபாடு) அழிப்பதே நவராத்திரியின் மூலத் தத்துவமாகும். இச்சை (துர்கை), கிரியை (லட்சுமி), ஞானம் (சரஸ்வதி) ஆகிய மூன்று சக்திகளின் வழிபாடும் மனிதனைப் பாசத் தளைகளில் இருந்தும், அறியாமையில் இருந்தும் விடுவித்து விடுதலை (முக்தி) நோக்கி அழைத்துச் செல்கிறது. நவராத்திரி என்பது வெறும் புறச்சடங்கு அல்ல; மனிதனின் உடலுக்குள் இருக்கும் தேஜஸை (ஆற்றலை) தட்டி எழுப்பி, ஆன்மிக அறிவையும் லெளகீக வெற்றியையும் ஒருசேரப் பெற உதவும் ஒரு தெய்வீக வாய்ப்பாகும்.
எல்லோரும் கொண்டாடும் நவராத்திரி
நவராத்திரி விழா இந்திய சமய மரபின் மிக முக்கியமான மூன்று பிரிவுகளான சைவம், வைணவம், சாக்தம் ஆகிய பிரிவுகளுக்கும் பொதுவான ஒரு விழா. சித்திரை, புரட்டாசி ஆகிய இரு மாதங்களையும் எமனின் கோரப்பற்கள் என்று கூறுவார்கள். இந்த இரு மாதங்களிலும் பிணிகள் உடலை துன்புறுத்தி, நலிவடையும்படி செய்யும். அதனைப் போக்கும் விதமாகவே நவராத்திரி வழிபாடு உள்ளது. சித்திரை மாதத்தில் வசந்த நவராத்திரியும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும் கொண்டாடப் படுகிறது. சாரதா நவராத்திரி அனைவரும் கொண்டாடும் தனிச்சிறப்பு பெற்றது. உத்தரபிரதேசத்தில் ராமலீலா, மேற்கு வங்காளத்தில் காளிபூஜை, துர்காபூஜை, கர்நாடகத்தில் தசரா பண்டிகை, என்று பல்வேறு பெயர்களில் இந்த நவராத்திரி விழா இந்தியா முழுவதும் கொண்டாடப் படுகிறது,மூன்று சமயப் பிரிவுகளுக்கும் உரிய பண்டிகையாக இருந்தாலும் இது பெண் தெய்வத்துக்கு உரிய பண்டிகை என்பதில் எந்த மாற்றமும் இல்லை.இந்திய நிகழ்வுகள்
தென்னாட்டின் கொண்டாட்ட முறைகள்
தென்னகத்தில் (குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா) நவராத்திரியின் மையப் புள்ளியாக அமைவது ‘கொலு’ ஆகும். ஒன்பது படிகளில் மரப்பொம்மைகள், புராணக் கதாபாத்திரங்கள், கொலு பொம்மைகளைக் கொண்டு பிரபஞ்சத்தின் படைப்புத் தத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் படிகளாக அடுக்கி வைப்பார்கள். தமிழகத்தில் அம்மன் வழிபாட்டோடு சேர்ந்து, இல்லங்களிலும் கோயில்களிலும் தேவார திருவாசகம், அபிராமி அந்தாதி, லலிதா சகஸ்ரநாமம் மற்றும் பாசுரங்கள் பாடி இறைவனை வழிபடும் வழக்கம் தீவிரமாக இருக்கும். ஒவ்வொரு நாளும் அம்மனுக்குத் தனித்தனியாக ஒன்பது விதமான சுண்டல்கள், பாயசங்கள், பாரம்பரியப் பிரசாதங்கள் செய்யப்பட்டு, மாலையில் கொலு பார்க்க வரும் பெண்களுக்குத் தாம்பூலம் மற்றும் பிரசாதம் வழங்கும் சமூகப் பண்பாடு தென்னகத்தின் தனிச்சிறப்பாகும்.தமிழ்நாடு அரசியல்
மார்க்கண்டேய புராணத்தில் உள்ள ‘தேவி மாகாத்மியம்’ (ஸ்ரீ துர்கா சப்தசதி) எனப்படும் நூலின்படி, அசுரர்களின் அரசனான மகிஷாசுரனை அழிக்க மும்மூர்த்திகளின் சக்தியால் அன்னை ஆதிசக்தி தோன்றி, அவனுடன் ஒன்பது இரவுகள் மற்றும் பகல்கள் உக்கிரப் போர் புரிந்தாள். பத்தாம் நாளான விஜயதசமியன்று அன்னை அவனை வதம் செய்தாள்.
