மியான்மர் ராணுவம் தலைமையகத்தை கைப்பற்றியது

மியான்மரில் புரட்சிப் படையின் கட்டுப்பாட்டில் இருந்த 10 முகாம்கள் உள்பட எதிர்க்கட்சியின் முக்கிய ராணுவக் கட்டுப்பாட்டு தலைமையகத்தை ராணுவம் கைப்பற்றியது. மியான்மர் நாட்டில் கடந்த 2020ம் ஆண்டு நடந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கட்சி (என்எல்டி) அமோக வெற்றி பெற்று, ஆங் சான் சூச்சி பதவியேற்க இருந்த நிலையில், ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.

அதன் பிறகு, ராணுவத்தை எதிர்த்தும், நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை நிலைநிறுத்தவும் பல எதிர்க்கட்சிகள், பாரம்பரிய இனசிறுபான்மையினர் மற்றும் ஆயுதம் ஏந்திய இனக்குழுக்கள் இணைந்து மக்கள் பாதுகாப்புப் படையை (பிடிஎப்) நிறுவின. இது எதிர்க்கட்சியான தேசிய ஒற்றுமை அரசின் அதிகாரப்பூர்வ ராணுவப் பிரிவாகும். மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்தே அங்கு உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது.

அண்மையில், பல்வேறு நகரங்களையும், வர்த்தக எல்லைகளையும், ராணுவ முகாம்களையும் கிளர்ச்சி படை கைப்பற்றியுள்ளது. இதனால் ராணுவம் பல பகுதிகளை இழந்திருந்தது. இந்நிலையில், மியான்மரின் தெற்குப் பகுதியில் உள்ள மொன் மற்றும் பாகோ எல்லைப் பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில், கடந்த வாரம் தொடங்கி ஏறக்குறைய 6 நாட்களாக ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தியது.

இதில், அங்கு செயல்பட்டு வந்த எதிர்க்கட்சியான தேசிய ஒற்றுமை அரசின் 10 முகாம்கள் உள்பட முக்கியமான பிராந்திய கட்டளை தலைமையகத்தை ராணுவம் கைப்பற்றியது. இதன் போது கிளர்ச்சியாளர்களிடம் இருந்து சிறிய ரக துப்பாக்கிகள், வெடிமருந்துகள், வாகனங்கள், டிரோன்கள் மற்றும் கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மை காலமாகப் பல பகுதிகளை எதிர்க்கட்சியினரிடம் இழந்து வந்த மியான்மர் ராணுவத்திற்கு இது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இருப்பினும், பாதுகாப்பு காரணம் கருதி மியான்மர் ராணுவம் பத்திரிகையாளர்களை அப்பகுதிக்குள் அனுமதிக்காததால், இதனை முழுமையாக இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை.