
விரதம் தொடங்குவதற்கு முன் ஒரு நாள் முழுவதும் லகுவான உணவுகளை மட்டும் உட்கொள்ள வேண்டும். விரதத்தின் போது போதுமான அளவு தண்ணீர், பழச்சாறு, மோர் போன்ற நீர்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். உணவு உண்ணாமல் இருக்கும்போது, கோபம், பொறாமை போன்ற எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும். முழுமையாக தண்ணீர் கூடப் பருகாமல் தீவிர விரதம் இருப்பவர்கள் உண்டு. அப்படி முடியாதவர்கள், கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருப்பது அவசியம்.
கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் மதியம் உச்சி வேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம்.
* யார் இந்த அசுரர்கள்? ஏன் சூரசம்காரம்?
ஆறு நாட்கள் நடைபெற்ற சூரசம்காரத்தின் முடிவில், முருகன் மாமரமாக நின்ற சூரனை தன் சக்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாறவும், சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக் கொண்டார். இது கந்தபுராணத்தில் சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும். கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது.
ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூர சம்காரமாகும். நமக்குள் இருக்கும் காம குரோதங்கள், ராக துவேஷங்கள் (விருப்பு வெறுப்புகள்) மறைய இறைவன் உதவுவான், அடுத்து நம்மை நாமே உணருவோம் என்று நமக்குத் திரும்பத் திரும்ப நினைவூட்டவே இத்தினங்கள்.
* சஷ்டி விரதத்தில் பிறந்தது கந்தசஷ்டி கவசம்
கந்தசஷ்டி கவசத்தை அருளிச் செய்தவர் “ஸ்ரீ தேவராய சுவாமிகள்’’. ஸ்ரீ தேவராய சுவாமிகள் சிறந்த முருகபக்தர். ஒரு சமயம் கடுமையான வயிற்று வலியால் அவர் அவதிப்பட்டார். பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டாலும், அவர் நோய் தீரவில்லை. இனி கடலில் விழுந்து மாள்வோம் என்று நினைத்து திருச்செந்தூர் சென்றார். அங்கே கந்தசஷ்டி விழா நடந்து கொண்டிருந்தது. முருக பக்தரான தேவராய சுவாமிகள் கந்தசஷ்டி விரதம் இருந்து, சூரசம்காரம் முடிந்தவுடன், முருகனின் திருவடியை அடையலாம் என்று முடிவு எடுத்தார்.
* சண்முக கவசம்
பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி இந்த கந்தசஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்தார். அப்படி ஒரு முறை பாராயணம் செய்யும் பொழுது, அவரும் கவிஞர் என்பதால் தானும் முருகன் மீது இப்படி ஒரு கவசத்தை இயற்ற வேண்டும் என்று விரும்பினார். அப்படியே முருகன் மீது ஒரு கவசமும் பாடினார். அந்த கவசம், “சண்முக கவசம்’’. இந்த சண்முக கவசமும் ஆறு கவசங்களை உள்ளடக்கியது.
“அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருள (து) ஆகித்
தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி
எண்திசை போற்ற நின்ற என்அருள் ஈசன் ஆன
திண்திறள் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க’’- என்பது இதில் உள்ள முதல் பாடல்.
இந்தப் பாடலை பிழை இல்லாமல், நம்பிக்கையுடன் தொடர்ந்து படித்து வந்தால், தீராத நோயையும் தீர்க்கக் கூடிய சக்தி படைத்தது. இது மெய், உயிர் இரண்டையும் கவசம் போல் இருந்து காப்பது. கந்தசஷ்டியில் சண்முக கவசமும்.
* முருகனுக்கு மூன்று மயில்கள்
“மயிலாக நான் மாற வேண்டும் – வள்ளி மணவாளன் என் தோளில் இளைப்பாற வேண்டும்’’ என்று ஒரு பாடல் உண்டு. சீர்காழி கோவிந்தராஜன் உருக்கமாகப் பாடிய முருகன் பாடல். முருகனுக்கு மூன்று மயில்கள் உண்டு.
1. மந்திர மயில்.
2. தேவ மயில்
3. அசுர மயில்.
அம்மையப்பனிடம் இருந்து மாங்கனி பெறுவதற்காக உலகைச் சுற்றி வந்தது மந்திரமயில். சூரசம்காரம் செய்யும் பொழுது இந்திரனே மயிலாக வந்தான். அதற்கு தேவமயில் என்று பெயர். சூரபத்மன் மாமரமாக வந்து எதிரிட்டபோது அவனைத் தொலைத்துப் பின் இரண்டாகப் பிளந்து, அதில் ஒரு பகுதியை மயிலாக ஏற்றுக் கொண்டான். .
கந்தசஷ்டியின் போது தினம் அதிகாலை நீராடி திருநீறு அணிந்து பின் பூஜை செய்ய வேண்டும். பாழ் நெற்றியோடு பூஜை செய்யக்கூடாது. திருநீறு பூசும்போது சடாக்ஷர மந்திரம் ஓதி பூச வேண்டும். பழனியில் விபூதி அபிசேகம் சிறப்பாக நடைபெறும். யாத்திரிகர் ஒருவர் பழனியில் திருநீறு பொட்டலம் வாங்கினார் அந்தப் பொட்டலத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்துவிட்டு, ‘‘இது எத்தனை நாள் பயன்படுத்தலாம்? இதற்கு காலாவதி தேதி இருக்கிறதா (Expiry Date)?’’ என்று கேட்டார். அப்பொழுது கடைக்காரர் சொன்னார். ‘‘ஐயா, நமக்குத்தான் காலாவதி தேதி இருக்கிறது. நாம் பூசும் திருநீறுக்கு காலாவதி தேதி கிடையாது. அது நாம் காலாவதியாகாமல் காப்பாற்றும் என்றார்.
* திருமுருகாற்றுப்படை
அறுபடை வீடு கொண்ட திருமுருகனுக்கு முதலில் ஆற்றுப்படை பாடியவர் நக்கீரர். பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை. முருகப் பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட இந்த நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது. ‘ஆற்றுப்படுத்தல்’ என்னும் சொல் ‘வழிப்படுத்தல்’ என்னும் பொருள்படும். ‘‘முருகாற்றுப்படை’’ எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும் என்பது நச்சினார்க்கினியர் கூற்று.
கந்தசஷ்டியின் போது மாலையில் இந்த நூலை பாராயணம் செய்யலாம். அதன் மூலம் ஆறுபடை வீட்டிற்கும் சென்று முருகனை தரிசித்த பேறு நமக்குக் கிடைக்கும். இதன் சிறப்புக் கருதி இந்த நூலினை சைவத் திருமுறைகளுள் 11-ஆம் திருமுறையில் இணைத்து வைத்துள்ளனர். பத்துப்பாட்டு நூல்கள் அனைத்திற்கும் இந்த நூல் காப்புச் செய்யுள் போல் அமைந்து முதல் நூலாக வைத்து எண்ணப்படுகிறது. திருமுருகாற்றுப்படை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் முருகப் பெருமானின் அறுபடைவீடுகள் ஒவ்வொன்றையும் பாராட்டுவனவாக அமைந்துள்ளது. இவற்றுள் முதற்பகுதியில் திருப்பரங்குன்றமும், இரண்டாம் பகுதியில் திருச் செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயும், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் பகுதிகளில் முறையே திரு ஆவினன்குடி (பழநி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல் (திருத்தணி), பழமுதிர்சோலை ஆகிய படைவீடுகளும் பேசப்படுகின்றன.
* திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்
அறுபடை வீடுகளிலும் கந்தசஷ்டி விழா நடைபெற்றாலும், சூரசம்ஹாரம் எனும் நிறைவுப்பகுதி திருச்செந்தூரில்தான் விசேஷமாக நடைபெறுகிறது. அறுபடை வீட்டில் சூர சம்ஹாரம் நடக்காத இடம் திருத்தணிகை. முருகப் பெருமான் சினம் தணிந்து அருளும் இடம் என்பதால், மற்ற தலங்களில் நடப்பது போல கந்தசஷ்டி விழாவின் சூரசம்காரம் இங்கே நடைபெறுவது இல்லை. கந்தசஷ்டி ஐதீக விழாவாகவே இங்கே கொண்டாடப்படுகிறது.
ஆனால் திருச்செந்தூரில் கடற் கரையில் இந்த விழாதான் அதிமுக்கியம். மஹாசூரன், சிங்கமுகன், பானு கோபன், சூரபத்மன் ஆகிய அரக்கர்களின் பெரிய உருவங்கள் கடற்கரையில் நிற்கும். வீரபாகு மற்றும் பால சுப்பிரமணியர் மற்றும் கல்யாண சுப்ரமணியர் ஆகியோரின் திருவுருவங்கள் தனித் தனி தேர்களில் கொண்டு செல்லப்படும்.
சூரபத்மன் என்ற அரக்கனின் முழுப் போரும் இறுதி வீழ்ச்சியும் இயற்றப்படும். இந்த சடங்கு கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நீடிக்கும். பக்தர்கள் அமைதியுடனும், வசதியுடனும் இத்திருவிழாவைக் கண்டு தரிசிப்பார்கள். அன்று கடலே சற்று உள்வாங்குவதோடு சிகப்பு நிறத்தோடு காட்சி தருவதும் உண்டு.
இந்தசூரசம்காரம் முடிந்ததன் செந்தில் ஆண்டவர் எதிரே கண்ணாடி வைத்து கண்ணாடிக்கு அபிஷேகம் நடைபெறும் இதற்கு சாயா அபிஷேகம் என்று பெயர். கந்தசஷ்டி விரதமிருந்து இந்த சூரஸம்ஹார விழாவை நினைத்தாலும், தரிசித்தாலும் நம் அசுர எண்ணங்கள் மாயும். அகம் சிறக்கும்.



