
பிரகிருதியான தான், எட்டு நிலைகளாகப் பிரிந்திருப்பதாகச் சொல்லும் கிருஷ்ணன், அவை எல்லாமே தாழ்ந்த சக்திகளே என்கிறார். அப்படியானால், எது உயர்ந்த சக்தி? இந்தத் தாழ்ந்த சக்திகளை பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் உயிரினங்களே, பரம இறைவனின் உயர்ந்த சக்தியாம்! ‘‘தோள்வலிமை மிக்க பராக்கிரமசாலியே, அர்ஜுனா, நான் சொன்ன எட்டும் கீழான பிரகிருதித் தன்மைகளாகும். என்னுடைய மேலான பிரகிருதி நிலை என்று ஒன்று இருக்கிறது. இந்த பூமியே அதனால்தான் தாங்கப்படுகிறது.
‘‘அர்ஜுனனுக்கு தொடர்ந்து உபதேசம் செய்யும் சாக்கில் அவன் மனதுக்குள் அப்போதைக்கு ஒளிந்திருந்த அவனுடைய பேராண்மையை, ‘மஹாபாஹோ (தோள் வலிமை மிக்கவனே)’, ‘தனஞ்சயா (திக்விஜயம் செய்தவனே)’, ‘பரந்தாபா’ (எதிரிகளை நடுநடுங்கச் செய்பவனே), ‘குடகேசா’ (தூக்கத்தை வென்றவனே, புலன்களைக் கட்டுப்படுத்தியவனே, கவனம் பிசகாதவனே), ‘அனகா’ (தூய்மையானவனே) என்றெல்லாம் அவ்வப்போது, குறிப்பிட்டுச் சொல்லி, அவனுடைய மனச்சோர்வைப் போக்க முயற்சிக்கிறார் கிருஷ்ணன். தொடர்ந்து உலகியல் மற்றும் பரமாத்ம இயல் இரண்டையும் விளக்கி அவன் போர் புரிய மன எழுச்சி பெறவும் தன் உபதேசத்தைத் தொடர்கிறார்.
பஞ்ச பூதங்களும் அந்தகரணங்களும் சேர்ந்து உரு பெற்றிருப்பது கீழான பிரகிருதியாகும். உலகியல் பிரக்ஞை என்ற சுய உணர்வு, அதாவது ஜீவபோதம் பெற்றிருப்பது மேலான பிரகிருதி. உதாரணமாக தீ எரிந்தால், அதிலிருந்து புகை எழுகிறது.இந்தப் புகையானது தீயின் கீழான பிரகிருதி. ஆனால் தீயிலிருந்து தெறிக்கும் பொறியானது, அதனுடைய மேலான பிரகிருதி. தீ எரிகிறது என்பதை, வெளியாகும் புகையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
‘நெருப்பின்றி புகையாது’என்ற சொலவடை தீ மற்றும் புகையின் தன்மைகளை விவரிக்கிறது. ஆனால் இந்தப் புகையானது தீயின் ‘தடஸ்த லட்சணம்’ ஆகும். அதாவது ஒரு பொருளை, அல்லது ஏதேனும் தத்துவத்தை வெளிப்படையாக அடையாளம் காட்டக் கூடிய, தற்காலிகமான, புறவயமான ஒரு சமிக்ஞை. தீயின் செயல் புகையில் தெரிகிறது. ஆகவே புகை தீயின் புறவயப் பண்பு என்றால், தீப்பொறி, அதன் சொரூப லட்சணம் ஆகிறது. இந்தப் பொறியை அறிவோமானால் அது தீயை அறிவதற்குச் சமானமாகும்.
சுத்த சைதன்யமாகிய பரமாத்மாவின் இயல்பு, ‘சித் ஆபாசனா’கிய ஜீவனிடத்தில் நிறைந்திருக்கிறது. ஒரு ஜீவன் ஏன் ‘சித் ஆபாசன்‘ என்று சொல்லப் படுகிறது? ‘சித்’ என்பது எங்கும் நிறைந்திருக்கும் தூய அறிவாகும். ‘ஆபாசன்‘ என்றால் பிரதிபலிப்பு அல்லது நிழல் தோற்றம் என்பதாகும். ஒரு பாத்திரத்தில் நீர் நிரம்பியிருக்கிறது. சூரிய ஒளியால் அந்த நீரில் சூரியனின் பிம்பம் – பிரதிபலிப்பு – தெரிகிறது. இதைப்போல தூய உணர்வாகிய ‘சித்’ என்ற ஒளி, நம்முடைய மனம், புத்தி மீது விழும்போது உண்டாகும் பிரதிபலிப்புதான் ‘சித் ஆபாசன்’ ஆகும். அவ்வாறு அறிவு பிரதிபலிக்கப் படும்போதுதான், ‘நான்’, ‘எனது’ என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறோம் நாம்.
