தீயவரையும் திருத்தும் .உதவும் குணம்

அடுத்தவர்களுக்கு உதவும் குணம் ஆகியவை, தீயவரையும் திருத்தும் என்பதை விளக்கும் கதை இது. திருடன் – கொள்ளைக்காரன் என்று பிரபலமானவன், வல்லன்! அவன் பெயரைக் கேட்டாலே போதும்; பணக்காரர்களுக்கு எல்லாம் உடம்பு முழுவதும் நடுங்கும். அதே சமயம், வல்லன் பெயரைக் கேட்டால், ஏழைகளுக்கு உள்ளம் துள்ளும். காரணம்? பணக்காரர்களிடம் கொள்ளை அடிப்பதை, ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்துவிடுவான் வல்லன். அதற்காக அரசாங்கம் சும்மாயிருக்குமா? பல வழிகளிலும் முயன்று பார்த்தது. வல்லனைப் பிடிக்க முடியவில்லை. அரசாங்கம் வேறொரு வழியில் இறங்கியது; “வல்லனைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கோ அல்லது வல்லனைப் பற்றித் தகவல் தெரிவிப்பவர்களுக்கோ 25,000 ரூபாய் பரிசளிக்கப் படும்!’’ என்று அறிவிப்புவெளியிட்டது.

காசுக்கு ஆசைப்பட்டு, யாராவது காட்டிக் கொடுக்க மாட்டார் களா? என்பதுதான் அரசாங்கத்தின் எண்ணம். ஆனால் இதுவும் பலிக்கவில்லை. ஒருநாள்… வல்லன் காட்டுப் பகுதியில் அலைந்து திரிந்து கொண்டிருந்தான். வெயில் வேறு! அதன் காரணமாக வல்லனுக்குத் தாகம் எடுத்தது. காட்டில் எங்கு சுற்றியும் தண்ணீர் கிடைக்கவில்லை. அந்த நிலையில், காட்டில் ஒரு மேடையும் அதில் ஒரு சிவலிங்கமும் இருந்ததைக் கண்டான் வல்லன். அப்போது ஒரு பாட்டி, தின்பண்டங்கள் நிறைந்த கூடையுடன், நீர் நிறைந்த பாத்திரமும் சுமந்து கொண்டு மேடையை நெருங்கினாள். அதைப் பார்த்த வல்லன், வேகமாகப் போய்ப் பாட்டியை நெருங்கினான்; “தாயே! யார் நீ? எங்கிருந்து வருகிறாய்? எதற்காக வந்தாய்?’’ எனக்கேட்டான். வல்லனின் வார்த்தைகளைக் கேட்ட பாட்டி, அழத் தொடங்கினாள். அவளைச் சமாதானப்படுத்தினான் வல்லன். சற்று நேரத்தில் சமாதானமான பாட்டி, பேசத் தொடங்கினாள்.

“அப்பா! நான் பக்கத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவள். எனக்கு உன்னைப்போல ஒருமகனும் மருமகளும் இருந்தார்கள். போன வருடம் ஏற்பட்ட கொள்ளை நோயால் அவர்கள் இரண்டு பேரும் இறந்துவிட்டார்கள். ஒரு பெண் குழந்தையை என் பொறுப்பில் விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். என் பேத்தியை நான்தான் வளர்த்துக்கொண்டு வருகிறேன். என் மகன்தான் இந்த மேடையைக் கட்டினான். இந்தச் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, நாள்தோறும் தவறாமல் பூஜை செய்து வந்தான். அவன் இறந்தபின், அவன் ஆசையோடும் பக்தியோடும் செய்துவந்த பூஜையை நான் செய்து வருகிறேன். தினந்தோறும் தண்ணீரும் தின்பண்டங்களும் கொண்டு வந்து, அபிஷேகம் செய்து நிவேதனம் செய்வேன்.

அடுத்த மாதம் என் பேத்தி சம்பாதேவிக்குத் திருமணம் ஏற்பாடு செய்திருக்கிறேன். ஆனால், கையில் ஒரு காசுமில்லை. நான் என்ன செய்வேன்? வழி தேடித்தான் நாள்தோறும் இங்கு வந்து, சிவபெருமானை வேண்டி வருகிறேன். இந்த ஆண்டவன்தான், உதவ வேண்டும்’’ என்று சொல்லி அழுதாள் பாட்டி. பாட்டி சொன்னவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த வல்லனுக்கு மனதை என்னவோ செய்தது; “அம்மா! இந்தத் தண்ணீரை எனக்குக் குடிக்கத் தருவாயா? மிகுந்த தாகமாக இருக்கிறது’’ என வேண்டினான். பாட்டி யோசிக்கவில்லை;

“இந்தா அப்பா! தருகிறேன்.

