
பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பேட்டின்சன் அடுத்த ஜேம்ஸ் பாண்டாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் ஹாலிவுட் திரையுலகில் கவனம் பெற்றுள்ளன. டேனியல் கிரேக்கிற்குப் பிறகு பெருமைக்குரிய 007 கதாபாத்திரத்தில் நடிக்க ராபர்ட் பேட்டின்சன் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இந்தத் தேர்வுக்குப் பின்னணியில் என்ன காரணங்கள் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
“தி நேம் இஸ் பாண்ட்… ஜேம்ஸ் பாண்ட்!” என்ற உலகப் புகழ்பெற்ற வசனத்தைக் கேட்டிராத ஹாலிவுட் ரசிகர்கள் இருக்க முடியாது. பிரிட்டிஷ் எழுத்தாளர் இயான் ஃபிளெமிங் என்பவரால் 1953-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கற்பனை உளவாளி கதாபாத்திரமான ஜேம்ஸ் பாண்ட், 1962-ஆம் ஆண்டு வெளியான ‘டாக்டர் நோ’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
அன்று முதல் இன்று வரை ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிப்பதை ஹாலிவுட் நடிகர்கள் மிகப்பெரிய கவுரவமாகக் கருதி வருகின்றனர். சீன் கானரி தொடங்கி டேனியல் கிரேக் வரை ஆறு நடிகர்கள் இந்த 007 கதாபாத்திரத்தில் நடித்து உலகப் புகழ்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீடித்து வருகிறது. அந்தப் பட்டியலில் ‘தி பேட்மேன்’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ராபர்ட் பேட்டின்சனின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
அபாரமான நடிப்புத் திறன், கதாபாத்திரத்திற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொள்ளும் தன்மை, கண்களில் வெளிப்படும் தீவிரம் மற்றும் ஆக்ரோஷம் ஆகியவை அவருக்குச் சாதகமான அம்சங்களாகக் கருதப்படுகின்றன.
அடுத்த ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தை இயக்கவுள்ள டெனிஸ் வில்லெனுவே, ஜேம்ஸ் பாண்ட் ஒரு சாதாரண உளவாளியாக மட்டுமின்றி, ஆழமான மனநிலையும் இருண்ட தன்மையும் கொண்ட கதாபாத்திரமாக வெளிப்பட வேண்டும் என விரும்புவதாகக் கூறப்படுகிறது. அத்தகைய எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில், ஆழமான கோபத்தையும் கூர்மையான புத்திசாலித்தனத்தையும் தனது நடிப்பில் வெளிப்படுத்தும் திறன் ராபர்ட் பேட்டின்சனுக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.
அத்துடன், அவரது இயல்பான பிரிட்டிஷ் ஆங்கில உச்சரிப்பு, மிடுக்கான தோற்றம், வசீகரம் ஆகியவையும் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமான அம்சங்களாகப் பார்க்கப்படுகின்றன. ஆபத்தான சூழல்களிலும் முகத்தில் வெளிப்படும் இருண்ட நகைச்சுவை உணர்வும், தனித்துவமான உடல்மொழியும் அவரை மற்ற நடிகர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன.
இதற்கிடையே, அடுத்த ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தை டெனிஸ் வில்லெனுவே இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் 2028-ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்டன் மார்ட்டின் சொகுசு கார்கள், நேர்த்தியான கோட் சூட், அதிநவீன தொழில்நுட்பம் என மீண்டும் ஒரு புதிய பரிமாணத்தில் 007 கதாபாத்திரம் திரையில் தோன்றும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
எனினும், ராபர்ட் பேட்டின்சன் அடுத்த ஜேம்ஸ் பாண்டாக அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட அறிவிப்பு வெளியாகாத நிலையில், 007 கதாபாத்திரத்தில் அவர் நடிப்பாரா என்ற கேள்விக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகே விடை கிடைக்கும்.