இந்த வரலாற்று நிகழ்வைக் குறிக்கும் வகையில்தான் நவராத்திரி வழிபாடு தோன்றியது. இதிகாச காலத்தில் ராவணனை வதம் செய்வதற்கு முன்பு, ராமர் தன் வெற்றிக்காக நவராத்திரி விரதத்தைத் தொடங்கினார் என்று ஒரு செய்தி உண்டு.. நவராத்திரி இன்றைக்கு இவ்வளவு பிரமாண்டமாகவும் விரிவாகவும் நாடு முழுவதும் கொண்டாடப்படுவதற்குப் பின்வரும் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பிரமுகர்களின் பங்களிப்பு முக்கியக் காரணம் தேவி உபாசகர்கள்:
சக்தி உபாசனைஇடம் ஆராய்
ஆதி காலத்தில் காடுகள் மற்றும் மலைப் பகுதிகளில் சக்தி வழிபாட்டைத் தொன்மையாகச் செய்து வந்த முனிவர்களும், தாந்திரீக உபாசகர்களும் இந்த ஒன்பது நாள் வழிபாட்டை முறைப்படுத்தினர். தென்னிந்தியாவில் நவராத்திரி விழாவிற்குப் புத்துயிர் கொடுத்து, கொலு மற்றும் தசரா திருவிழாவை மிக விரிவாகக் கொண்டாடும் வழக்கத்தைக் கொண்டுவந்ததில் விஜயநகரப் பேரரசர்களின் பங்கு மிக முக்கியமானது. 15-ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் தலைநகரான ஹம்பியில் தசரா திருவிழா அரசு விழாவாக மிகப்பிரமாண்டமாக நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாகவே கொலு வழிபாடுகள் விரிவடைந்தன.வடகிழக்கு மாநிலங்களில் (குறிப்பாக மேற்கு வங்கம்) பதினாறாம் நூற்றாண்டுக்குப் பிறகு உள்ளூர் ஜமீன்தார்களும், மன்னர்களும் பொதுமக்களை இணைத்து ‘துர்கா பூஜை’யாக இதை மிக விமரிசையாகக் கொண்டாடத் தொடங்கினர். காலப்போக்கில் இது தேசிய விழாவாக உருவெடுத்தது. இது அசுரர்களை அழிக்க அன்னை நிகழ்த்திய போரின் நினைவாகவும், தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றியை நிலைநிறுத்தவும் தோன்றியது. பிற்காலத்தில் மன்னர்களும், ஆன்மிகப் பெரியோர்களும் இதனை ஒரு மக்கள் திருவிழாவாக மாற்றி விரிவாகக் கொண்டாடினர்.
முப்பெரும் தேவியர் வழிபாடு
நவராத்திரியின் ஒன்பது நாள்களும் மனிதனின் ஆன்மிக வளர்ச்சிக்குத் தேவையான மூன்று முக்கிய நிலைகளைக் குறிக்கும் வகையில், முப்பெரும் தேவியரான துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகியோருக்கு முறையே மூன்று மூன்று நாட்கள் பிரிக்கப்பட்டு வழிபடப்படுகிறார்கள். நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் இச்சா சக்திக்கு (விருப்பச் சக்தி) உரியவை. மனிதனின் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் அறியாமை, சோம்பல், பேராசை மற்றும் தீய குணங்களை வேரோடு கிள்ளி எறிவதே இக்காலகட்டத்தின் நோக்கமாகும். அசுரர்களின் கொட்டத்தை அடக்க அன்னை ஆதிசக்தி துர்கா தேவியாக உருவெடுத்து, தீய சக்திகளை அழித்த உக்கிர வடிவ காலமிது. இந்த நாட்களில் துர்கை மற்றும் காளி தேவியைப் பூஜித்து வழிபடுகிறோம்.
