
பெண்களைப் பாதிக்கும் பொதுவான புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோயும் ஒன்று. வயது மற்றும் குடும்பத்தில் ஏற்கெனவே யாருக்காவது இந்த நோய் இருந்த வரலாறு ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. இருப்பினும், இளம் பெண்களுக்கும், அறியப்பட்ட ஆபத்துக் காரணிகள் எதுவும் இல்லாத பெண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் ஏற்படலாம்.
வாழ்க்கை முறை, ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிவது ஆகியவை மார்பக ஆரோக்கியத்துடன் எவ்வாறு தொடர்புடையவை என்பதைப் புரிந்துகொள்வது, பெண்கள் சரியான முடிவுகளை எடுக்க உதவும் என்கிறார் புற்றுநோய் நிபுணர் அஸ்மி சௌந்தர்யா.
அன்றாட மன அழுத்தம் மார்பகப் புற்றுநோய் வரும் அபாயத்தை அதிகரிக்குமா?
வேலைச்சுமை, குடும்பப் பொறுப்புகள் மற்றும் பணம் தொடர்பான கவலைகள் ஆகியவை அன்றாட வாழ்க்கையில் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இருப்பினும், அன்றாட மன அழுத்தமே மார்பகப் புற்றுநோய்க்கு நேரடிக் காரணம் என்பதை தற்போதைய ஆய்வுகள் உறுதிப்படுத்தவில்லை.
நீண்ட காலமாகத் தொடரும் மன அழுத்தமானது தூக்கம், உணவுப் பழக்கம் மற்றும் உடல் செயல்பாடுகளைப் பாதிக்கலாம். இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் தாக்கத்தை
ஏற்படுத்தக்கூடும். உடற்பயிற்சி செய்வது, போதுமான நேரம் தூங்குவது, மனதை அமைதிப்படுத்தும் பயிற்சிகளை மேற்கொள்வது மற்றும் குடும்பத்தினர், நண்பர்களின் ஆதரவைப் பெறுவது ஆகியவை உடல் மற்றும் மன நலனை மேம்படுத்த உதவும்.
ஆனால், இவை மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது.
மன அழுத்தத்தை அனுபவிப்பதற்காகப் பெண்கள் தங்களைக் குற்றம் சொல்லிக் கொள்ளக் கூடாது. மன அழுத்தம் மட்டுமே புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்றும் நினைக்கக் கூடாது.
மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பிறகு மார்பகப் புற்றுநோய் வரும் அபாயம் ஏன் அதிகரிக்கிறது?
வயது அதிகரிக்கும்போது மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் பொதுவாக அதிகரிக்கிறது. மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பிறகு பல பெண்களுக்கு இந்த நோய் கண்டறியப்படுகிறது. வயது அதிகரிப்பதும், ஒரு பெண்ணின் வாழ்நாள் முழுவதும் ஹார்மோன்களின் தாக்கம் ஏற்படுவதும் இந்த அபாயத்திற்குப் பங்களிக்கின்றன.
மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பிறகு கருப்பைகள் (Ovaries), ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனை மிகக் குறைவாகவே உற்பத்தி செய்கின்றன. ஆனால், உடலில் உள்ள கொழுப்புத் திசுக்கள் தொடர்ந்து சிறிதளவு ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்கின்றன. மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பிறகு அதிக உடல் எடையுடன் இருப்பது, சில வகையான மார்பகப் புற்றுநோய்கள் ஏற்படும் அபாயத்துடன் தொடர்புடையது.
குடும்பத்தில் மார்பகப் புற்றுநோய் இருந்த வரலாறு, மரபணு மாற்றங்கள் மற்றும் மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பிறகு சில வகையான ஹார்மோன் சிகிச்சைகளைப் பெறுவது போன்றவையும் பிற ஆபத்துக் காரணிகளாகும். மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்பதற்காக ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் கண்டிப்பாக ஏற்படும் என்று அர்த்தமில்லை.
மார்பகப் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க எவ்வளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும்?
தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதுடன் தொடர்புடையது. குறிப்பாக, மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பிறகு இது முக்கியத்துவம் பெறுகிறது.
பெரியவர்கள் ஒவ்வொரு வாரமும் 150 முதல் 300 நிமிடங்கள் வரை மிதமான வேகத்தில் உடற்பயிற்சி செய்யலாம். அல்லது, 75 முதல் 150 நிமிடங்கள் வரை அதிக வேகத்தில் உடற்பயிற்சி செய்யலாம்.
வேகமாக நடப்பது, மிதிவண்டி ஓட்டுவது, நீச்சல் அடிப்பது மற்றும் நடனம் ஆடுவது போன்றவை எளிதில் மேற்கொள்ளக்கூடிய பயிற்சிகள். வாரத்தில் ஐந்து நாட்கள், ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்கள் நடப்பது நல்ல உடற்பயிற்சிப் பழக்கத்தை உருவாக்க உதவும்.
உடற்பயிற்சி உடல் எடையைக் கட்டுப்படுத்தவும், ஹார்மோன்களின் செயல்பாடுகள் மற்றும் உடலில் உணவு ஆற்றலாக மாறும் செயல்முறைகளைச் சீராக வைத்திருக்கவும் உதவலாம். இருப்பினும், உடற்பயிற்சி செய்வதால் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை முழுமையாக நீக்க முடியாது.
மார்பகப் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடிய பிற காரணிகள் என்ன?
வயது, குடும்பத்தில் மார்பகப் புற்றுநோய் இருந்த வரலாறு மற்றும் போன்ற மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்கள் முக்கியமான ஆபத்துக் காரணிகளாகும். மது அருந்துவது, மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பிறகு அதிக உடல் எடையுடன் இருப்பது, இனப்பெருக்கம் மற்றும் ஹார்மோன்கள் தொடர்பான சில காரணிகள், முன்பு சில வகையான மார்பகப் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது ஆகியவையும் மார்பகப் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
இருப்பினும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆபத்துக் காரணிகள் இருப்பதால் ஒருவருக்குப் புற்றுநோய் கண்டிப்பாக ஏற்படும் என்று அர்த்தமில்லை. மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பல பெண்களுக்கு, குடும்பத்தில் இந்த நோய் இருந்த வரலாறு தெரியாமல் இருக்கலாம். அதேபோல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதால் புற்றுநோய் ஏற்படவே ஏற்படாது என்றும் உறுதியாகக் கூற முடியாது.
எந்தெந்த மார்பக மாற்றங்களைப் பெண்கள் ஒருபோதும் அலட்சியப்படுத்தக் கூடாது?
மார்பகத்திலோ அல்லது அக்குள் பகுதியிலோ புதிதாகக் கட்டி தென்பட்டால், மார்பகத்தின் அளவு அல்லது வடிவத்தில் மாற்றம் ஏற்பட்டால், தோலில் பள்ளம் போன்ற மாற்றம் தெரிந்தால், தொடர்ந்து சிவந்து காணப்பட்டால், முலைக்காம்பு உள்ளிழுத்துக் காணப்பட்டால் அல்லது முலைக் காம்பிலிருந்து வழக்கத்திற்கு மாறான திரவம் வெளியேறினால் பெண்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
குறிப்பாக, வெளியேறும் திரவத்தில் ரத்தம் இருந்தால் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். மார்பகத்தில் ஏற்படும் எல்லாக் கட்டிகளும் புற்றுநோயாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதேபோல், மார்பக வலி மட்டும் பொதுவாக மார்பகப் புற்று நோயின் அறிகுறியாக இருப்பதில்லை.
இருப்பினும், புதிதாக ஏற்படும் அல்லது தொடர்ந்து நீடிக்கும் மாற்றங்களை அலட்சியப்படுத்தக் கூடாது. மருத்துவரின் பரிசோதனை இல்லாமல் வீட்டிலேயே வைத்தியம் செய்து அவற்றைக் குணப்படுத்த முயற்சிக்கக் கூடாது.
பெண்கள் எப்போது மார்பகப் புற்றுநோய்ப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்?
பரிசோதனை எப்போது செய்ய வேண்டும் என்பது வயது, தனிப்பட்ட ஆபத்துக் காரணிகள், குடும்ப வரலாறு மற்றும் மருத்துவ வழிகாட்டுதல்கள் ஆகியவற்றைப் பொறுத்தது. மேமோகிராம் எனப்படும் மார்பகப் பரிசோதனை மூலம், அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய உதவும்.
மரபணு மாற்றங்கள் அல்லது குடும்பத்தில் பலருக்கு மார்பகப் புற்றுநோய் இருந்த வரலாறு காரணமாக அதிக அபாயத்தில் உள்ள பெண்களுக்கு, முன்கூட்டியே பரிசோதனை செய்வதும் அவர்களுக்கேற்ற தனிப்பட்ட பரிசோதனைத் திட்டமும் தேவைப்படலாம். எந்த வயதிலும் மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கவனித்துக் கொள்வது அவசியம். ஆனால், இது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளுக்கோ அல்லது மருத்துவ மதிப்பீட்டிற்கோ மாற்றாகாது. எந்த வயதில், எத்தனை முறை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பதைப் பெண்கள் தங்கள் மருத்துவருடன் கலந்தாலோசித்து முடிவு செய்ய வேண்டும்.
மார்பகப் புற்றுநோயைத் தடுக்க முடியுமா?
எல்லா வகையான மார்பகப் புற்றுநோய்களையும் தடுக்க முடியாது. இருப்பினும், ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பது, தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது, மது அருந்துவதைக் குறைப்பது மற்றும் தங்களுடைய தனிப்பட்ட, குடும்ப மருத்துவ வரலாற்றைப் புரிந்துகொள்வது ஆகியவை, புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதற்கான சரியான முடிவுகளை எடுக்கப் பெண்களுக்கு உதவும்.
முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியது
மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்குப் பல காரணிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுகின்றன. வாழ்க்கை முறையில் செய்யப்படும் ஒரே ஒரு மாற்றத்தால் எல்லா வகையான மார்பகப் புற்றுநோய்களையும் தடுக்க முடியாது. ஆபத்துக் காரணிகளைப் பற்றி விழிப்புணர்வுடன் இருப்பது, மார்பகத்தில் வழக்கத்திற்கு மாறான மாற்றங்கள் ஏற்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது, பரிந்துரைக்கப்பட்ட பரிசோதனைகளைச் சரியான நேரத்தில் செய்துகொள்வது ஆகியவை மார்பக ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
மேமோகிராம் எனப்படும் மார்பகப் பரிசோதனை மூலம், அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய உதவும். மரபணு மாற்றங்கள் அல்லது குடும்பத்தில் பலருக்கு மார்பகப் புற்றுநோய் இருந்த வரலாறு காரணமாக அதிக அபாயத்தில் உள்ள பெண்களுக்கு, முன்கூட்டியே பரிசோதனை செய்வதும் அவர்களுக்கேற்ற தனிப்பட்ட பரிசோதனைத் திட்டமும் தேவைப்படலாம்



