
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள மிக உயரமான பொது முதலீட்டு நிதிய கோபுரத்தின் மீது ஈரான் ஆதரவு ஹவுதி தீவிரவாத அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக ஈரான் ஆதரவு ஹவுதி தீவிரவாதிகள் சவுதி அரேபியா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சவுதியின் நிதி மாவட்டத்தில் உள்ள 80 மாடிகள் கொண்ட பொது முதலீட்டு நிதிய கோபுரத்தின் மீது நேற்று ஹவுதி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ரியாத்தின் மிக உயரமான இந்த வானளாவிய கட்டிடத்தின் 8 மாடிகளில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. உடனடியாக நிதி மாவட்டத்திற்கு செல்லும் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்பட்டு மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இதற்கிடையே சவுதி கூட்டணி படை செய்தித் தொடர்பாளர் கர்னல் துர்கி அல்-மால்கி கூறுகையில், ‘தெற்கு பகுதியை நோக்கி ஹவுதி தீவிரவாதிகள் ஏவிய 4 ஏவுகணைகளை வான் பாதுகாப்பு படைகள் இடைமறித்து அழித்தன. மேலும் ரியாத் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட ஏவுகணை தளத்தை ஏமன் நாட்டின் தமார் பகுதியில் தாக்கி அழித்தோம். உயிரிழப்புகள் ஏதுமில்லை’ என்று தெரிவித்தார். இதனிடையே சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்கர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்திருந்தது.