மேலே சொன்ன தீ உதாரணத்தில், தீப்பொறியானது தீயை விட்டுச் சற்று பிரிந்திருக்கிறது; ஆனால் ஜீவனோ பரமாத்மாவை விட்டுப் பிரிவதில்லை – கடலில் அலைபோல – மேலான பிரகிருதியாக! இந்த வகையில், உலகத்தில் உள்ள அனைத்துப் பொருட்களிலும் இறைவனின் உயர்வான சக்தியை தரிசிக்கிறான், ஞானி.
என் நண்பர் ஒருவர், தன் வீட்டில் குழாய் பழுதுகள் சிலவற்றை சீர் செய்ய ப்ளம்பரை அழைத்தார். பழுதுகளைப் பரிசீலனை செய்த ப்ளம்பர், வாங்க வேண்டிய பொருட்கள், தன் சேவைக் கட்டணம் என்று மிகப் பெரிய தொகை ஒன்றை நண்பரிடம் தெரிவித்தார். அதைக் கேட்டு அதிர்ந்த நண்பர், எவ்வளவோ பேரம் பேசிப் பார்த்தார். ஆனால் ப்ளம்பர் மசியவில்லை. அவரைக் கூப்பிட்டாயிற்று; பழுதுகள் சீர் செய்யப்படவில்லை என்றால் பாதிப்பு தன் குடும்பத்தாருக்குதான்; இவருக்கு பதிலாக இன்னொருவரை க் கூப்பிடலாம் என்றால் அவர் வரும்வரை பழுதுகள் மேலும் மோசமாகாமல் இருக்க வேண்டும்.
என்ன செய்ய? இவரிடமே பழுது நீக்கும் பொறுப்பை ஒப்படைத்துவிட வேண்டியதுதான். தான் அதிகத் தொகை கொடுத்து ஏமாறுவது நண்பருக்குப் புரிகிறது, ஆனால் வேறு வழியில்லை. இச்சமயத்தில், இவர் ஒரு ஞானியாக, ‘பிறரை ஏமாற்றித்தான் பிழைக்க வேண்டும் என்று அந்த ப்ளம்பர் போன்ற சிலரை இறைவன் படைத்திருக்கிறான்; அதேபோல ஏமாந்துதான் வாழவேண்டும் என்றும் என்னைப் போன்ற சிலருக்கு விதித்திருக்கிறான்!’ என்று சொல்லிக் கொண்டு, தன்னை சமாதானப் படுத்திக் கொண்டார்!
எங்கும், எதிலும் இறைத்தன்மை நிலவுவதுதான் பரம்பொருளின் கருணை என்பதைப் புரிந்து கொண்டவன், ஞானி! அதாவது ஒரு எறும்பு முதல் சூரியன், சந்திரன் ஆகிய விண் அதிசயங்கள்வரை எல்லாவற்றிலும் இறைவனின் ‘ஜீவபூதாம்’ என்ற உயிர்ச் சக்தியே நிலவுகிறது என்ற பேருண்மை. இந்த தெய்வீகப் பார்வை மூலமாக, அவன் என்றேனும் ஒருநாள் முற்றிலுமாக இறைவனுடன் இரண்டறக் கலக்கிறான்.
‘‘அர்ஜுனா, அனைத்து உயிர்களும் இவ்விரண்டு பிரகிருதிகளிலிருந்து உண்டானவை என்பதை அறிவாயாக. அதோடு, இந்த பிரபஞ்சம் முழுமையும் தோன்றவும், ஒடுங்கவும் நானே காரணம் என்பதையும் புரிந்து கொள்.‘‘ஒரு ஞானியின் சுபாவமாக, கடவுளை உணர்தல் என்பது, அனைவருக்குமே நிகழக்கூடிய அனுபவமாக அமைய வாய்ப்பு இருக்கிறது!
இந்த உரையாடலைப் பார்ப்போம்:
‘‘கடவுள் உன்னுடனேயே இருக்கிறார்.’’
‘‘நான் விழித்திருக்கும்போது, நடக்கும்போது, பேசும்போது, ஏன் உறங்கும்போதுகூட கடவுள் என்னுடனேயே இருக்கிறாரா?’’
‘‘ஆமாம், நிச்சயமாக இருக்கிறார். உன்னுடைய ஒவ்வொரு செய்கையின்போதும் கூடவே, உன்னுடனேயே இருக்கிறார். இந்த உண்மையை உணர, நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். கண், காது, மூக்கு, கை, கால் ஆகிய வெளியே தெரியும் உறுப்புகளின் இயக்கத்தை நம்மால் உணர முடிகிறது. ஆனால் உடலுக்குள் மூளை, இதயம், கல்லீரல், குடல், சிறுநீரகம் இவையும் இயங்குகின்றனவே, இவற்றின் இயக்கங்களை நீயா கட்டுப்படுத்துகிறாய்? யார் ஆணைப்படி அவை இயங்குகின்றன?
‘‘அதுதானே, யார் ஆணை அது?’’
‘‘சரி, ஒரு தம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரையைப் போட்டுக் கலக்கு. இப்போது நீரில், சர்க்கரை தனியே தெரிகிறதா?’’ ‘‘இல்லையே, சர்க்கரை கரைந்து விட்டதே, காணோமே!’’‘‘நீதானே கலக்கினாய், இப்போது காணோம் என்கிறாயே? சரி, இந்த நீர்க் கரைசலில் மேல் பகுதியிலிருந்து சிறிதளவு நீர் எடுத்துக் குடி. எப்படியிருக்கிறது?’’‘‘இனிப்பாக இருக்கிறது.’’
‘‘நடுவிலிருந்து எடுத்துக் குடி. இப்போது எப்படி இருக்கிறது?’’
‘‘இனிப்பாகத்தான் இருக்கிறது.’’
‘‘அடியிலிருந்து எடுத்துக் குடித்தால்?’’
‘‘இப்போதும் அதே இனிப்புதான்.’’
‘‘நீரில் நீ கரைத்த சர்க்கரையை உன்னால் காண முடியவில்லை. ஆனால், அந்தக் கரைசலில் எந்தப் பகுதியும் இனிப்பாகத்தான் இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத சர்க்கரையை இனிப்பாக உணர்வதுதான் கடவுளை அறிதல். அவர் உனக்கு வெளியே இருக்கிறார்; உனக்குள் இருக்கிறார்; உன்னுடனேயே இருக்கிறார்.
‘‘இறந்துவிட்ட தன் தந்தையைப் பார்த்து, ‘இதுவரை என்னுடன் தந்தையாக இருந்தவர் இப்போது இறந்து கிடக்கும் இந்த உடலா அல்லது வேறு ஏதாவதா? இவர் நடமாடிக்கொண்டிருந்தபோது நான் இவரை ‘அப்பா’ என்றழைத்தேன். அப்போது என் அழைப்புக்கு பதில் சொன்னவர் இப்போது மௌனமாக இருக்கிறார் என்பதால் இவர் அப்பா இல்லை என்றாகிவிடுமா?’ என்று ரமண மகரிஷி யோசிக்க ஆரம்பித்தார்.
அப்போதுதான் உறவுகளும், நட்புகளும், உடல் உயிருடன் இருக்கும்வரையிலான உணர்வுகள்தான் என்பதையும், உடல் என்பது ஆத்மா சில நாட்கள் வாடகைக்கு இருக்கும் கூடுதான் என்பதையும் அவர் புரிந்துகொண்டார். கடவுளும் அப்படி உணரப்பட வேண்டியவர்தான்.’’‘‘கண்ணுக்குத் தெரியாத காற்றில் கொடி அசைவது மாதிரி.’’‘‘கொடி அசைவது இருக்கட்டும், உன் இயக்கமே அந்தக் காற்றைப் பொறுத்துதான் இருக்கிறது. அதில் பிராணவாயு இல்லையென்றால், உன் உடலில் பிராணன் இருக்காது. இந்தக் காற்றை உனக்காக அனுப்புபவர் யார்? இதோ இந்தப் பழத்தை எடுத்து நறுக்கி உள்ளே இருக்கும் கொட்டையை உடைத்துப்பார். உள்ளே என்ன இருக்கிறது?’’‘‘ஒன்றுமில்லை.’’
