மயிலாப்பூர்ரில் ரவுடி வெட்டிக் கொலை-ரீல்ஸ் வெளியிட்ட கொலையாளிகள்

 

காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வீடு திரும்பிய போது, அடையாறு பகுதியில் பட்டப்பகலில் தந்தை கண்முன், மயிலாப்பூர் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சடலத்துடன் ரீல்ஸ் வெளியிட்ட கொலையாளிகளால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாப்பூர் ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மகன் மைத்ரேயன் (21). இவர், மயிலாப்பூர் காவல்நிலைய ‘சி’ கேட்டகிரி சரித்திர பதிவேடு குற்றவாளி. இவரை, சில நாட்களுக்கு முன் மயிலாப்பூர் போலீசார், கஞ்சா வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த 21ம் தேதி சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர், கடந்த 22ம் தேதி முதல் தினமும் காலை 10.30 மணிக்கு மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருந்தார். இவரது வீடு உள்ள ராமகிருஷ்ணபுரத்தில் இவருக்கு எதிரிகள் அதிகமானதால், திருவான்மியூர் மற்றும் ராயபுரத்தில் உள்ள உறவினர் வீடுகளில் மாறி, மாறி தங்கி வந்தார். இந்நிலையில், நேற்று தந்தை வேணுகோபாலுடன் ஆட்டோவில் சென்று, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு, திருவான்மியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு ஆட்டோவில் சென்று கெண்டிருந்தார்.

மதியம் 12 மணி அளவில் அடையாறு இந்திரா நகரில் வாட்டர் டேங்க் அருகே சென்ற போது, 2 பைக்குகளில் வந்த 4 பேர், ஆட்டோவை வழிமறித்து நிறுத்தி, மைத்ரேயனை கீழே இழுத்து போட்டு, அவரது தந்தை முன், சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பினர்.இதை பார்த்து அவரது தந்தை கதறி துடித்தார். தகவலறிந்து வந்த அடையாறு போலீசார், மைத்ரேயன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, வாகன பதிவெண்களை வைத்து, கொலையாளிகளை தேடி வந்தனர். முதற்கட்ட விசாரணையில் கடந்த 2025ம் ஆண்டு மயிலாப்பூர் ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்த ஜீவா என்பவரை வெட்டிய வழக்கில் மைத்ரேயன் முக்கிய குற்றவாளி என்பதால் இருவருக்கும் முன் விரோதம் இருந்தது தெரியவந்தது. அதனால் ஜீவா தலைமையிலான கும்பல் கொலை செய்தது தெரிந்தது. அவர்களை தேடி வந்தனர்.

இதனிடையே, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நேற்று மாலை ஜீவா, அசாருதீன் ஆகிய இருவர் சரணடைந்தனர். அவர்கள் இருவரையும் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த டூமிங் குப்பம் விக்கி (19) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மைத்ரேயனை வெட்டிக் கொன்றதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்த ஜீவா மற்றும் அவரது கூட்டாளிகள், இன்ஸ்டாகிராமில் அதை ரீல் வெளியிட்டதுடன், ஸ்டேட்டஸ் வைத்துள்ளனர். குறிப்பாக, கானா பாடலோடு 302 என கொலை சட்டப்பிரிவை பதிவு செய்து ஸ்டேட்டஸ் வைத்தது தெரியவந்தது.

ஜீவா மற்றும் மைத்ரேயன் ஆகிய இருவருக்கும் இடையே மயிலாப்பூரில் யார் பெரிய ரவுடி என்ற பிரச்னை இருந்து வந்துள்ளது. அப்போது மைத்ரேயன், ஜீவாவை ெகாலை செய்ய ஸ்கெட்ச் போட்டு, ஜீவாவை வெட்டி உள்ளார். அப்போது காயமடைந்த ஜீவா உயிர்தப்பினார். பின்னர், மைத்ரேயனை கொலை செய்ய திட்டமிட்டு வந்த நிலையில், இதற்கிடையே தான் கஞ்சா வழக்கில் மைத்ரேயன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 21ம் தேதி மைத்ரேயன் நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்து, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்ததையும், அவர் தனது வீட்டில் தங்காமல் திருவான்மியூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்ததையும் நோட்டமிட்ட ஜீவா, திட்டமிட்டு தனது கூட்டாளிகளுடன் பின்தொடர்ந்து நேற்று வெட்டி கொன்றது தெரிந்தது.

மைத்ரேயனின் தாய் கூறுகையில், ‘எனது மகன் மைத்ரேயனின் உடலை எங்களுக்கு காண்பிக்கவில்லை. கொலையாளிகள் மீது உரிய நடவடிக்கை வேண்டும். மயிலாப்பூரில் எனது மகனுக்கு முன்விரோதம் உள்ளது என தெரிந்தும் எதற்கு மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திடும்படி போலீசார் உத்தரவிட்டனர். எனது மகன் மயிலாப்பூர் கிங். அவனை கொன்றுவிட்டனர். அவனது இறுதி ஊர்வலத்தை பிரமாண்டமாக நடத்துவேன். இதற்காக, என் சொத்துகளை விற்று ஆடம்பரமாக செய்வேன்,’ என்றார்.

உறவினர்கள் மறியல்

கொலையான மைத்ரேயன் உடல் பிரேத பரிசோதனைக்காக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அங்கு திரண்ட அவரது உறவினர்கள், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, கடும் தண்டனை விதிக்க வேண்டும், எனக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறை பேச்சுவார்த்தைக்கு பின்னர் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.