செல்வமும் நற்குணங்களும்
அறியாமை நீங்கிய மனத்தில் நற்குணங்களையும், ஆன்மிகச் செல்வங் களையும் நிலைநிறுத்துவதே இடை மூன்று நாள்களின் கிரியா சக்தி (செயல்பாட்டுச் சக்தி) வழிபாடாகும். வெறும் லெளகீகச் செல்வம் (தங்கம், பணம்) மட்டுமல்லாமல், அமைதி, கருணை, பொறுமை, மனநிறைவு மற்றும் நற்பண்புகள் ஆகிய உன்னதமான செல்வங்களை அன்னை மகாலட்சுமி இந்த நாட்களில் அள்ளி வழங்குகிறாள். மனக் குப்பைகளை அகற்றிய பின், அங்கே தெய்வீகச் செல்வம் குடியேறவும், குடும்பத்தில் ஐசுவரியம் பெருகவும் லட்சுமி தேவியை மனதார வழிபடும் காலம் இது.
மெய்ஞ்ஞானம் மற்றும் கலை
கடை மூன்று நாள்கள், தீமை அழிந்து, நற்குணங்கள் நிறைந்த மனத்தில் இறுதி நிலையாக ஞானம் ஒளிர வேண்டும். அதைக் குறிப்பதே ஞான சக்தியான சரஸ்வதி தேவியின் வழிபாடாகும். கல்வி, கலை, வித்தை மற்றும் உலகியல் அறிவைத் தாண்டிய மெய்ஞ்ஞானத்தை (ஆன்மிக அறிவு) வழங்கி, ஆன்மாவை விடுவிப்பது சரஸ்வதி தேவியின் அருளாகும்.கடைசி மூன்று நாள்களில் புத்தகங்கள், கலைப்பொருட்கள் மற்றும் இசைக் கருவிகளை வைத்து பூஜை செய்து, சரஸ்வதியை வழிபடுவதோடு, பத்தாம் நாளான விஜயதசமியில் கல்வித் தொடக்கத்தையும் (வித்யாரம்பம்) இதன் நீட்சியாகக் கொண்டாடுகிறோம். முதல் மூன்று நாள்கள் நம்மைத் தீமைகளில் இருந்து விடுவிக்கின்றன; அடுத்த மூன்று நாள்கள் நற்குணங்களையும் வளத்தையும் தருகின்றன; இறுதி மூன்று நாள்கள் மெய்ஞ்ஞான ஒளியை ஏற்றி முக்திக்கு வழிகாட்டுகின்றன. இந்த மூன்றும் இணைந்ததே முழுமையான நவராத்திரிப் பெருவிழா ஆகும்.
மகிஷாசுர வதம்
நவராத்திரிப் பெருவிழாவின் மிக முக்கியமான உச்சக்கட்ட நிகழ்வு மகிஷாசுர வதம். தேவி மாகாத்மியம் நூலில் விவரிக்கப்பட்டுள்ள கதையும், அதிலுள்ள ஆழமான ஆன்மிக உட்பொருளும் மனித வாழ்க்கைக்கு மிகப்பெரிய தத்துவத்தை உணர்த்துகின்றன. முதலில் கதையைப் பார்ப்போம். எருமைத் தலையும் மனித உடலும் கொண்ட மகிஷாசுரன் என்னும் அசுரன், தன் கடுமையான தவத்தால் பிரம்மனிடம் வரம் பெற்று தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பெரும் துன்பம் விளைவித்தான். ஆண்மகனால் தனக்கு மரணம் இருக்கக்கூடாது என்ற வரத்தின் செருக்கால் அவன் யாரையும் மதிக்காமல் மூவுலகையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான். தேவர்களின் துயரத்தைப் போக்க மும்மூர்த்திகளின் (பிரம்மன், விஷ்ணு, சிவன்) மற்றும் இதர தேவர்களின் தேஜஸ் (பேரொளி) ஒன்றிணைந்து ஒரு உக்கிரமான பெண் சக்தியாக உருவெடுத்தது. அவர்தான் அன்னை ஆதிசக்தி (துர்காதேவி).
