தீபாவளியை முன்னிட்டு புறநகர் பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் மாமூல் வசூலில் ஈடுபட்ட பிரபல ரவுடி சிடி மணியை போலீசார் கைது செய்தனர். அவரது சொகுசு காரில் இருந்து கட்டுக்கட்டாக ரூ.20 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை தேனாம்பேட்டை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் மணிகண்டன்(52). தேனாம்பேட்டை நடைபாதையில் சிடி விற்பனை செய்து வந்த அவர், சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டு ரவுடி திண்டுக்கல் பாண்டியின் மறைவுக்கு பிறகு ரவுடியாக உருவெடுத்தார். சிடி விற்பனை செய்து வந்ததால் இவரை சிடி மணி என்று ரவுடிகள் செல்லமாக அழைத்தனர். இதனால் பிற்காலத்தில் இவர் தனது பெயரை சிடி மணி என்று வைத்துகொண்டார்.
தென் சென்னை பகுதியில் முக்கிய ரவுடியாக உருவான இவர், பிரபல தாதா சம்பவம் ெசந்தில், என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி ராதா, காக்கா தோப்பு பாலாஜி ஆகியோருடன் நெருங்கிய கூட்டாளியானார். இவர் மீது 2012ம் ஆண்டு கோட்டூர்புரம் ஆவி சுரேஷ் கொலை, 2013 ஆண்டு வேலூர் சிலோன் மோகன் கொலை என 10 கொலை, கொலை முயற்சி உட்பட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. திருச்சி ராமஜெயம் கொலை வழக்கிலும் இவர் பின்னணியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 5 முறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர். தமிழகத்தில் உள்ள ரவுகள் பட்டியலில் சிடி மணி ஏ பிளஸ் கேட்டகிரி ரவுடி பட்டியலில் முதல் 3 இடத்தில் உள்ளார்.
ஐடெக் ரவுடியான இவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் விற்பனைக்கு வந்த குண்டு துளைக்காத சொகுசு கார் ஒன்று வாங்கிய முதல் ரவுடிவும் இவர் தான். தென் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில், தொழிற்சாலைகளில் ஸ்கிராப் மொத்தமாக வாங்கும் தொழில் செய்து வருகிறார். இதுதவிர புறநகர் பகுதிகளில் தொழிலதிபர்களை கடத்தி பணம் கேட்டு மிரட்டுதல், கட்டப்பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டி நிலத்தை எழுதி வாங்குவது உள்ளிட்டவை இவர் மீது தற்போதும் குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு போலீசாரின் என்கவுன்டருக்கு பயந்து ரவுடி சிடி மணி தமிழகத்தை விட்டு வெளி மாநிலங்களுக்கு தப்பி ஓடிவிட்டார்.
பிறகு தவெக அரசு தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த பிறகு ரவுடி சிடி மணி வெளிமாநிலத்தில் இருந்து மீண்டும் தமிழகத்திற்கு திரும்பி சேலத்தில் பதுங்கி தனது ரவுடி தொழிலை செய்து வந்தார். இதற்கிடையே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ளி தொழிலதிபர்கள், வியாபாரிகள், ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் மாமூல் வசூலிக்கும் வகையில் கடந்த ஒரு வாரமாக புறநகர் பகுதிகளில் முகாமிட்டிருந்தார். இதுகுறித்து சென்னை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தனிப்படை ஒன்று செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் அருகே ரவுடி சிடி மணி வியாபாரிகளிடம் தீபாவளி மாமூல் வசூலித்து வந்தது உறுதியானது.
அதைதொடர்ந்து 2 நாட்களாக அவரை பின் தொடர்ந்து நேற்று இரவு சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து தீபாவளி பண்டிகைக்கு வசூலித்த பணத்துடன் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வீட்டிற்கு தனது சொகுசு காரில் வந்து கொண்டிருந்த போது, தனிப்படை உதவி ஆய்வாளர் ஜெய்கணேஷ் தலைமையிலான குழுவினர் துப்பாக்கி முனையில் வழிமறித்து கைது செய்தனர். போலீசார் தன்னை சுற்றி வளைத்துவிட்டதை உணர்ந்த ரவுடி சிடி மணி, கைதுக்கு முன்பு தனது செல்போனில் நேரலையில் தன் மீது பொய் வழக்கு பதிந்து கைது செய்துவிட்டதாக வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதைதொடர்ந்து சிடி மணியின் சொகுசு காரை போலீசார் சோதனை செய்த போது, அதில் கட்டுக்கட்டாக தீபாவளி பண்டிகைக்கான மாமூல் வசூலித்த ரூ.20 லட்சம் ரொக்கம் மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ரவுடி சிடி மணியை தனிப்படை போலீசார் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



