
இத்தாலி முழுவதும் உள்ள 6,300க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும் ரோமா, மிலன், வெனிஸ், போலோக்னா மற்றும் நேபிள்ஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள பள்ளிகளில் இருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். நூற்றுக்கணக்கான பள்ளிகளில் வகுப்புகள் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டன. தகவலறிந்து பாதுகாப்பு படையினரும் போலீசாரும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதுகுறித்து பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக ஆலோசனை கூட்டங்களை நடத்தி நிலைமையை ஆய்வுசெய்தனர்.
தீவிர சோதனைக்கு பிறகு, இது ஒரு ‘போலி வெடிகுண்டு மிரட்டல்’ என்பது உறுதிப்படுத்தப்பட்டது. எந்தவிதமான ஆபத்தான பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை என்றும், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இத்தாலியை தவிர, பிரிட்டனின் சில பகுதிகளான ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து போன்ற இடங்களிலும் இதே போன்ற மின்னஞ்சல் மிரட்டல்கள் கல்வி நிலையங்களுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் விசாரணையில் அந்த மின்னஞ்சல், பெண்களுக்கு எதிரான பெயரை கொண்ட, அடையாளம் தெரியாத ஒரு குழுவின் தலைவரிடமிருந்து வந்ததாக கூறப்பட்டதுடன், குறிப்பாக வன்முறையான அச்சுறுத்தல்களையும் கொண்டிருந்தது.



