பிரான்ஸில் யாழ்ப்பாணப் பெண் சடலமாக மீட்பு:

கார் வாங்கச் சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம் – வாகனத் திருத்தக உரிமையாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

பிரான்ஸில் யாழ்ப்பாணப் பெண் சடலமாக மீட்பு: கார் வாங்கச் சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம் – வாகனத் திருத்தக உரிமையாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

பிரான்ஸின் வால்-துவாஸ் (Val-d’Oise) பகுதியில் வசித்து வந்த 51 வயதுடைய மகேந்திரதேவி என்ற தமிழ் பெண் உயிரிழந்த சம்பவம் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் 9ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த அவர், அன்றைய தினம் கார் ஒன்றை வாங்குவது தொடர்பாகப் பாரிஸின் புறநகர்ப் பகுதியான லா கோர்னுவ் (La Courneuve) நகரிலுள்ள வாகனத் திருத்த நிலையமொன்றிற்குச் (Garage) சென்றிருந்ததாக அவரது பிள்ளைகள் காவற்துறையினரிடம் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அவரது கையடக்கத் தொலைபேசியின் இறுதி சமிக்கை (Geolocation) லா கோர்னுவ், 65 rue Maurice-Berteaux எனும் முகவரியிலுள்ள வாகனத் திருத்தகத்தைக் காட்டியது. அதன்பேரில் நவம்பர் 14ஆம் திகதி இரவு பிரான்ஸ் காவற்துறையினர் (SDPJ 93 மற்றும் BAC பிரிவினர்) குறித்த இடத்தில் சோதனை நடத்தியபோது, திருத்தகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த Volkswagen Caddy ரக வாகனத்தின் பின்பகுதியில் தார்ப்பாயால் சுற்றப்பட்ட நிலையில் மகேந்திரதேவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் வாகனத் திருத்தக உரிமையாளர், அவரது மனைவி மற்றும் குறித்த வாகனத்தின் உரிமையாளர் ஆகிய மூவரும் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், பொபிக்னி அரச தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் (Parquet de Bobigny) நேற்று (நவம்பர் 18) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ தகவலின்படி, வாகனத் திருத்தக உரிமையாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு (Homicide volontaire) பதிவு செய்யப்பட்டு, அவர் விளக்கமறியலில் (Dளூtention provisoire) வைக்கப்பட்டுள்ளார்.

பிரான்ஸின் முன்னணி நாளிதழான Le Parisien மற்றும் பொபிக்னி அரச தரப்பு வழக்கறிஞர் அலுவலகத் தகவல்கள் ஊடாகவே உயிரிழந்த பெண்ணின் அடையாளம் மற்றும் காவற்துறை விசாரணை விபரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

உயிரிழந்த மகேந்திரதேவி யாழ்ப்பாணம் – சாவகச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்ற தகவல் புலம்பெயர் தமிழ் சமூக வட்டாரங்கள் ஊடாகப் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.