நீ முதலில் இந்தத் தின்பண்டங்களைச் சாப்பிடு! பிறகு தண்ணீரையும் குடி! நான் அந்தச் சிவபெருமானுக்கே படைத்ததாக நினைத்துக் கொள்கிறேன்’’ என்று சொல்லி, தின்பண்டங்களையும் தண்ணீரையும் வல்லனிடம் தந்தாள், பாட்டி. அவற்றை வாங்கிய வல்லன், தின்பண்டங்களைத் தின்று தண்ணீரைக் குடித்தான். பசியடங்கித் தாகம் தீர்ந்து களைப்பு நீங்கியது. பாட்டியிடம் பேசத் தொடங்கினான். தன்னைப் பற்றிய உண்மைகளையெல்லாம் விரிவாகச் சொல்லி,“அம்மா! கவலைப்படாதே! உன் பேத்தியின் கல்யாணம் நல்ல முறையில் விமரிசையாக நடைபெறும். பணத்தைப் பற்றிக் கவலைப்படாதே! இதோ! இந்தச் சிவபெருமான் நடத்திவைப்பார். கல்யாணத்தன்று நானே நேரில் வந்து, ஐந்து நிமிடங்கள் இருந்து மணமக்களை வாழ்த்திவிட்டு வருவேன். கவலைப்படாமல் போய் வா!’’ என்றான் வல்லன்.

பாட்டிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. ஊரில் உள்ள எல்லோரிடமும் நடந்தவற்றையெல்லாம் சொல்லி மகிழ்ந்தாள். தகவல் அந்த ஊர் மணியக்காரர் காதிலும் விழுந்தது. அவர் உடனே, அரசாங்கம் அறிவித்திருந்த 25,000 ரூபாய் பணத்திற்கு ஆசைப்பட்டு அரசாங்கத்தில் உள்ள மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துவிட்டார்.திருமணத்திற்கு இன்னும் மூன்று நாட்கள்தான் இருந்தன. பாட்டியின் வீட்டுவாசலில் ஐந்து வண்டிகள் வந்து நின்றன.

அவற்றில் சமையலுக்குத் தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகள், ஆடை – அணிகலன்கள், பாத்திரங்கள், தின்பண்டங்கள் முதலானவை நிறைந்திருந்தன. வண்டிகளில் இருந்த பொருட்களையெல்லாம் சிலர் இறக்கிப் பாட்டியின் வீட்டில் வைத்தார்கள். பாட்டி ஆச்சரியப்பட்டாள்; சந்தோஷம் தாங்கவில்லை.

“இந்தப் பொருட்களையெல்லாம் யார் அனுப்பினார்கள்?’’ எனக் கேட்டாள் பாட்டி.

“அம்மா! நாங்கள் வாடகை வண்டிக்காரர்கள். எங்களுக்கு வாடகை முழுவதும் கொடுத்து, உங்கள் வீட்டில் இவற்றையெல்லாம் இறக்கி வைக்கும்படிச் சொன்னார்கள். அவர்கள் யார் என்று எங்களுக்குத் தெரியாது’’ என்று பதில் சொன்னார்கள் வண்டிக்காரர்கள். இந்தத் தகவலும் ஊர் மணியக்காரருக்குத் தெரிந்தது. அவர் உடனே மேலதிகாரிகளுக்குத் தகவல் அனுப்பி,

“இது அந்தக் கொள்ளைக்காரன் வல்லன் வேலைதான். வாக்குத் தவறாமல் அவன் கல்யாணத்திற்கு வருவான். அவனைப் பிடிக்கத் தயாராக இருங்கள்!’’ என்றார். திருமணத்திற்கு முதல்நாள்! ஓர் அதிகாரியின் தலைமையில் முப்பது ராணுவவீரர்கள், வியாபாரிகளைப்போல மாறுவேடம் போட்டுக் கொண்டு ஊருக்கு வந்து சேர்ந்தார்கள்.

