சிங்கள பௌத்த சமூகத்துக்குள் பிளவை ஏற்படுத்தியுள்ளது ஞானசார தேரரின் பிரச்சினை –

 

 

ஞானசார தேரரின் பிரச்சினை தற்போது பெரும்பான்மையான சிங்கள பௌத்த சமூகத்துக்குள் பிளவை ஏற்படுத்தியுள்ளதுடன், அரசாங்கத்திற்கு எதிராக பாரிய எதிர்ப்பும் உருவாகி வருவதாகவும், இந்த நிலை நாட்டின் அமைதிக்கும் முன்னேற்றத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(22) வியாழக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.பயண வழிகாட்டி

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

ஞானசார தேரரின் பிரச்சினை அரசாங்கத்தினால் தீர்க்கக்கூடிய பிரச்சினையாகும். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கியிருந்த நிலையில், அந்த மன்னிப்பு வழங்கும் செயற்பாட்டில் ஏற்பட்ட குறைபாடு காரணமாகவே ஞானசார தேரர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த நடைமுறை குறைபாட்டை தற்போதைய ஜனாதிபதியால் மிகவும் இலகுவாக சரிசெய்ய முடியும்.அரசுச் செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஞானசார தேரரை விடுதலை செய்யும் நோக்கம் இருந்தது. தற்போதைய ஜனாதிபதியின் நோக்கமும் ஞானசார தேரரை விடுதலை செய்வதாக இருந்தால், மன்னிப்பு வழங்கும் நடைமுறையில் ஏற்பட்ட குறைபாட்டை சரிசெய்து அவரை விடுதலை செய்ய முடியும். அவ்வாறு செய்யப்படாமல் இருப்பதற்கு ஞானசார தேரரை தொடர்ந்து சிறையில் வைத்திருக்கும் நோக்கம் உள்ளதா என்ற கேள்வி எழுகின்றது.

இது ஒரு சாதாரண பிரச்சினை அல்ல. ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி தற்போது தேரர்கள் நடைபயணங்களை மேற்கொண்டு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஞானசார தேரரின் காவி உடை தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக ஞானசார தேரரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கோரிக்கை நியாயமானதாகும்.

இதேவேளை, பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக தண்டனை பெற்ற முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மற்றும் ரஞ்சன் ராமநாயக்க உள்ளிட்ட பல்வேறு நபர்கள் தற்போது சுதந்திரமாக வெளியில் இருக்கின்றனர். அவ்வாறிருக்கையில் ஞானசார தேரர் மாத்திரம் சிறையில் இருப்பதில் எந்தவிதமான நியாயமும் இல்லை.

இந்தப் பிரச்சினை தற்போது சிங்கள பௌத்த சமூகத்தின் பெரும்பகுதிக்குள் பிளவை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக பாரிய வெறுப்பும் எதிர்ப்பும் உருவாகி வருகின்றன. அதேவேளை, அரசாங்கத்துக்கு ஆதரவான தரப்பினரைப் பயன்படுத்தி போராட்டங்களுக்கு பதிலளிக்கும் நிலை உருவாகியுள்ளது.

ஒருபுறம் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்கள் இடம்பெறுகின்ற நிலையில், அரசாங்கத்துக்கு ஆதரவான தரப்பினரும் அதற்கு பதிலளிக்கும் வகையில் செயற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பெரும்பான்மை சமூகத்தை இரண்டாகப் பிரித்து மோதல் நிலையை உருவாக்குவதற்கான முயற்சி இடம்பெறுகிறதா என்ற பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஒரு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு சமூகத்தில் அமைதி நிலவ வேண்டும். நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்றால் மக்கள் அமைதியாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டும். பணியிடங்களிலும் சுதந்திரமான சூழல் இருக்க வேண்டும். ஆனால், சமூகத்தில் உருவாகும் பிரச்சினைகளை மோதல்களாக மாற்றி, அவற்றை பாரிய நெருக்கடிகளாக மாற்றினால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது.

இந்த நிலை தொடர்ந்தால் மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்கக்கூடும். அவ்வாறு மக்கள் நம்பிக்கையை இழந்தால் அரசாங்கத்தினாலும் முன்னோக்கிச் செல்ல முடியாது; நாட்டையும் முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. எனவே, ஜனாதிபதி இந்த விடயத்தை நிதானமாக ஆராய்ந்து, ஞானசார தேரர் தொடர்பான பிரச்சினைக்கு விரைவில் முடிவு காண வேண்டும்அரசுச் செய்திகள்

இந்தப் பிரச்சினையை தொடர்ச்சியாக நீடிக்க விடுவது நாட்டுக்கும் அரசாங்கத்துக்கும் நல்லதல்ல. எனவே, ஞானசார தேரருக்கு விடுதலை வழங்கி, இதன் காரணமாக உருவாகியுள்ள மோதல் மற்றும் பிரச்சினையை உரிய முறையில் நிர்வகித்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.