ஈரானில் மீண்டும் உச்சக்கட்ட பதற்றம் நீரிணையை மீண்டும் திறக்க 7 அதிரடி நிபந்தனைகள்

;

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கும், பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கும் 7 நிபந்தனைகளை அமெரிக்கா முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று ஈரான் அறிவித்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேலின் கூட்டு படைகளின் தாக்குதல்களால் ஈரான் மீது போர் வெடித்தது. இதனால் உலகளாவிய எண்ணெய் வர்த்தகம் மற்றும் கப்பல் போக்குவரத்து நடைபெறும் மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து முடக்கியது. அமெரிக்காவும் ஈரானிய துறைமுகங்கள் மீது கடற்படை முற்றுகையை நடைமுறைப்படுத்தியது. இந்த போரில் வான்வழி தாக்குதல்கள், கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் ராணுவ நிலைகள் மீது பரஸ்பர தாக்குதல்கள் நடந்தன. இதனால் சில வாரங்களுக்கு முன் பாகிஸ்தான் மற்றும் கத்தார் போன்ற நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தற்காலிக போர்நிறுத்தங்கள் மற்றும் இஸ்லாமாபாத் நகரில் நேரடி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

இந்நிலையில் அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் அதிபரின் டிரம்ப் கட்சி தோல்வி அடைந்தது. அப்போது, ‘ஈரானுடனான போர்தான் தோல்விக்கு காரணம்’ என விமர்சனங்கள் எழுந்த நிலையில், ‘இனி ஈரானுடன் போர் இல்லை, போர் முடிவுக்கு வந்துவிட்டது’ என அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைய தொடங்கி உள்ளது.

 

இதுகுறித்து ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாயி ஆகியோர் கூறுகையில், ‘மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக லெபனான் உள்ளிட்ட பிராந்திய முனைகளில் நடைபெற்று வரும் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் தாக்குதல்கள் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும், ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகை மற்றும் கட்டுப்பாடுகள் உடனடியாக விலக்கப்பட வேண்டும், ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள அனைத்து பொருளாதார தடைகளும் நீக்கப்பட்டு, எண்ணெய் வர்த்தகத்திற்கான விலக்குகள் மீண்டும் வழங்கப்படவேண்டும்.

 

வெளிநாடுகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் நிதி மற்றும் சொத்துக்கள் அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும், சமீபத்திய போரினால் ஈரானுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு அமெரிக்கா உரிய இழப்பீடு வழங்க வேண்டும், ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்ற 7 நிபந்தனைகளை அமெரிக்கா நிறைவேற்றும் வரை, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க போவதில்லை, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க போவதில்லை. எங்கள் கோரிக்கைகளுக்கு அதிகாரப்பூர்வமான பதில் கிடைக்கும் வரை காத்திருப்போம். அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டிய பொறுப்பு அமெரிக்காவினுடையது தான்’ எனவும் தெரிவித்தனர். இத்தகைய நிபந்தனைகள் ஏற்கப்பட்டவுடன், நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதைகளை மீண்டும் திறப்பதற்கான 7 நாள் கால அட்டவணை செயல்படுத்தப்படும், எனவும் ஈரான் தெரிவித்துள்ளது.

கத்தார் நாட்டின் மூலமாக இந்த கோரிக்கையையும், நிபந்தனையையும் அமெரிக்காவிடம் ஈரான் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளதாகவும், தற்போது அமெரிக்காவின் பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் மேலும் தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.