“என்ன மந்திரம் பண்ணாளோ மாயம் பண்ணாளோ தெரியாது மசக்கைகாரி மாதிரி மயங்கிக் கிடக்கிறான்” என்று சில தாய்மார்கள் தன் மகனை மருமகள் கடத்தியதுபோல பொருமித் தள்ளினால் அங்கு வசியப் பொருத்தம் வலுவாக உள்ளது என்று அர்த்தம். “எங்கயோ கல்யாணத்துல பார்த்துகிட்டாங்களாம். இவன் நம்பர் கேட்டிருக்கான் அவளும் கொடுத்திருக்கா. இப்போ அவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேங்கறான்” என்றால் ராசிகளுக்குள் வசீகரித்துக் கொண்டுவிட்டன என்று பொருள்.
“சாம்பார்ல சுத்தமா உப்பே போடலை எப்படிடா இருக்குன்னு கேட்டா நீ இதுவரைக்கும் இந்த மாதிரி பண்ணதேயில்லைன்னு சொல்றியே” என்று தாயார் சொல்கிற அளவுக்கு நாக்கையும் கண்ணையும் செயலிழக்கச் செய்யும் பொருத்தம்தான் வசியம்.
வசியப் பொருத்தத்தின் மிகப்பெரிய பலமே ஊடலும் கூடலும்தான். “இதோ… இப்போதான் பத்து நிமிஷம் முன்னாடி வரைக்கும் எலியும் பூனையுமா சண்டைபோட்டுட்டு வெளியில போறோம்னு போறாங்களே” என்பதற்குப் பின்னால் வசியம் உள்ளது. “என்னா வசியம் போட்டாளோ” என்று சொல்கிறார்களல்லவா அந்த வசியத்தை யாரும் செய்ய முடியாது. ராசிகளுக்குள் ஏற்படும் ஈர்ப்புதான் அது. காதலிப்பது வரை ஈர்ப்பு இருக்கும். திருமணத்திற்குப் பிறகு எப்படி நாம காதலிச்சோம் என்று நொந்துகொள்வோரின் வேதனைகளுக்குப் பின்னால் வசியப் பொருத்தம் பலமிழந்து கிடக்கும். ஊரே கூடி குற்றவாளி என்றாலும் என் புருஷன் நிரபராதிதான் என்கிற போராட்டத்தின் பின்னால் வசியப் பொருத்தம் இருக்கிறது. “ஏண்டி உன் மாமியார் உன்னை கேவலப்படுத்தறது தெரிஞ்சும் உனக்கு கோவமே வரலையா” என்றால் “நான் அவருக்காக எல்லாத்தையும் சகிச்சுகிட்டிருக்கேன்” என்பார்கள். உறவினர்கள் அல்லது
“என்னோட படிப்பைவிட அவரு குணத்துலயும், மனசுலேயும் பி.எச்.டியே பண்ணியிருக்காரு” என்று பேசவைப்பதெல்லாம் நட்சத்திரங்களுக்கும், ராசிகளுக்கும் பரஸ்பரம் இருக்கும் வசியம்தான்.
“ரெண்டு பேரும் டாக்டருக்கு படிச்சுட்டு கைநிறைய சம்பாதிக்கறாங்க. கலகலப்பா சிரிச்சு பேசி நான் பார்த்ததேயில்லை” என்று யாரேனும் குறைபட்டுக் கொண்டால் அங்கே வசியப் பொருத்தம் குறைகிறது என்று அர்த்தம். காதலுக்கு கண்ணில்லை கழுத்தில்லை என்று சொல்கிற மாதிரி வசியப் பொருத்தம் இருக்கும் தம்பதியரிடையே விட்டுக் கொடுக்கும் போக்கு அளவுக்கு அதிகமாக இருக்கும்.
“எவ்ளோ எக்ஸ்ட்ரா பணம் தரேன்னு சொன்னாலும் ஓவர் டைம் பார்க்க ஒத்துக்க மாட்டேன்றாரு” என்று வீட்டுக்கு ஓடும் கணவன்மார்களின் வேகத்திற்குக் காரணம் கூட வசியப்பொருத்தம்தான்.
“அறுவது வயசாகுது. எங்க போனாலும் வீட்டுக்காரம்மாவை கூட்டிகிட்டு போவாரு…. ரெண்டு நாள் சேர்ந்த மாதிரி அவங்க ஊருக்கு போயிட்டா இவரும் பின்னாடியே போயிடறாரு…” என்பதும் இதுதான். இரண்டு நாள் பிரிவு கூட வெகுநாட்களாக தோன்றும். அருகே வாழ்க்கைத் துணை இல்லையெனில் வெறுமையாக இருக்கும்.
வசியப் பொருத்தம் சரியாக அமையவில்லையெனில், “அந்தம்மா அவரு எங்க போனாலும் கவலைப்பட மாட்டாங்க. வரட்டும்… மெதுவாவே வரட்டும். இங்கு வந்து என்ன பண்ணப் போறாரு. வீட்ல என்னமோ தங்க மாட்டாரு” என்று ஊருக்கு சென்ற கணவரைப் பற்றி அத்தனை கவலை இருக்காது. “இப்போ நாம என்னத்துக்கு சேர்ந்து போயி அந்த கல்யாணத்துல கலந்துக்கணும். உலக மகா ஜோடியா நாம” என்று பேசிக் கொள்வார்கள். இப்படி வாழ்க்கை சென்றால் சலிப்புதான் தட்டும். இந்த சலிப்பு தோன்றாமல் இருப்பதற்குத்தான் வசியப் பொருத்தமே பார்க்கப்படுகிறது. இந்த வசியப் பொருத்தம் நல்லபடி அமைய வேண்டுமென்றாலும், வசியப் பொருத்தமே இல்லாத தம்பதியரும் தரிசிக்க வேண்டிய அற்புதமான தலமே கும்பகோணத்திற்கு அருகேயுள்ள உப்பிலியப்பன் கோயிலாகும்