ராணுவவீரர்கள் அவ்வாறு மாறுவேடத்தில் வந்து ஊரில் பரவியிருந்தது. ஊர் மக்களுக்குத் தெரிந்தது; வல்லனுக்கும் அவன் ஆட்களுக்கும் தெரிந்தது. கல்யாண நாளன்று வல்லன் புறப்படத் தயாரானான். அவன்கூட இருந்தவர்கள் தடுத்தார்கள்; “போகாதே! அந்தக் கல்யாணத்திற்குப் போனால், உன்னைப் பிடித்துத் தண்டிக்கத் தயாராக இருக்கிறார்கள். நீ போகாதே!’’ என்று தடுத்தார்கள். மறுத்தான் வல்லன்; “என்ன பேசுகிறீர்கள் நீங்கள்? அந்தப் பாட்டியிடம் இருந்து ஒரு பாத்திரம் நீரும் தின்பண்டங்களும் வாங்கிச்சாப்பிட்டு, அந்தப் பாட்டிக்கு நான் கடனாளியாகி விட்டேன். அந்தக் கடனை, வாக்களித்த படிப் போய்த் தீர்த்தாக வேண்டும் நான்’’ என்று சொல்லிவிட்டுக் குதிரை மேலேறிக் கல்யாண வீட்டிற்குச் சென்றான் வல்லன்.

வாக்களித்தபடி சகல செல்வங்களுடன் பாட்டியின் பேத்தி, சம்பாதேவியின் திருமணத்தை விமரிசையாக நடத்தி வைத்தான் வல்லன். அடுத்த விநாடி, யாரிடமும் எதுவும் பேசாமல் வெளியேறி குதிரை மேலேறிப் பறந்தான். மாறு வேடத்தில் இருந்த அதிகாரியும், ராணுவ வீரர்களும் வல்லனைப் பின் தொடர்ந்தார்கள். ராணுவ வீரர்களுக்கும் வல்லனின் ஆட்களுக்கும் கடும்போர் மூண்டது. அந்தச் சண்டையில் மிகுந்த தைரியத்தோடு ஒன்பது பேர்களைச் சுட்டுக்கொன்ற வல்லன், ஓர் ஆழமான கால்வாயில் விழுந்து விட்டான். ராணுவவீரர்களுடன் அதிகாரி, வல்லனைச் சூழ்ந்துகொண்டார். வல்லனின் வாக்குத் தவறாமை, நன்றி மறவாமை, வீரம் ஆகியவை அந்த அதிகாரியின் மனத்தைக் கவர்ந்தன. வல்லனை நோக்கிப்பேசத் தொடங்கினார்.

“வல்லா! வீரன் நீ! நன்றி மறவாதவன்! வாக்கு தவறாதவன்! இனிமேல் கொள்ளை அடிப்பதில்லை என்று நீ வாக்கு தந்தால், மன்னரிடம் சொல்லி எப்படியாவது உனக்கு விடுதலை வாங்கித் தருவேன் நான். உன்னைப் போலவே நானும் வாக்கு தவறாத வீரன். இன்றிலிருந்து நீ எங்களின் உண்மைத் தோழன்!’’ என்றார், ராணுவ அதிகாரி. அவர் வார்த்தைகளைக் கேட்ட வல்லன், அப்போதே திருந்தினான்.

“நானும் என் கூட்டத்தாரும் இனிமேல் கொள்ளையடிக்க மாட்டோம். இது உறுதி’’ என்று சொல்லிச் சரணடைந்தான். அவனைக் கைது செய்து அழைத்துச் சென்றார் அதிகாரி.

சொன்னபடியே அரசாங்கத்திடம் வாதாடி, திருந்திய வல்லனுக்கு, விடுதலை வாங்கித் தந்தார். விடுதலையான வல்லன், தான் செய்து வந்த சட்டத் திற்குப்புறம்பான செயல்களை முற்றிலுமாக நீக்கினான். சாத்வீகமான முறையில் மக்களுக்குச் சேவை செய்வதும், தெய்வத்திடம் பக்தி செலுத்துவதுமே வாழ்க்கை என்பதை உணர்ந்தான். தன் கூட்டத்தைக் கலைத்துவிட்டு, ஹரித்துவாரம் சென்று, பக்தியுடன் தவத்தில் ஈடுபட்டான். அன்போடும் இரக்கத்தோடும் பாட்டி கொடுத்த ஒரு வேளை உணவும், தண்ணீரும் செய்த மாற்றம் அது.