ஆந்திராவை சேர்ந்த 16 வயதான சிறுமியை கடத்தி சென்னை, பெங்களூரு மற்றும் திருவனந்தபுரம் கோவளம் ஆகிய இடங்களில் உள்ள ஸ்பாக்களில் வாடிக்கையாளர்களுக்கு விருந்தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோவளத்தில் நூற்றுக்கணக்கான ஸ்பாக்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் இங்குள்ள ஒரு ஸ்பாவுக்கு ஒரு வாலிபர் சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த ஒரு சிறுமி, தன்னை அடைத்து வைத்து பலர் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்வதாக கூறியுள்ளார்.
அந்த வாலிபர் ஸ்பா ஆட்களுக்கு தெரியாமல் அந்த சிறுமியை வெளியே கொண்டு சென்றார். இது குறித்து அறிந்த அந்த ஸ்பா ஊழியர்கள் கோவளம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் அந்த சிறுமியை மீட்டு நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 16 வயது மட்டுமே ஆன அந்த சிறுமியின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் ஆகும். பெற்றோர் இறந்துவிட்டதால் அந்த சிறுமியின் சித்தி தான் இவரை வளர்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் சித்தியும், அவருடைய கணவரும் சேர்ந்து சிறுமியை கடத்தி பெங்களூருவுக்கு கொண்டு வந்து அங்குள்ள ஒரு ஸ்பாவில் பாலியல் தொழிலில் உட்படுத்தினர். இதன்பிறகு சென்னை கூடுவாஞ்சேரிக்கு அழைத்து வந்து அங்கும் ஒரு ஸ்பாவில் பாலியல்தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர்.
இங்கிருந்து திருவனந்தபுரம் கோவளத்திற்கு வந்த இவர்கள், இங்குள்ள ஒரு ஸ்பாவில் அந்த சிறுமியை விற்பனை செய்துவிட்டு ஆந்திராவுக்கு சென்று விட்டனர். இந்த 3 இடங்களிலும் உள்ள ஸ்பாக்களில் வைத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த சிறுமியை கொடூரமாக பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. வழக்கு பதிவு செய்த கோவளம் போலீசார், ஸ்பாவை நடத்தி வந்த நிஷாந்த் மற்றும் சஜித்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், திருவனந்தபுரம் மாநகராட்சியில் இளநிலை சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வரும் அனுரூப் என்பவர் தான் இந்த ஸ்பாவை நடத்தி வருவது தெரியவந்தது.
அவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். கோவளம் ஸ்பாவுக்கு வந்து சென்ற வாடிக்கையாளர்கள் யார் யார் என்பது குறித்து விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போலீசுக்கு கோவளம் போலீசார் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கூடுவாஞ்சேரி போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.