‘‘உள்ளீடு ஏதுமில்லாத இதுபோன்ற ஒரு கொட்டைதான் மிகப் பெரிய மரம் ஒன்று உயர்ந்தோங்கி வளர ஆதாரமாக இருக்கிறது. இப்படி இல்லாததிலிருந்து எல்லாமும் எப்படி உருவாகின்றன? இதுதானே இறை சக்தி?’’‘‘உண்மைதான். கடவுளை உணர்வதே ஒரு சுகம்தான்.’’இந்த உலகமும், அதன் நிகழ்வுகளும், அந்த நிகழ்வுகளில் இடம் பெறுவோரும் ஒரு மணிமாலையைப் போல என்று வைத்துக் கொள்ளலாம். அதாவது அந்த மாலையில் கோக்கப்பட்டுள்ள மணிகள் ஒளிவீசுவதை நம்மால் காண முடிகிறது. அதுபோல நம் அனுபவங்களை நம்மால் அந்தந்த சந்தர்ப்ப, மற்றும் உணர்வு நிலைகளுக்கேற்ப அறிய முடிகிறது; அததற்கு ஏற்ப ரியாக்ட் செய்ய முடிகிறது. இந்த எதிர்வினையாற்றுதலில் நம்முடைய லௌகீக சந்தோஷத்துக்கும் இடமிருக்கிறது; சங்கடத்துக்கும் வாய்ப்பு இருக்கிறது.
இருக்கட்டும். அந்த மணிகள் மாலையிலிருந்து பிரிந்து விடாதபடி கோக்கப்பட்டுள்ளன. கோத்திருப்பது எது? கயிறு. அந்தக் கயிறு வெளியே தெரிவதில்லை. ஆனால் சிதறிப் போகாதபடி மணிகளைக் கட்டுக்கோப்பில் வைத்துக் கொண்டிருக்கிறது கயிறு. மணிகளும் உற்சாகமாக ஒளி வீசிக் கொண்டிருக்கின்றன. மரத்தில் இலைகள் பச்சையாகத் தம் இருப்பைத் தெரிவிக்கின்றன; முதிர்ந்தால், பழுப்பு நிறத்திற்கு மாறுவதோடு, உதிர்ந்தும் தன்னை அடையாளப் படுத்திக் கொள்கின்றன.
கிளைகளும் அப்படியே. அதில் பூக்கும் மலர்கள், காய்க்கும் காய்கள் மற்றும் கனிகளும் அவ்வாறே. ஆனால் இந்தத் தோற்றங்களுக்கெல்லாம் ஆதாரம் எது? அது, தன்னைக் கொஞ்சமும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் பூமிக்கு அடியிலேயே மறைந்திருக்கிறது – வேர்! மிகக் கடுமையான, தண்ணீர்ப் பஞ்சம் மிகுந்த கோடை காலத்திலும், மரம் இலையாய் துளிர்ப்பதும், மலராய் மலர்வதும், காயாகவும், கனியாகவும் முதிர்வதும் எவ்வாறு சாத்தியமாகிறது? வேர் பூமிக்கடியில் தண்ணீரைத் தேடுகிறது. கொஞ்ச நஞ்ச ஈரப்பசையையும் உறிஞ்சிக் கொண்டு, ஒட்டு மொத்த மரமும் நிலைத்திருக்கப் பாடுபடுகிறது.
இலைகளை, பூக்களை, காய்களை, கனிகளை, கிளைகளை தனித்தனியே வெட்டி விடலாம், ஆனால் மரம் வீழாது. அது மேலும் புத்துணர்வுடன் புது இலை, மலர், காய், கனி, கிளை என்று உருவாக்கிக் கொண்டேதான் இருக்கும். இதுதான் தெய்வீகம். ஆனால் அந்த வேரையே வெட்டி எறிந்து விட்டால்? மொத்த மரமும் அப்படியே வீழ்ந்து விடும். மீண்டும் முளைக்காது!



