அமெரிக்க விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் இரண்டு ஆமைகளை மறைத்து கடத்த முயன்றபெண்- ?

 

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி சர்வதேச விமான நிலையத்தில், பாதுகாப்பு சோதனையின் போது பெண் ஒருவரின் விசித்திரமான செயல் அதிகாரிகளை உறைந்து போகச் செய்துள்ளது. தனது உள்ளாடைக்குள் இரண்டு உயிருள்ள ஆமைகளை மறைத்து வைத்து கடத்த முயன்ற அந்தப் பெண், அதிகாரிகளிடம் கச்சிதமாக மாட்டிக்கொண்டார்.

விமான நிலைய பாதுகாப்புச் சாவடியில் பயணிகள் அனைவரும் வழக்கமான ஸ்கேனிங் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது ஒரு பெண்ணின் நெஞ்சுப் பகுதியில் ஏதோ அசாதாரணமான அசைவு இருப்பதை மேம்பட்ட இமேஜிங் தொழில்நுட்ப ஸ்கேனர் (Advanced Imaging Technology) காட்டியது. இதனால் சந்தேகமடைந்த பெண் அதிகாரிகள், அவரைத் தனியறைக்கு அழைத்துச் சென்று தீவிர சோதனை நடத்தினர்.

அதிகாரிகள் நடத்திய சோதனையில், அந்தப் பெண் தனது உள்ளாடைக்குள் (Brassiere) இரண்டு சிறிய ஆமைகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆமைகள் நகராமல் இருப்பதற்காக, அவற்றை துணி மற்றும் பிளாஸ்டிக் கவரால் இறுக்கமாகச் சுற்றி ஆடைக்குள் வைத்திருந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அவரிடம் விசாரித்தபோது, “இந்த ஆமைகள் என்னுடைய எமோஷனல் சப்போர்ட் (Emotional Support) விலங்குகள். எனக்கு மன அமைதி தருவதற்காக இவற்றை உடன் வைத்துள்ளேன்” என்று விசித்திரமான காரணத்தைக் கூறியுள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக, துணியாலும் பிளாஸ்டிக்காலும் இறுக்கமாகச் சுற்றப்பட்டு, ஆடைக்குள் அடைக்கப்பட்டிருந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரு ஆமை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. உயிருடன் மீட்கப்பட்ட மற்றொரு ஆமை உடனடியாக புளோரிடா வனவிலங்கு பாதுகாப்பு ஆணையத்திடம் (FWC) பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.