ஒன்பது நாள் போர் சொல்லும் தத்துவம்
மகிஷாசுரனுக்கும் அன்னை துர்கா தேவிக்கும் இடையே கடுமையான போர் தொடர்ச்சியாக ஒன்பது இரவுகள் மற்றும் பகல்கள் நடைபெற்றது. மகிஷாசுரன் பல்வேறு விலங்கு வடிவங்களை எடுத்து தேவியை ஏமாற்ற முயன்றான்.இறுதி நாளில், எருமை உருவத்தில் இருந்த மகிஷாசுரனின் மீது அன்னை தன் சூலாயுதத்தால் பாய்ந்து அவனது அகந்தையை அடக்கி வதம் செய்தாள். இதனால் தேவிக்கு ‘மகிஷாசுர மர்த்தினி’ (மகிஷாசுரனை அழித்தவள்) என்ற திருநாமம் கிடைத்தது. இது வெறும் கதையா? இல்லை இந்த கதை நமக்கு சில அற்புதமான செய்திகளை சொல்கிறது.
1. எருமை மாடு என்பது ஆன்மிகத்தில் மடமை (அறியாமை), சோம்பல், அடம் மற்றும் மந்தமான குணங்களின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
2. மனிதனின் உள்ளே இருக்கும் ஆணவம், பேராசை, தீய எண்ணங்கள் மற்றும் ‘நான்’ என்ற அகந்தைதான் மகிஷாசுரன்.
3. இந்தத் தீய குணங்கள் கட்டுப்பாடு இல்லாமல் பெருகும்போது மனிதனின் ஆன்மா அழிவை நோக்கிச் செல்கிறது.
4. தேவியின் கைகளில் உள்ள ஒவ்வொரு ஆயுதமும் மனிதனின் மனத்திலிருக்கும் தீமைகளை அழிக்கத் தேவையான விவேகம், விடாமுயற்சி மற்றும் ஆன்மிக அறிவைக் குறிக்கின்றன.
5. நம்முள் இருக்கும் அறியாமை மற்றும் தீய குணங்களைச் சக்தி வாய்ந்த பக்தி மற்றும் ஞான ஒளியைக் கொண்டு முற்றிலும் அழித்துவிட்டு, உள்ளத்தில் அமைதியையும் தூய்மையையும் நிலைநாட்டுவதே மகிஷாசுர வதத்தின் உண்மையான உட்பொருளாகும்.
முதல் மூன்று நாட்கள் – அலங்காரம்
நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு செய்யப்படும் அலங்காரம் ஒரே மாதிரியாக எல்லா கோயில்களிலும் இருப்பதில்லை. அந்தந்த ஆலய மரபு, ஆகமம், ஸ்ரீ வித்யா வழிபாட்டு முறை ஆகியவற்றைப் பொறுத்து பெயர்களும் வரிசையும் மாறலாம். குறிப்பாக தமிழ்நாட்டில் துர்க்கை-லட்சுமி-சரஸ்வதி என்ற மூன்று நிலைகளாக ஒன்பது நாட்களைப் பார்ப்பது பரவலான மரபு. ஆனால், தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படும் ஒன்பது அலங்காரங்களையும் அதன் தத்துவத்தையும் எளிமையாக இப்படிப் புரிந்து கொள்ளலாம்.தமிழ்நாடு அரசியல்
முதல் நாள் -பாலா திரிபுரசுந்தரி. குழந்தை போன்ற தூய மனம். இறைவனை அடைய முதலில் மனம் தூய்மையாக வேண்டும்.
