நாளை கொழும்பு துறைமுக நகரில் ட்ரோன் சேவை சோதனை அறிமுகம் !

இலங்கையில் மின்சாரத்தில் இயங்கும், விமானி இல்லாத பயணிகள் ட்ரோன் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் முதலாவது உத்தியோகபூர்வ சோதனை ஓட்டம் நாளை 11 ஆம் திகதி கொழும்பு துறைமுக நகர (Port City Colombo) வளாகத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.புவியியல் காண்

கடந்த ஆகஸ்ட் மாதம், பயணிகள் ட்ரோன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சீனாவின் EHang நிறுவனம், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சில் அமைச்சர் அனுர கருணாதிலக்க, பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு, அமைச்சின் செயலாளர் டபிள்யூ. டபிள்யூ. எஸ். மங்கள உள்ளிட்ட அதிகாரிகளுடனும், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பிரதிநிதிகளுடனும் இது தொடர்பான விசேட கலந்துரையாடலை நடத்தியிருந்தது.

eVTOL எனப்படும் மின்சாரத்தில் இயங்கும் செங்குத்தாக மேலெழுந்து தரையிறங்கும் விமானங்கள் (Electric Vertical Take-Off and Landing) ஓடுபாதை இன்றி மேலெழுந்து தரையிறங்கும் வசதியைக் கொண்டுள்ளன.

இந்தத் தொழில்நுட்பத்தை சுற்றுலாத்துறை, பயணிகள் போக்குவரத்து மற்றும் அவசரகால சேவைகளுக்குப் பயன்படுத்துவது தொடர்பில் குறித்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை, பாதுகாப்பு அமைச்சு, விமானப்படை, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம், முதலீட்டுச் சபை மற்றும் விமான நிலைய அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியுள்ளது.தீவுகள் ஆராயுங்கள்

இந்தத் திட்டம் ஆரம்பத்தில் வணிக ரீதியான சேவையாக அல்லாமல் பரீட்சார்த்த நடவடிக்கையாக முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய, சுமார் ஆறு மாத காலத்திற்கு கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சோதனைகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.புவியியல் காண்

இதற்காக, இருவர் பயணிக்கக்கூடிய E216 ரக பயணிகள் ட்ரோன் ஒன்று அண்மையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த விமானம் 16 உந்துசுழலிகள் (Propellers), 12 மின்கலத் தொகுதிகள், மூன்று விமானக் கட்டுப்பாட்டு அமைப்புகள் (Flight Control Systems) மற்றும் கணினி கட்டுப்பாட்டு முறைமை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இதன் இயக்கம் ஒரு மத்திய கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து தொலைதூரக் கட்டுப்பாட்டு முறையின் ஊடாக மேற்கொள்ளப்படும். இதன்போது, விபத்து அல்லது தொடர்பாடல் கோளாறு ஏற்படும் சந்தர்ப்பங்களில் தானியங்கி முறையில் பாதுகாப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் இந்தத் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவையை அறிமுகப்படுத்துவதன் மூலம் சுற்றுலாத்துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, சிகிரியா, பிதுரங்கல மலைப்பகுதிகள் மற்றும் தீவுப் பகுதிகள் போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு வான்வழியாகப் பயணிகளை அழைத்துச் செல்வதன் மூலம் ‘Aerial Tourism’ எனப்படும் வான்வழிச் சுற்றுலாவுக்கான புதிய சந்தையை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.