
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள கோஹாட், கம்பாட் பகுதியில் சட்டவிரோத தங்கச் சுரங்கத்திற்கு எதிராக சோதனை நடத்த போலீசார் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். தர்போகாச் ஜலந்தர் பண்டா என்ற இடத்தில் சென்றபோது, சுற்றியிருந்த மலைப்பகுதிகளில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக காவல் துறையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது
இந்த கொடூரத் தாக்குதலில் கம்பாட் பகுதி டி.எஸ்.பி. ஹைதர் ஜமான், சப்-இன்ஸ்பெக்டர் முக்தியார் உட்பட 11 போலீசார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அவர்களின் 5 போலீஸ் வாகனங்களுக்கும் பயங்கரவாதிகள் தீ வைத்தனர். ஆப்கானிஸ்தான் உடனான எல்லை அருகே நடைபெற்ற இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
பிரதமரின் பேரன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு
வெளிநாட்டு பெண்கள் இருவரை கடத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பாகிஸ்தான் துணை பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தாரின் பேரன் ரஸா தார் உட்பட 8 பேர் மீது லாகூர் நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது. நெதர்லாந்தைச் சேர்ந்த ஸ்தெபானி மற்றும் வெனிசுலாவைச் சேர்ந்த ஆஸ்ட்ரிட் ஆகிய இரு பெண்கள், கிரிப்டோகரன்சி தொழில் நிமித்தமாக கடந்த ஜூன் மாதம் பாகிஸ்தான் வந்தனர்.குற்றவியல் வக்கீல் பார்
அப்போது, லாகூரில் உள்ள ஒரு வீட்டில் அவர்களை சிறைபிடித்த ரஸா தார் மற்றும் அவரது கூட்டாளிகள், ஆயுதங்களை காட்டி மிரட்டி 19,500 அமெரிக்க டாலர்களை பறித்ததுடன், கூட்டு பாலியல் வன்கொடுமையிலும் ஈடுபட்டனர். மருத்துவ பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த லாகூர் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி ரஃபாகத் அலி கோண்டல், குற்றம் சாட்டப்பட்ட 8 பேர் மீதும் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தார். இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளை வரும் டிசம்பர் 9-ஆம் தேதி ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, காவல் துறை தாரின் பேரனுக்கு ‘கிளீன் சீட்’ (குற்றமற்றவர்கள் எனச் சான்று) வழங்கி காப்பாற்ற முயன்ற நிலையில், நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது



