சிலை நிறுவும் விவகாரம் குட்டிமணி, தங்கதுரைக்கு சிலை-சதீஸிடம் 3 மணி நேர விசாரணை

வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உறுப்பினர் கந்தசாமி சதீஸிடம், பயங்கரவாத தடுப்புப் பிரிவு (TID) காவற்துறையினர் யாழ். நகரில் உள்ள தமது அலுவலகத்தில் வைத்து சுமார் மூன்று மணி நேரம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) ஸ்தாபக தலைவர்களான குட்டிமணி மற்றும் தங்கதுரை ஆகியோருக்கு வல்வெட்டித்துறையில் சிலை நிறுவ முயற்சித்த விவகாரம் தொடர்பிலேயே, நேற்றைய தினம் சனிக்கிழமை (07) இரண்டாவது தடவையாக சதீஸிடம் இக் காவற்துறை விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குட்டிமணி மற்றும் தங்கதுரை ஆகியோரின் சிலைகளை நிறுவுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட நிதி எங்கிருந்து பெறப்பட்டது மற்றும் அதற்கான நிதி மூலங்கள் எவை என்பது தொடர்பிலேயே பிரதானமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.

குறித்த விவகாரம் தொடர்பில் ஏற்கனவே வல்வெட்டித்துறை நகர சபை முன்னாள் உறுப்பினர் கந்தசாமி சதீஸின் வீட்டுக்கு நேரடியாகச் சென்ற பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவற்துறையினர் அவரிடம் ஆரம்பகட்ட விசாரணைகளை நடத்தியிருந்தனர். இந்நிலையில், நேற்றைய தினம் யாழ். நகரில் அமைந்துள்ள தமது பிராந்திய அலுவலகத்திற்கு அவரை அழைத்து இரண்டாவது தடவையாக மூன்று மணி நேரம் தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்