இரண்டாம் நாள் – அன்னபூரணி – உணவு என்பது உயிரின் ஆதாரம். பசியைப் போக்குவது மிகப்பெரிய தர்மம்.
மூன்றாம் நாள்காயத்ரி – அறிவும் ஞானமும் பெறும் நிலை. அறியாமை என்ற இருளை அகற்றும் சக்தி.
அடுத்த ஆறு நாட்கள்
நான்காம் நாள் -லலிதா திரிபுரசுந்தரி-அன்பு, அழகு, கருணை ஆகியவற்றால் வாழ்க்கையை இனிமையாக்கும் சக்தி.
ஐந்தாம் நாள் -சண்டிகா / சாமுண்டி-தீமையை எதிர்த்து நிற்கும் துணிவு.அநீதிக்கு எதிரான சக்தி.
ஆறாம் நாள் – மகாலட்சுமி – செல்வம் என்பது பணம் மட்டுமல்ல; உடல் நலம், குடும்ப நலம், மனநிறைவு ஆகியவையும் செல்வமே.
ஏழாம் நாள் -சப்தமி – சரஸ்வதி, கல்வி, கலை, அறிவு, ஞானம். மனிதனை உயர்த்துவது அறிவு.
எட்டாம் நாள் – பிரசித்தி பெற்ற துர்க்காஷ்டமி – பயத்தையும் தடைகளையும் வெல்லும் மன உறுதி.
ஒன்பதாம் நாள் -மகிஷாசுரமர்த்தினி – மனிதனுக்குள் இருக்கும் அகங்காரம், ஆணவம், தீய எண்ணங்களை அழித்தல்.
பத்தாம் நாள் -ராஜராஜேஸ்வரி / விஜயதசமி எல்லா சக்திகளும் ஒன்றாகி வெற்றியைத் தரும் நிறைவு.
வேறு விதமாக 9 நாட்கள் அலங்காரமும் தத்துவமும்
முதலாம் நாள் அலங்காரம்:சைலபுத்ரி வடிவம் – மலைகளின் மகளாகவும், சாந்த சொரூபமாகவும் காட்சி தருதல்.
இரண்டாம் நாள் அலங்காரம்: பிரம்மச்சாரிணி வடிவம் – தவக்கோலம் மற்றும் துறவறத்தின் மேன்மையை உணர்த்துதல்.
மூன்றாம் நாள் அலங்காரம்:சந்திரகாந்தா வடிவம் – நெற்றியில் சந்திரப் பிறையுடன் வீரம் மற்றும் கருணையை வெளிப்படுத்துதல்.
நான்காம் நாள் அலங்காரம்:கூஷ்மாண்டா வடிவம் – பிரபஞ்சத்தைப் படைத்த அமுதச் சுடராகத் தோன்றுதல்.
ஐந்தாம் நாள் அலங்காரம்:ஸ்கந்தமாதா வடிவம் – முருகனின் (ஸ்கந்தன்) தாயாகக் கையில் குழந்தையுடன் அன்னை அருள்புரிதல்.
ஆறாம் நாள் அலங்காரம்:காத்யாயனி வடிவம் – கோபமும் கருணையும் கலந்த மகரிஷி காத்யாயனரின் மகளாகக் காட்சி அளித்தல்.
ஏழாம் நாள் அலங்காரம்:காலராத்ரி வடிவம் – அச்சுறுத்தும் தோற்றத்தில் தீய சக்திகளை முற்றிலும் அழிப்பவளாகத் திகழ்தல்.
எட்டாம் நாள் அலங்காரம்: மகாகௌரி வடிவம் – தூய்மையின் அடையாளமாகவும், பசுமை மற்றும் அமைதியின் வடிவமாகவும் இருத்தல்.
ஒன்பதாம் நாள் அலங்காரம்:சித்திதாத்திரி வடிவம் – சகல சித்திகளையும், வரங்களையும் பக்தர்களுக்கு வாரி வழங்கும் கருணை வடிவம்.
