
மாத்தறை தெனியாய, பெவரலிய பகுதியில் அமைந்துள்ள ‘கலேதொல’ நீரோடையில் நீராடச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி காணாமல்போன நான்கு இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தனியார் கணினி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஏழு இளைஞர்கள் அடங்கிய குழுவினர் நேற்று (07) தெனியாய, பெவரலிய பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
இதன்போது, அக்குழுவைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள் கலேதொல நீரோடையில் நீராடச் சென்றுள்ளனர். இதன்போது அவர்களில் நான்கு பேர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளனர்.
இதனையடுத்து, கடற்படையினர், பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து காணாமல்போன இளைஞர்களைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது இன்று (08) காலை இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து பிற்பகலில் மேலும் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர் காணாமல்போயிருந்த நான்காவது இளைஞரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
இதன்மூலம், நீரோடையில் நீராடச் சென்ற நிலையில் காணாமல்போன நான்கு இளைஞர்களும் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



