கைது பழிவாங்கல் அல்ல ஊழல் கைதுகள் அரசியல் பழிவாங்கல் அல்ல

:

உண்மையான பொலிஸ் வந்து விட்டதால் திருடர்கள் தற்போது திணறுகிறார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் மோசடி தொடர்பான கோப்புக்கள் எங்கே என்றார்கள். ஆனால் தற்போது கைதுகளை தொடர்ந்து திணறுகிறார்கள். இனி எவரும் கோப்புக்கள் எங்கே என்று கேட்க கூடாது. கைதுகளுக்கு எவ்வித வரையறைகளும் கிடையாது. இது அரசியல் பழிவாங்கலல்ல என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

குருநாகல்-நிகவெரட்டிய பகுதியில் இன்று (11) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

சட்டத்தின் முன் அனைவரும் சமம், எவருக்கும் சட்டத்தில் சிறப்பு சலுகை வழங்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது.சட்டத்தை அனைவருக்கும் பொதுவாக அமுல்படுத்தும் போது கடந்த காலங்களில் சட்டத்துக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்பட்டவர்கள் இன்று அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படுகிறார்கள். சட்டத்தின் ஆட்சிக்கு எதிராகவுள்ளார்கள்.

கடந்த காலங்களில் இருதரப்பின் திருடர்களுடம் ஆட்சி செய்தார்கள்.ஒரு தரப்பு திருடர்கள் ஆட்சி செய்யும் போது பிறிதொரு தரப்பு திருடர்கள் பாதுகாக்கப்பட்டார்கள்,பிற்பட்ட காலத்தில் பாதுகாக்கப்பட்ட திருடர்கள் ஆட்சியில் இருந்த திருடர்களை பாதுகாத்தார்கள். கடந்த காலத்தில் திருடன் – பொலிஸ் விளையாட்டே இடம்பெற்றது.தற்போது உண்மையான பொலிஸ் வந்து விட்டதால் திருடர்கள் திணறுகிறார்கள்.

ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் மோசடி தொடர்பான கோப்புக்கள் எங்கே என்றார்கள்.ஆனால் தற்போது கைதுகளை தொடர்ந்து திணறுகிறார்கள். இனி எவரும் கோப்புக்கள் எங்கே என்று கேட்க கூடாது. கைதுகளுக்கு எவ்வித வரையறைகளும் கிடையாது.

ஊழலை இல்லாதொழித்து, ஊழல்வாதிகளுக்கு தண்டனையளித்தால் மாத்திரமே நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியும். ஊழல்வாதிகளை கைது செய்வது அரசியல் பழிவாங்கலல்ல அது நாட்டை சுத்திரகரிக்கும் ஒரு செயற்பாடு.

2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் சகல மாகாணங்களிலும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் கிளை அலுவலகங்கள் திறக்கப்படும். ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்தால் அரச சேவை விளைத்திறனாகும். மக்கள் பயனடைவார்கள் என்றார்.