வெளிநாட்டு வேலைவாய்ப்பு, விசா மோசடிகள் குறித்து பாராளுமன்றில் சாணக்கியன் கேள்வி

 

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி, விசா மோசடி, மனிதர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் மோசடிகள் மற்றும் மனித கடத்தல் தொடர்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் பொலிஸாரால் பெறப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை, மற்றும் அது தொடர்பில் தொடங்கப்பட்ட விசாரணைகள், இடம்பெற்ற கைதுகள், தொடரப்பட்ட வழக்குகள், தண்டனை வழங்கப்பட்ட வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு? என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சபையில் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற அமர்வில் நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

வெளிநாட்டு வேலைவாய்ப்பு, வேலைக்கான விசா அல்லது ஐரோப்பிய நாடுகளுக்குக் குடிபெயர்வதற்கான வாய்ப்புகள் வழங்குவதாக வாக்குறுதியளித்து,நபர்களிடமிருந்து பெருந்தொகையான பணத்தைப் பெற்று நடத்தப்படும் திட்டமிடப்பட்ட மோசடிகள் குறித்து பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேவையான அனைத்துப் பயண ஆவணங்களுடனும் விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர், சில பாதிக்கப்பட்ட நபர்களின் விசா அல்லது ஏனைய பயண ஆவணங்களுக்கு மேலதிக சரிபார்ப்பு தேவைப்படுவதாகக் கூறி அவர்கள் பயணம் செய்வது தடுக்கப்படுவதாகவும், தூதரகத்திடமிருந்து உறுதிப்படுத்தலைப் பெறுமாறு அறிவுறுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. மேலும், மேலதிக பணத்தைச் செலுத்தும் நபர்கள் அதே அல்லது ஏறக்குறைய ஒத்த பயண ஆவணங்களைப் பயன்படுத்திப் புறப்படப் பின்னர் அனுமதிக்கப்படுவதாகவும், ஆனால் அவ்வாறு பணம் செலுத்த மறுப்பவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு அவர்கள் பாரிய நிதி இழப்புகளுக்கு உள்ளாகிறார்கள் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

பாதிக்கப்பட்ட நபர்கள் முறைப்பாடுகளை அளிக்கும் போது, இலங்கை பொலிஸ்,குற்றப்புலனாய்வுத் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்,இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் என ஒரு பொலிஸ் நிலையத்திலிருந்து மற்றொரு பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது அரச நிறுவனத்திற்கோ மாற்றப்படுகிறார்களே தவிர, எந்தவொரு தனி அதிகாரசபையும் இம்முறைப்பாடுகளை விசாரிக்கும் பொறுப்பை ஏற்பதில்லை என்றும் முறையிடுகின்றனர். இந்த மோசடிகளின் கடுமையான நிதி மற்றும் உளவியல் தாக்கங்கள் காரணமாகச் சிலர் சுய தீங்கு மற்றும் தற்கொலை வரை சென்றுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி,விசா மோசடி, மனிதர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் மோசடிகள் மற்றும் மனித கடத்தல் தொடர்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் பொலிஸாரால் பெறப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை, மற்றும் அது தொடர்பில் தொடங்கப்பட்ட விசாரணைகள், இடம்பெற்ற கைதுகள், தொடரப்பட்ட வழக்குகள், தண்டனை வழங்கப்பட்ட வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு?

இத்தகைய குற்றங்கள் தொடர்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திடமிருந்து இலங்கை பொலிஸாரால் பெறப்பட்ட முறைப்பாடுகள் அல்லது பரிந்துரைகளின் எண்ணிக்கை எவ்வளவு? மேலும், தொடங்கப்பட்ட விசாரணைகள்,செய்யப்பட்ட கைதுகள், தொடரப்பட்ட வழக்குகள், தண்டனை வழங்கப்பட்ட வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை ?

இத்தகைய குற்றங்களுக்கு ஒத்தாசை புரிந்தமை, உதவி செய்தமை,உடந்தையாக இருந்தமை அல்லது அவற்றைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் ஏதேனும் அரச அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட்டுள்ளதா அல்லது வழக்குத் தொடரப்பட்டுள்ளதா?

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி,விசா மோசடி,மனிதர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் மோசடிகள் மற்றும் மனித கடத்தல் தொடர்பான முறைப்பாடுகளைப் பெறுவதற்கும் விசாரிப்பதற்கும் இலங்கை பொலிஸின் எந்தப் பிரிவு பொறுப்பாகும்? மேலும், திறம்பட விசாரணைகள் நடத்தப்படாமல் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு அல்லது பொலிஸ் பிரிவுக்கு மாற்றப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?

இந்த மோசடிகளின் விளைவாக பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலைக்கு முயன்றது அல்லது உயிரிழந்தது தொடர்பான அறிக்கைகளை அரசாங்கம் பதிவு செய்துள்ளதா அல்லது விசாரித்துள்ளதா? அவ்வாறெனின்,அதற்குப் பதிலளிக்கும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? இதில் சம்பந்தப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றவியல் வலையமைப்புகளை ஒழிக்கவும்,மோசடியாகப் பெறப்பட்ட பணத்தை மீட்கவும்,மேலும் இக்குற்றங்கள் நடப்பதைத் தடுக்கவும் பொலிஸாரால் எடுக்கப்பட்டுள்ள மேலதிக நடவடிக்கைகள் யாவை? என்றார்.