குங்கும அர்ச்சனையும் லலிதா சகஸ்ரநாமமும்
நவராத்திரி நாட்களில் அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்வது சிறப்பான வழிபாடாகும். குங்குமம் மங்களத்தின் அடையாளம். அம்மனின் திருவடிகளில் குங்குமத்தைச் சமர்ப்பித்து, ஒவ்வொரு நாமத்தையும் சொல்லி அர்ச்சனை செய்வது, மனதை ஒருமுகப்படுத்தும் ஒரு வழிபாட்டு முறையாகும். இதனுடன் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நவராத்திரி வழிபாட்டில் இன்னும் சிறப்பு. அம்மனின் ஆயிரம் திருநாமங்களும் அவளுடைய பல்வேறு சக்திகளையும் குணங்களையும் எடுத்துச் சொல்கின்றன. ஒவ்வொரு நாமத்தையும் சொல்லும்போது, ஒரு குங்குமப் பொட்டினை அம்மன் திருவடிகளில் அல்லது அர்ச்சனைத் தட்டில் சமர்ப்பிப்பது வழக்கம். கூட்டாகச் சேர்ந்து லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து, குங்கும அர்ச்சனை செய்யலாம்.
“எனக்கு மட்டும் நன்மை வேண்டும்” என்ற பிரார்த்தனையிலிருந்து“எல்லோரும் நலமாக வாழ வேண்டும்” என்ற பிரார்த் தனைக்கு மனம் உயர்வதே கூட்டுப்
பிரார்த்தனையின் சிறப்பு.
கொலு – தத்துவம்
நவராத்திரி என்றாலே நம் நினைவுக்கு வருவது கொலு. படிக்கட்டுகளில் பொம்மைகளை அடுக்கி வைத்து வழிபடுவது வெறும் அலங்காரம் அல்ல. அதன் பின்னால் நம் முன்னோர்கள் அழகான ஒரு தத்துவத்தை வைத்திருக்கிறார்கள். கொலுவில் மேலிருந்து கீழாகப் படிகள் அமைக்கப்படுகின்றன. இந்தப் படிகள் படைப்பின் படிநிலைகளை நினைவுபடுத்து வதாக பார்க்கப்படுகின்றன.
மேல்நிலையில் தெய்வங்களையும், அதற்குக் கீழே முனிவர்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள் என்று பல வகையான உயிரினங்களையும், தாவரங்களையும் அமைப்பது வழக்கம். இதன் மூலம் உலகில் உள்ள அனைத்தும் ஒரே பரம்பொருளின் படைப்புகள் என்ற எண்ணம் வெளிப்படுகிறது. மனிதன் உயர்ந்தவன் என்று பெருமை கொள்ள முடியாது. அவனுடைய வாழ்க்கைக்கு தாவரங்கள் உணவையும் காற்றையும் தருகின்றன.
விலங்குகள் இயற்கைச் சமநிலையில் பங்கு வகிக்கின்றன. பறவைகள் விதை
களைப் பரப்புகின்றன. இவ்வாறு பார்த்தால், ஒவ்வொரு உயிருக்கும் இந்த உலகத்தில் ஒரு இடமும் ஒரு பயனும் இருக்கிறது. கொலுவின் படிகளில் பொம்மைகள் வெவ்வேறு நிலைகளில் இருந்தாலும், அவை அனைத்தும் ஒரே கொலுவின் ஒரு பகுதியாக இருக்கின்றன. அதுபோலத்தான் மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், தேவர்கள் என்று தோற்றத்தில் வேறுபட்டாலும், அனைத்தும் இறைவனுடைய படைப்பில் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கின்றன. கொலுவில் வைக்கப்படும் விவசாயக் காட்சிகள், திருமணக் காட்சிகள், கிராம வாழ்க்கை, சந்தை, பள்ளி, கோயில் போன்ற சிறிய பொம்மைகள் நம் சமூக வாழ்க்கையையும் நினைவுபடுத்துகின்றன. குழந்தைகள் அவற்றைப் பார்த்து விளையாடுவதோடு, வாழ்க்கையைப் பற்றியும் கற்றுக்கொள்கிறார்கள்.
படைத்தவனின் பார்வையில் அனைத்தும் சமமே கொலு என்பது வெறும் பொம்மைகளின் வரிசை அல்ல.
1. படிகளில் பொம்மைகள்.
2. பொம்மைகளுக்குள் வாழ்க்கை.
3. வாழ்க்கைக்குள் இயற்கை.
4. இயற்கைக்குள் இறைவன்.
கொலுவைப் பார்க்க வரும் பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, குங்குமம் கொடுப்பதும், குழந்தைகளுக்கு சுண்டல் வழங்குவதும் இந்த விழாவை ஒரு கூட்டுப் பண்பாட்டு நிகழ்வாக மாற்றுகிறது. வீடு மட்டும் அல்லாமல் உறவுகளும், அக்கம் பக்கத்தினரும் ஒன்றாகச் சேரும் வாய்ப்பாகவும் கொலு அமைகிறது.
கொலு நமக்குச் சொல்லும் செய்தி மிக எளியது. “படைப்பில் உயர்வு-தாழ்வு என்று நாம் உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால் படைத்தவனின் பார்வையில் அனைத்தும் அவனுடைய படைப்புகளே.”அந்த உணர்வை மனதில் விதைப்பதே கொலுவின் அழகான ஆன்மிகத் தத்துவம்.
அம்பு போடுதல் – விஜயதசமியின் சிறப்பு
விஜயதசமி வெற்றி தரும் நாள். இந்த நாளில் புதிய கலைகள், கல்வி மற்றும் தொழில்களைத் தொடங்கலாம்; மூன்று வயது நிரம்பிய குழந்தைகளுக்குக் கோவில்களிலும் கல்வி நிலையங்களிலும் அரிசியில் ‘ஹரி ஓம்’, ‘ஹரிஸ்ரீ ’ என்று எழுதி கல்வியைத் தொடங்கலாம்.சரஸ்வதி பூசையில் வைக்கப்பட்ட புத்தகங்களை விஜயதசமி அன்று காலையில் எடுத்து முறைப்படி வாசிக்கத் தொடங்கலாம். இந்த நாளில் சில ஆலயங்களிலும் ஊர்களிலும் வன்னி மரத்தடியில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும். இது ஒரு பழமையான மரபு. தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றியை நினைவுபடுத்தும் அடையாளமாக இது கருதப்படுகிறது.
அம்பு என்பது வெறும் ஆயுதம் அல்ல. அது நமது குறிக்கோளையும், அதை நோக்கிச் செல்லும் உறுதியையும் குறிக்கிறது. வில் இலக்கை நோக்கி வளைந்து நிற்பது போல, மனிதனும் தனது மனதை ஒரு நல்ல இலக்கை நோக்கி ஒருமுகப்படுத்த வேண்டும். அம்பு இலக்கை நோக்கிப் பாய்வது போல, நமது எண்ணங்களும் செயல்களும் தர்மத்தை நோக்கிச் செல்ல வேண்டும்.
ஒன்பது நாட்கள் அம்மனை வழிபட்டு மனத்தைத் தூய்மைப்படுத்திய பிறகு, பத்தாம் நாளில் அம்பை இலக்கை நோக்கி செலுத்துவதுபோல, நல்ல எண்ணத்தை செயலாக மாற்ற வேண்டும் என்பதே இந்த மரபின் உள்ளார்ந்த பொருள்.
“தீமை எவ்வளவு வலிமையாக இருந்தாலும், தர்மத்தின் பக்கம் உறுதியாக நின்றால் வெற்றி நிச்சயம்” என்ற நம்பிக்கையைத் தலைமுறைகளுக்குக் கொண்டு செல்லும் ஒரு பண்பாட்டு அடையாளமாகத்
திகழ்கிறது நவராத்திரி பண்டிகை.



