போதைப் பொருளை உட்கொண்ட ஏர் இந்தியா டெல்லி விமானி பணிநீக்கம்

 

கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி தாய்லாந்தின் புகேட் நகரில் இருந்து ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் 137 பயணிகள், விமானிகள் உட்பட 8 ஊழியர்கள் பயணம் செய்தனர். நடுவானில் விமானம் பறந்தபோது திடீரென 300 அடிக்கு கீழே இறங்கியது. அப்போது விமானம் குலுங்கி நிலை தடுமாறியது. இதில் 13 பயணிகள், 4 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர்.

அவர்களில் 4 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதுகுறித்து விமான விபத்து விசாரணைக் குழு (ஏஏஐபி) விசாரணை நடத்தியது. விமானிகளின் சிறுநீர், ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

இதில் விமானி சுதீப் வசிஷ்டா போதைப் பொருளை உட்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “புகேட் – டெல்லி விமானத்தை இயக்கிய விமானி போதைப் பொருளை உட்கொண்டிருப்பது ஆய்வக சோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்காரணமாக அவர் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார். பயணிகளின் பாதுகாப்பில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.