
பத்துப் பொருத்தத்தோடு மட்டும் மணப்பொருத்தம் முடிவதில்லை. உற்றுப்பார்த்தால் பத்தும் ஆண், பெண் என இருவருக்குள்ளும் நிகழவிருக்கும், நிகழும் விஷயங்களைத்தான் பேசுகின்றன. நட்சத்திரங்களுக்குள் எந்தெந்த விஷயங்கள் பொருந்திவருகின்றன என்றுதான் வரும். வெறும் இருவர் சம்பந்தபட்டதாகத்தான் நட்சத்திரப் பொருத்தங்கள் இருக்கும். நாமிருவரும் எப்படி எனும் அடிப்படைதான் நட்சத்திரப் பொருத்தம். ஆனால், நம்மைச் சுற்றிலும் உலகம் உண்டு. உற்றார் உறவினர்கள் உண்டு. எல்லாவற்றையும் தாண்டி நாம் பிறந்த அன்று கிரகங்களின் நிலையைச் சொல்லும் ஜாதகமும் உண்டு. அவற்றையும் சேர்த்துத்தான் பார்க்க வேண்டும். அதைத்தான் ஜாதகப் பொருத்தம் என்கிறேன்.
‘‘அதற்கு என்ன செய்ய வேண்டும்’’?
‘‘நட்சத்திரத்தைக்கொண்டு பொருத்தம் பார்த்தீர்களல்லவா? இப்போது இருவரின் ஜாதகங்களையும் வைத்து கிரகங்கள் எங்கெங்கு எப்படி உள்ளன என்று ஆராய வேண்டும். நட்சத்திரப் பொருத்தமும் ஜாதகப் பொருத்தமும் ரயில் தண்டவாளம் போன்றது. இரண்டும் சேர்ந்துதான் திருமண வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. இதைப்பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்ப்போமா?’’
‘‘ஒரு ஜெனரல் ஹெல்த் செக்கப் பண்ணிட்டா நல்லது’’ என்று மருத்துவர் கூறினால் அதுதான் நட்சத்திரப் பொருத்தம். ‘‘ஆனா, இந்த சிம்டம்ஸ் வந்தா தனியா அந்த இடத்தை மட்டும் ஸ்கேன் பண்ணி பார்த்துடறது நல்லது’’ என்று சொன்னால் அதுதான் ஜாதகப் பொருத்தம்.
‘‘உங்களுக்கும் எனக்கும் என்னங்க சண்டை. ஆனா, உங்கம்மா ஏன் நமக்குள்ள பிரச்னையை உண்டுபண்றாங்க’’ எனும்போது நட்சத்திரப் பொருத்தம் கூட தள்ளித்தான் நிற்கும். ஏனெனில், நட்சத்திரப் பொருத்தம் என்பது நமக்குள் பொருத்தம் எப்படி என்று மட்டும் பார்க்கும். ஆனால், ஜாதகப் பொருத்தம் நம்மைச் சுற்றியுள்ளோரைப்பற்றி நம்முடைய ஜாதகம் என்ன சொல்கிறது என விரிவாக அலசும்.
‘‘அப்போ ரெண்டு பேர் ஜாதகத்தையும் வச்சுத்தான் இதை பார்க்கணுமா‘‘
‘‘ஆமாம். பையனுக்கு பெண்ணை பிடித்திருக்கிறது. பெண்ணுக்கு பையனை பிடித்திருக்கிறது. பொருத்தங்களும் நன்றாக உள்ளன. ஆனால், பெண்ணின் ஜாதகத்தில் மாமியாரைப் பற்றிச் சொல்லும் இடத்தில் பகைக்கோள் இருக்கிறது. தினமும் சண்டை. புருஷனிடம் பஞ்சாயத்து. ‘‘உங்க ரெண்டு பேர் சண்டையில நான் எங்கேயாவது ஓடிப் போயிடலாம்போல இருக்கு’’ என்கிற புலம்பல் அதிகரிக்கிறது. இந்த பிரச்னைகளை ஜாதகப் பொருத்தம் பார்த்து ஓரளவு தவிர்க்கலாம் என்பது துணிபு. ‘‘உனக்கு அம்மான்னா… எனக்கும் அவங்க அம்மாதான்’’ என்று மனம் பக்குவம் பெறும்போது மாமியார் தாயாகிறார். நாத்தனார் நட்போடு இருப்பார். குடும்பத்தில் குதூகலத்திற்கு பஞ்சம் இருக்காது.
நட்சத்திரப் பொருத்தம் என்பது சல்லி வேர்களை போன்றது. ஜாதகப் பொருத்தம் என்பது ஆணிவேரைப் போன்றது. ஆணிவேர் வலிமையாக இருப்பின் மரம் விழாது. நட்சத்திப் பொருத்தம் பொதுவான மன நலன்களையும், குணநலன்களையும் தீர்மானிக்கின்றன. ஜாதகப் பொருத்தம் எப்படிப்பட்ட வாழ்க்கைத்துணை அமைய வேண்டும். எங்கிருந்து அமையும். கல்வி, வசதி வாய்ப்பு, முதலாவது பெண்ணா மூணாவது பெண்ணா அல்லது சொந்தமா அசலா என்று நான்கு முனைகளிலும் நின்று யோசிக்கும். சஷ்டியப்த பூர்த்தியிலிருந்து சதாபிஷேகம் வரை நீட்டிக்கக் கூடியதுதான் ஜாதகப் பொருத்தம்.



