துருக்கி இஸ்மீரின் அலியாகா தொழிற்சாலையில் வெடிப்புச் சம்பவம்: 17 தொழிலாளர்கள் உயிரிழப்பு, 12 பேர் காயம்!

துருக்கியின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள துறைமுக நகரமான இஸ்மீரின் அலியாகா பகுதியில் இயங்கி வரும் ஹபாஸ் டெமிர் செலிக் இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவத்தில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளனர்.

பராமரிப்புப் பணிகளின் போது, மாற்று கொதி கலனைச் சுமந்து சென்ற கிரேன் திடீரென சரிந்து விழுந்ததால், அதிலிருந்த பொருட்கள் கீழே இருந்த மின்சார உலைக்குள் விழுந்து இடி மின்னல் போன்ற பெரும் வெடிப்பு சம்பவித்துள்ளதாக ஆளுநர் சுலைமான் எல்பன் தெரிவித்துள்ளார்.

வெடிப்பின் தீவிரத்தால் தரை அதிர்ந்ததாகவும், ஆரம்பத்தில் பூமியதிர்ச்சி ஏற்பட்டுவிட்டதாகவே கருதியதாகவும் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர்.

விபத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தொழிலாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது என துருக்கிய சுகாதார அமைச்சர் கெமால் மெமிசோக்லு உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து 05 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பெரும் தீ மற்றும் புகையால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியதுடன், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.